12 இலக்க அடையாள அட்டை அனைத்து நடவடிக்கைகளுக்கும் செல்லுபடியாகும்!
12 இலக்கங்களைக் கொண்ட புதிய அடையாள அட்டை அனைத்து நடவடிக்கைகளுக்கும் செல்லுபடியாகும் என தேசிய ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.
தேசிய ஆட்பதிவு திணைக்களத்தின் மேலதிக ஆணையாளர் நாயகம் ரஞ்சனி ஜயக்கொடி சிங்கள பத்திரிகையொன்றுக்கு இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் இது பற்றி விளக்குகையில்…
12 இலக்கங்களைக் கொண்டு புதிதாக விநியோகம் செய்யப்படும் அடையாள அட்டையானது இலங்கையில் எந்தவொரு கருமத்திற்காகவும் அடையாளத்தை நிரூபிக்கும் ஆவணமாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.
இந்த ஆண்டு ஆரம்பம் முதல் புதிய அடையாள அட்டை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பழைய அடையாள அட்டைகளை புதுப்பித்தவர்களின் புதிய அடையாள அட்டைகளில் பழைய அடையாள அட்டை இலக்கமும் குறிப்பிடப்பட்டுள்ளது.
12 இலக்க அடையாள அட்டை அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னதாக தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு அதிகாரசபை, மத்திய வங்கி, செல்லிடப்பேசி விற்பனை நிறுவனங்கள் மற்றும் அரச நிறுவனங்களுக்கு இது பற்றி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பழைய அடையாள அட்டையின் தொடரிலக்கத்தின் முதல் இரண்டு இலக்கங்களும் பிறந்த ஆண்டை குறிக்கின்றது.
இந்த அடையாள அட்டை அறிமுகம் செய்யப்பட்ட காலத்தில் இலங்கையில் நாள் ஒன்றுக்கு ஆயிரம் குழந்தைகள் பிறப்பதனால் இவ்வாறு பிறந்த ஆண்டின் இறுதி இலக்கங்கள் இரண்டு மட்டும் குறிப்பிடப்பட்டிருந்தது.
எனினும் தற்போது நாள் ஒன்றுக்கு பத்தாயிரம் குழந்தைகள் பிறப்பதனால் பிறக்கும் ஆண்டின் நான்கு இலக்கங்களையும் உள்ளடக்கி தேசிய அடையாள அட்டைக்கான இலக்கம் வழங்கப்படுகின்றது.
12 இலக்க தேசிய அடையாள அட்டையில் பழைய அட்டையில் காணப்பட்ட ஆங்கில எழுத்து நீக்கப்பட்டுள்ளது.
எனினும், புதிய அடையாள அட்டையை எந்தவொரு அலுவலகத் தேவைக்காகவும் பயன்படுத்திக் கொள்ள முடியும் என ரஞ்சனி ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.
12 இலக்க அடையாள அட்டை அனைத்து நடவடிக்கைகளுக்கும் செல்லுபடியாகும்!
Reviewed by NEWMANNAR
on
March 12, 2016
Rating:

No comments:
Post a Comment