நம்பகரமான விசாரணையை வலியுறுத்தியுள்ள சாட்சியங்கள்!
காணாமல் போனோர் தொடர்பாக விசாரணை நடத்தும் மெக்ஸ்வல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வுகளில் அதிகமான பாதிக்கப்பட்ட மக்கள் பல்வேறு வகையான திடுக்கிடும் சாட்சியங்களை அளித்து வருகின்றனர்.
குறிப்பாக யுத்தகாலத்தில் காணாமல் போனோர் தொடர்பிலும் அவர்கள் யாரிடம் ஒப்படைக்கப்பட்டனர் என்பது குறித்தும் தகவல்கள் சாட்சியங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன.
விசேடமாக யுத்தகாலத்தில் மேற்கொள்ளப்பட்ட வான் தாக்குதல்களில் பொதுமக்கள் பலியாகினர் என்பது குறித்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள் இந்த சாட்சியங்களில் வெளியிடப்பட்டுள்ளமை மிகவும் முக்கியமானதாகும்.
யுத்தகாலத்தில் பொதுமக்களை இலக்குவைத்து எவ்விதமான இராணுவ நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லையென அரசாங்கம் தொடர்ச்சியாக கூறிவருகிறது. இந்நிலையில் ஆணைக்குழுவின் முன்னிலையில் பொதுமக்கள் வழங்கும் சாட்சியங்களைப் பார்க்கும் போது யுத்தகாலத்தில் பாரிய அசம்பாவிதங்கள் இடம்பெற்றிருக்கும் என்ற அச்சம் ஏற்படுகின்றது.
குறிப்பாக நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் வேலணை பிரதேச செயலகத்தில் காணாமல் போனோர் குறித்து விசாரணை நடத்தும் ஆணைக்குழுவினர் நடத்திய அமர்வில் கலந்து கொண்டு சாட்சியமளித்த பொதுமக்கள் யுத்தகாலத்தில் நடத்தப்பட்ட வான் தாக்குதல்களில் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தெரிவித்திருந்தனர்.
அதாவது இறுதி யுத்தத்தின் போது மக்கள் நிறைந்திருந்த பகுதிகளை இலக்கு வைத்து இராணுவத்தினரால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட கண்மூடித்தனமான கிபீர் குண்டுத் தாக்குதலில் 500 க்கும் அதிகமான பொது மக்கள் உடல் சிதறி உயிரிழந்தனர்.
இந்நிலையில் என்னோடு ஒன்றாக நின்ற எனது மகன் காணாமல் போயிருந்தார். அவருக்கு என்ன நடந்தது என்று தேடிய போதும் அவரைக் காண முடியவில்லை. இந்நிலையில் சிதறிக் கிடந்த சடலங்களையும் தேடிப்பார்த்தேன். அங்கு எனது மகன் கிடைக்கவில்லை.
எனவே எனது மகன் பிடித்துச் செல்லப்பட்டுள்ளார் என்பதையே அப்போது நான் ஊகித்துக் கொண்டேன். இறுதி யுத்தத்தின் போது சரமாரியாக மேற்கொள்ளப்பட்ட வான் தாக்குதல் மற்றும் துப்பாக்கிப் பிரயோகங்களினால் நாளுக்கு நாள் இடம்பெயர்ந்து சென்று கொண்டே இருந்தோம் என்று காணாமல் போனோர் குறித்து விசாரிக்கும் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த தாயொருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த தினம் மாலை வரையும் கிபீர் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அன்றைய தாக்குதலில் உடல்கள் சிதறி உயிரிழந்து கிடந்த ஒவ்வொரு சடலமாக புரட்டிப் பார்த்தேன். அதில் என்னுடைய மகன் இருக்கவில்லை.
எனவே என்னுடைய மகன் பிடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் அல்லது ஷெல் தாக்குதலுக்குப் பயந்து எங்காவது சென்றிருக்கலாம் என்று எண்ணினேன். குண்டுத் தாக்குதலுக்கு மத்தியிலும் 15 நாட்கள் வரை எனது மகனைத் தேடித் திரிந்தேன். எனினும் அவர் மீண்டு வரவில்லை எனவும் அந்தத் தாயார் ஆணைக்குழு முன்பாக சாட்சியமளித்துள்ளார்.
அதுமட்டுமன்றி தமது பிள்ளைகள் யாரால் எவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டனர் என்றும் தகவல்களை வெளியிட்டுள்ள பாதிக்கப்பட்ட மக்கள் அதன் பின்னர் பல தடவைகள் பிள்ளைகளைத் தேடியும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லையெனவும் ஆணைக்குழு முன்னிலையில் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் காணாமல் போனோர் குறித்து ஆராயும் ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகி சாட்சியமளித்துள்ள பாதிக்கப்பட்டவர்களின் கூற்றுக்களைப் பார்க்கும் போது யுத்த காலத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் நீதியான சுயாதீன மற்றும் நம்பகரமான விசாரணை நடத்தப்பட வேண்டியது எந்தளவு தூரம் அவசியம் என்பது தெளிவாகின்றது.
விசேடமாக யுத்தகாலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் மற்றும் மனிதாபிமான சட்டமீறல் சம்பவங்கள் தொடர்பாக விரிவான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.
வெளிநாட்டு மற்றும் பொதுநலவாய நாடுகளின் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், விசாரணையாளர்களைக் கொண்டு விசாரணைப் பொறிமுறை முன்னெடுக்கப்பட வேண்டுமென்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையில் கூட வலியுறுத்தப்பட்டிருந்தது.
ஆனால் அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் உள்ளக விசாரணையை நடத்துவதாக இணக்கம் தெரிவித்துள்ள அதேவேளை அப்பாவிப் பொதுமக்களை இலக்கு வைத்து எவ்வாறான தாக்குதல்களும் இடம்பெறவில்லையென்றும் அவ்வாறான மனித உரிமை மீறல் சம்பவங்களில் அரசாங்கப் படையினர் ஈடுபடவில்லையெனவும் திட்டவட்டமாக கூறி வருகிறது.
ஆனாலும் அரசாங்கம் அவ்வாறு கூறி வருகின்ற போதிலும் தற்போது காணாமல் போனோர் குறித்து விசாரணை செய்யும் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்துள்ள மக்களின் சாட்சியங்களை ஆராய்ந்து பார்க்கும் போது மிகப் பாரிய அளவிலான மனித உரிமை மீறல் சம்பவங்கள் இடம்பெற்றிருக்குமோ என்ற அச்சம் ஏற்படுகின்றது.
விசேடமாக இறுதி யுத்தத்தின் போது மக்கள் செறிந்து காணப்பட்ட பகுதிகளை இலக்குவைத்து வான் தாக்குதல்கள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டதாகவும், இதனால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து போனதாகவும், பொதுமக்கள் வழங்கியுள்ள சாட்சியங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளன.
யுத்த காலத்தில் விடுதலைப் புலிகளின் இலக்குகளை இலக்கு வைத்தே வான் தாக்குதல்கள் நடத்தப்படுவதாக அரசாங்கத் தரப்பில் கூறப்பட்டு வந்தது.
ஆனால் தற்போது அந்தப் பிரதேசங்களில் வசித்த மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் கூறும் விடயங்களைப் பார்க்கும் போது இந்த யுத்த நடவடிக்கைகள் எந்தளவு தூரம் பொதுமக்களை பாதித்துள்ளன என்பதை அனைத்து தரப்பினரும் நேர்மையான முறையில் உணர வேண்டிய தேவை காணப்படுகின்றது.
எனவே காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை நடத்தும் மெக்ஸ்வல் பரணகம தலைமையிலான ஆணைக்குழு முன்னிலையில் அளிக்கப்பட்டுள்ள சாட்சியங்கள் தொடர்பில் அனைத்துத் தரப்பினரும் கவனம் செலுத்த வேண்டும்.
குறிப்பாக இவ்வாறான சம்பவங்கள் மற்றும் ஏற்கனவே முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியமாகும்.
சர்வதேச சமூகமும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையும் வலியுறுத்தியுள்ளதைப் போன்று சுயாதீனமானதும் நம்பகரமானதுமான விசாரணைகளை நடத்துவதன் மூலமே யாருக்கு என்ன நடந்தது என்பது தொடர்பான உண்மையை கண்டறிய முடியும்.
விசேடமாக இவ்வாறான வான் தாக்குதல்கள் மற்றும் இராணுவ நடவடிக்கைகள் மூலம் உயிரிழந்தவர்களுக்கு நீதியும் நியாயமும் நிலைநாட்டப்பட வேண்டியது மிகவும் அவசியமானதாகும்.
அதுமட்டுமன்றி காணாமல்போன நிலையில் இதுவரை கண்டுபிடிக்கப்படாமல் என்ன நடந்தது என்பதே தெரியாமல் உள்ளவர்கள் தொடர்பில் விரிவாக விசாரணை நடத்தப்பட வேண்டும்.
காணாமல் போனோருக்கு என்ன நடந்தது? அவர்கள் உயிருடன் இருக்கின்றனரா? இல்லையா? என்பது தொடர்பாக விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
அவ்வாறான பரந்துபட்ட நம்பகரமான விசாரணைகள் மூலம் காணாமல் போனோருக்கு என்ன நடந்தது என்பதை கண்டறிந்து அவர்களது உறவினர்களுக்கு உரிய தீர்வை வழங்க வேண்டும்.
குறிப்பாக காணாமல் போனோரின் உறவினர்கள் தமது உறவுகளை தொலைத்து விட்டு பல்வேறு துன்ப துயரங்களை எதிர்கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.
பிள்ளைகளை காணும் ஏக்கத்தில் பெற்றோரும், கணவனைக் காணாமல் திண்டாடிக் கொண்டிருக்கும் மனைவியும் முகம் கொடுக்கும் பிரச்சினைகள் மிகவும் அதிகமாகும்.
இந்த துயர துன்பங்கள் நீடிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கக் கூடாது.
எனவே இந்த அனைத்து விடயங்களுக்கும் தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கு உரிய விசாரணை பொறிமுறை முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியமாகும்.
இது தொடர்பில் முன்னெடுக்கப்படவுள்ள விசாரணைப் பொறிமுறையானது பரந்துபட்ட ரீதியிலும் நம்பகரமாகவும் அமைய வேண்டியது மிகவும் அவசியமாகும்.
அப்போதுதான் பொதுமக்கள் வெளியிட்டுள்ள சாட்சியங்கள் தொடர்பில் உரிய விசாரணையை முன்னெடுத்து பாதிக்கப்பட்டோருக்கு நீதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க முடியும்.
வான் தாக்குதல்கள் மூலம் மக்கள் நூற்றுக்கணக்கில் உயிரிழந்துள்ளனர் என்ற தகவல் அனைவர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் விரிவான விசாரணைகள் நடத்த வேண்டும்.
இவ்வாறான சாட்சியங்களை புறக்கணித்து எவரும் செயற்பட முடியாது.
எனவே பாதிக்கப்பட்ட மக்கள் திருப்தியடையும் வகையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விரிவான விசாரணைகள் நடத்தி நீதியை நிலைநாட்ட வேலைத்திட்டங்களை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.
இந்த விடயத்தில் சர்வதேசம் இலங்கையை கழுகுக் கண்கொண்டு பார்க்கின்றது என்பதை மறந்துவிடக் கூடாது.
எனவே அனைவரும் ஏற்கும் வகையிலான விசாரணைகள் அவசியம் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
நம்பகரமான விசாரணையை வலியுறுத்தியுள்ள சாட்சியங்கள்!
Reviewed by Author
on
March 01, 2016
Rating:

No comments:
Post a Comment