அண்மைய செய்திகள்

recent
-

செங்கை ஆழியான்! தமிழிலக்கியத்தின் அழிக்க முடியாத அடையாளம்!


இலங்கையின் கல்வித்துறையிலும் இலக்கியப் பரப்பிலும் பாரியதொரு வெற்றிடத்தை ஏற்படுத்தி விட்டுச் சென்றுள்ளார் செங்கை ஆழியான்.
ஈழத்து இலக்கியத்துறை பற்றி ஆராய்கின்ற போது அங்கு செங்கை ஆழியானை புறந்தள்ளி வைத்து விட முடியாது. ஈழத்து இலக்கியம் எழுச்சி பெறத் தொடங்கிய காலப் பகுதியிலிருந்து இன்று வரை அத்துறையில் மிகப்பெரும் வகிபாகத்தைக் கொண்டிருந்தவர் அவர்.

இலங்கையின் தமிழிலக்கியம் எனக் கூறுகின்ற போது தமிழ் நாட்டு இலக்கியப் படைப்புகளே இங்கு முழுமையான ஆதிக்கம் செலுத்திய காலப் பகுதியொன்று இருந்தது.

இந்திய தமிழிலக்கியப் படைப்புகளின் ஆதிக்கத்துக்கு முன்பாக சிறுகதைகளையும் நாவல்களையும் படைத்து ஈழத்து தமிழிலக்கியத்துக்கு முகவரியைத் தேடித் தந்தோரில் செங்கை ஆழியானும் குறிப்பிடத்தக்க ஒருவர்.

தமிழக இலக்கியப் படைப்புகளில் மேட்டுக்குட்டி மக்களே கதாநாயகர்கள் என்றிருந்த நிலைமையை ஜெயகாந்தன் போன்றோர் மாற்றியமைத்ததைப் போன்று, ஈழத்துத் தமிழிலக்கியத்திலும் நலிவடைந்த மக்கள் கூட்டத்தினரை கதாநாயகர்களாகத் தவழ விட்டு புதுமை படைத்தவராக செங்கை ஆழியான் விளங்குகிறார்.

இலத்திரனியல் ஊடகங்கள் தாக்கம் செலுத்துவதற்கு முற்பட்ட காலப்பகுதியில் சிறுகதை, நாவல், கட்டுரை என்றெல்லாம் ஏராளமாகப் படைத்ததன் விளைவாக ஈழத்து இலக்கிய நெஞ்சங்கள் மத்தியில் செங்கை ஆழியானுக்கென்று தனியான ஒரு இடமுண்டு.

அரசாங்க உயரதிகாரியாக அவர் பணியாற்றிய பிரதேசங்களின் மண் வாசனையை அவரது படைப்புகளில் தாராளமாக சுவாசிக்க முடியும். அவர் சந்தித்த சமுதாயத்தின் நலிவுற்ற வர்க்கத்தினரையே தனது படைப்புக்களில் கதாபாத்திரங்களாக தவழ விட்டார்.

சமூகப் பிரக்சை கொண்ட ஒரு படைப்பாளியால் மாத்திரமே இவ்வாறான இலக்கிய சிருஷ்டிகள் எப்போதும் சாத்தியமானவை. சமுதாயத்தில் எமது பார்வைக்குத் தென்படாத அம்சங்களையெல்லாம் தனது படைப்புக்களால் வெளிக்கொண்டு வந்ததன் காரணமாகவே ஈழத்து இலக்கியத்துறையில் செங்கை ஆழியான் என்றும் யுகபுருஷராகப் போற்றப்படுகிறார்.

கல்விப் புலத்தில் அவர் ஆற்றியுள்ள பங்களிப்புகளும் எண்ணிலடங்காதவையாகும். மாணவர்களுக்குப் பெரும் பயன் தருகின்ற புவியியல் பாடநூல்களை அவர் தொடர்ச்சியாக வெளியிட்டு வந்துள்ளார். பொது உளச்சார்பு, வரலாறு தொடர்பான நூல்களையும் செங்கை ஆழியான் எழுதியுள்ளார்.

நிருவாக சேவை அதிகாரியாகவும், இலக்கியப் படைப்பாளியாகவும் பணிபுரிகின்ற காலப்பகுதியில் கல்வித்துறை சார்ந்த நூல்களையும் அவர் வெளியிட்டு வந்தமை உண்மையிலேயே பெரும் சாதனைதான். செங்கை ஆழியானின் நூல்களால் பயன் பெற்ற மாணவர் கூட்டத்தை எண்ணிக் கணக்கிட முடியாது.

செங்கை ஆழியான் பல்வேறு, பதவிகளை அலங்கரித்து வந்துள்ளார். பல்கலைக்கழகப் பதிவாளராக, உதவி அரசாங்க அதிபராக, மாநகர சபை ஆணையாளராக, பல்கலைக்கழக விரிவுரையாளராக, ஆசிரியராக அவர் பல்வேறு பதவிகளை வகித்த போதிலும், இலக்கியத்துறையிலிருந்து ஒருபோதுமே விலகியதில்லை.

படைப்பாளி ஒருவனின் உண்மையான இலக்கியப் பற்றுதல் இதுதான். அதேசமயம் தனது கடமை மீது மிகுந்த கரிசனை கொண்டவராகவும் எளிமையானவராகவும் அவர் விளங்கினார். எண்ணிக்கையில் அடங்காத அன்பு நெஞ்சங்களை தன்வசம் ஈர்த்துக் கொண்டதற்கான காரணமும் இதுதான்.

மூன்று தசாப்தகால யுத்த காலத்தின் போது இலக்கியப் பணிபுரிவதிலும் பல்வேறு தடைகளும் நெருக்கடிகளும் அச்சுறுத்தல்களும் வடக்கு, கிழக்குப் பிரதேசத்தில் எதிர்கொள்ளப்பட்டன. அன்றைய வேளையில் மக்களின் வாழ்வியல் நிலைகளை எழுத்துரு வடிவில் கொண்டு வருவதில் இருபுறத்திலும் அச்சுறுத்தல்கள் இருந்தன.

ஊடகவியலாளர்கள் மாத்திரமன்றி இலக்கியவாதிகளும் கூட வடக்கு, கிழக்கு மண்ணில் கைகள் கட்டப்பட்ட நிலையிலேயே பணிபுரிந்த காலப்பகுதியை மறந்து விட முடியாது. அவ்வேளையில் இலக்கியவாதிகளும் வரம்புக்குள் நின்றபடியே படைப்பிலக்கியப் பணி புரிய வேண்டிருந்தது.

எனினும் செங்கை ஆழியானின் பேனா என்றுமே ஓய்ந்தது கிடையாது. எதிரும்புதிருமாக இரு புறத்தாலும் அச்சுறுத்தல்கள் எதிர்நோக்கப்பட்ட போதிலும் அவர் எழுதிக் கொண்டேயிருந்தார்.

அதேசமயம் யுத்த காலப் பகுதியில் தனது மண்ணிலிருந்து எங்குமே புலம்பெயர்ந்து விடாமல் யாழ்ப்பாணத்திலிருந்து தொடர்ச்சியாகப் பணியாற்றி வந்த கர்மவீரராகவே அவரைப் பார்க்க வேண்டியுள்ளது.

 தனது உயிரினும் மேலாக மண்ணையும் இலக்கியத்தையும் நேசித்த மனித நேயன் ஒருவன், எம்மிடமிருந்து விடைபெற்றுச் சென்றுவிட்டான்.

தமிழுலகம் எத்தனையோ அறிஞர்களையும் கலைஞர்களையும் சந்தித்து வந்திருக்கிறது. எனினும் அத்தனை பேருமே எம் உள்ளங்களில் தடம் பதித்துச் சென்றதில்லை. சொற்பமானோரே எம்மத்தியில் தமது அடையாளங்களை விட்டுச் செல்கின்றனர்.

அவ்வாறானோரில் ஒருவரே செங்கை ஆழியான். அன்னாரின் இழப்பு உள்ளத்தில் உண்மையான வலியை ஏற்படுத்துகிறது.
செங்கை ஆழியான்! தமிழிலக்கியத்தின் அழிக்க முடியாத அடையாளம்! Reviewed by Author on March 01, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.