அண்மைய செய்திகள்

recent
-

இனத்தை காப்பாற்றுவதா... மொழியை காப்பாற்றுவதா? இன்று தாய்மொழி தினம்


ஒரு இனத்தை அழிக்க வேண்டுமானால் அதன் மொழியை முதலில் அழிக்க வேண்டும்.
ஒரு மொழியை அழிக்க வேண்டுமானால், அந்த மொழிக்கான மொழி மனிதர்கள் ஒருவரோடு ஒருவர் கலப்பதற்கான ஒரு அரிய நூல்களை அழிக்க வேண்டும் என்ற வாசகம் வரலாற்று ராஜதந்திரங்களிலே காணப்படுகிறது.

தமிழில் எண்ணற்ற ஓலைச்சுவடிகள் மொழி ஆதிக்கத்தின் காரணமாக பழங்காலத்தில் அழிக்கப்பட்டுள்ளதாக வரலாறுகள் கூறுகின்றன.



மொழி அழிய காரணங்கள்

அழியும் நிலையில் உள்ள மொழிகள் என்று அவ்வப்போது சில மொழிகளின் பட்டியல் அநுமானங்களின் அடிப்படையில் வெளியிடப்படுகிறது.

நூற்றுக்கணக்கான மொழிகள் அழிந்தும் இருக்கின்றன. ஆனால், அது எந்த மொழியின் வளர்ச்சிக்கும் பயன்பட்டதில்லை.

மகாகவி பாரதியின் கவலை

தன் காலத்தில் ஆங்கிலேய ஆதிக்கத்தை பார்த்த, மகாகவி பாரதியார் ஒரு பாடலில் “மெல்ல தமிழ் இனி சாகும் என ஒரு பேதை கூறுகிறான்” என்று தனது கலக்கத்தை வெளிப்படுத்தினார்.

அதை தடுப்பதற்கான வழிமுறையாக, “எட்டுத் திக்கும் செல்வோம் கலை செல்வங்கள் யாவும் கொணர்ந்து இங்கு சேர்ப்போம்!” என்று தமிழில் முதல்தர படைப்புகளும் மொழிபெயர்ப்பு நூல்களும் உருவாக்கப்பட வேண்டும் என்ற சிந்தனையை தமிழ் மக்களுக்கு விட்டுச் சென்றார்.

எழுத்துவடிவம் இல்லாத பேச்சு மொழிகள்கூட, காற்றலைகளில் வாழ்ந்து ஒரு இனத்தின் கலாசாரத்தை காக்கிறது.

ஒரு தேசமானாலும் இந்த உலகமானாலும் ஒரிரு மொழிகள் போதும் என நினைப்பது, அனைத்து மலர்களிலுமே ஒரு படைப்பு நூதனம் இருப்பதை அனுபவிக்கவோ ஏற்றுக்கொள்ளவோ மறுப்பதாகும்.

தாய்மொழிக் கல்வியே தரம்

தாய்ப்பாலையே புறக்கணித்து வளரும் தலைமுறைக்கு தாய்மொழிக் கல்வியின் அருமை எப்படி தெரியவரும்?

வெளிநாட்டு வேலைகளுக்காகவும், அதிக பயன்பாடு உள்ளதாகவும் நினைத்து ஆங்கிலம் போன்ற சில மொழிவழிக் கல்வியில் மட்டுமே படிப்பவர்கள், தங்களுக்கு தேவையான இலக்குகளை அடைந்தாலும் அடிப்படை ஞானம் குறைந்தவர்களாக வாழ்கின்றனர்.

தமிழ் மண்ணில் பிறந்த குழந்தைக்கு ’பச்சை’ என சொன்னதும் பசுமையான வயல்வெளிகள் மனக்கண்ணில் தோன்றுவதுபோல ‘கிரீன்’ என்று சொல்லும்போது ஏற்படாது.

உதாரணத்திற்கு நம் தாய்மொழியில் அருவருப்பான, ஆபாசமான வார்த்தைகளை பேசவும் கேட்கவும் பொது இடத்தில் அச்சப்படுகிறோம்.

அதே பொருள் உள்ள அயல்மொழி வார்த்தைக்கு முகம் சுழிப்பதில்லை. இதற்கு காரணம் நம் தாய்மொழியின் அன்யோன்யம்தான் அவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

தாய்மொழியில் சிந்திப்பது வலிமையுடையது. அயல்மொழியில் புலமையிருந்தாலும் அது மேம்போக்கானதே. தாய்மொழியில் கல்லாதது ஒருவித சிந்தனை ஊனமே.

பாரம்பரிய பாதுகாப்பு

ஒரு நாடு என்பது ஆட்சி மற்றும் நிர்வாக எல்லையை குறிக்கிறது. ஒரு நாட்டில் பல மதத்தினர், மொழியினர் வாழ்வதால் ஒரு நாடு பல இனத்தவர்களுக்கு பூர்வீகமாக இருக்கலாமே தவிர, தனி ஒரு இனத்துக்கு மட்டும் பாரம்பரியமாக இருப்பதில்லை.

மதம் ஒரு வாழ்க்கைமுறை கோட்பாடுதான். எந்த காலகட்டத்திலும் மாற்றிக்கொள்ள முடிவதுதான். அதனால், மதமும் பாரம்பரியமாகாது.

ஜாதி ஒரு சதி, மூடநம்பிக்கை என்று சொல்வதை கொள்கையாக பார்த்தாலும், ஜாதி ஒரு தொழிலை மையப்படுத்தி ஏற்பட்டதாக உள்ளது.

அதில் உயர்வு தாழ்வுகள் வேறு, அதுவும் இந்தியாவை தவிர மற்ற நாடுகளில் அப்படி ஒரு இன பாகுபாடு பெரிதாக தெரியவில்லை.

ஜாதி உருவான காலத்தில் ஒருசில தொழில்கள் மட்டுமே இருந்தது. காலத்திற்கேற்ப தொழில்கள் பெருகுவது, மக்கள் புதியபுதிய தொழில்களில் ஈடுபடுவது ஜாதியையும் பாரம்பரியத்துக்கு தகுதியிழப்பு செய்கிறது.

எந்த நாட்டில் வாழ்ந்தாலும் எந்த மதத்தை தழுவினாலும் எத்தனை மொழிகள் கற்றாலும் தாய்மொழி மட்டுமே ஒரு மனிதனின் பாரம்பரியமாக விளங்குகிறது.

கணனி கப்பலில் மொழிகள் ஏறட்டும்

கணனியை பயன்படுத்தும் எல்லோருடைய தாய்மொழியும் அதில் மென்பொருள் பதிவுசெய்யப்பட சர்வதேச அமைப்பு ஊக்கமளிக்க வேண்டும்.

இந்த கணனியுக ஆரம்பத்தில், கணனி மென்பொருள் வளர்ச்சியில் எந்த மொழி பங்கெடுக்கவில்லையோ அது வீழ்ச்சியடையும். ஆங்கிலம் போல கணனியில் தமிழ் வலம்வர முடியுமா? என்று தமிழ் சான்றோர்கள் வேதனைகுரல் எழுப்பியது இன்னும் நம் காதுகளில் ஒலிக்கிறது.

ஆனால், கணனி பிரளயத்தையும் முன்னேற்ற படிகளாக்கி தமிழ் வாழ்கிறது.

தாய்மொழி தினம்

எல்லோருடைய மொழிகளையும் பாதுகாக்க சர்வதேச அமைப்பு பிப்ரவரி 21 ம் திகதி தாய்மொழி தினத்தை கொண்டாடுகிறது.

பங்களாதேஷில் உள்ள தாகா மருத்துவக் கல்லூரியில் 1952 பிப்ரவரி 21 ல் மாணவர்கள் தாய்மொழியின் அவசியத்தை வலியுறுத்தி நடத்திய போராட்டத்தில் சுட்டுக்கொல்லப்பட்டதன் நினைவாகவே இந்த நாள் பெருமைப்படுத்தப்பட்டுள்ளது.

மொழிகளில் சிறந்தது சிறியது இருக்கலாம் மனது வைத்தால் சகல மொழிகளையும் சமமும் ஆக்கலாம். நாம் சமமாக்க வேண்டாம் வெவ்வேறு வேர்களாக பாதுகாக்கலாம்.

மொழிதான் கடந்தகால உலகத்தை நம் கைகளில் தந்துள்ளது. நமது உலகை வருங்கால சந்ததிகளிடமும் சேர்க்க உள்ளது.


இனத்தை காப்பாற்றுவதா... மொழியை காப்பாற்றுவதா? இன்று தாய்மொழி தினம் Reviewed by Author on February 22, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.