கடத்தல் பாணியில் கைதுகள்! நல்லிணக்க செயற்பாடுகளைக் குழப்புவதாகவே அமையும்!
நாட்டில் யுத்தம் நிறைவடைந்து ஆயுதங்களின் சத்தங்கள் ஓய்ந்து நல்லிணக்கத்திற்கான பாதை திறக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ள நிலையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கடந்த சில தினங்களாக அரங்கேறி வருகின்ற சம்பவங்கள் மக்களின் மனித உரிமையை கேள்விக்குட்படுத்துவதாகவும் நல்லிணக்கத்தை குழப்புவதாகவும் அமைந்துள்ளன.
அதாவது புனர்வாழ்வளிக்கப்பட்ட நிலையில் சமூகமயப்படுத்தப்பட்ட முன்னாள் போராளிகள் சிலர் கடந்த ஒருவார காலத்தில் பயங்கரவாத புலனாய்வு பிரிவினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதாவது கைது செய்யப்பட்டவர்களில் அதிகமானோர் வெளிப்படைத்தன்மையாக கைது செய்யப்படாமல் கடத்தல் பாணியில் கைதுகள் அரங்கேற்றப்பட்டுள்ளமையானது மக்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
அத்துடன் இவ்வாறான கைதுகளின் காரணமாக 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சமூகமயப்படுத்தப்பட்ட முன்னாள் போராளிகள் பெரும் அச்சத்துடன் உள்ளனர்.
அந்தவகையில் புனர்வாழ்வு பெற்று விடுதலையாகிய புலிகளின் முன்னாள் அம்பாறை மாவட்ட தளபதி ராம் என்பவர் திருக்கோவில் தம்பிலுவிலில் உள்ள அவரது வீட்டில் வைத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை இனம் தெரியாதவர்களினால் வான் ஒன்றில் கடத்திச் செல்லப்பட்ட நிலையில் பின்னர் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
அத்துடன் கடந்த செவ்வாய்க்கிழமை புலிகளின் சாள்ஸ் அன்டனி படையணியின் தளபதி எனக்கூறப்படும் நகுலன் என்பவர் யாழ்ப்பாணத்தில் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
இதேவேளை நேற்று முன்தினம் புலிகளின் முன்னாள் திருமலை மாவட்டத்துக்கு பொறுப்பான புலனாய்வு அதிகாரியாக செயற்பட்ட கலையரசன் என அறியப்படும் அறிவழகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
விஷேட விசாரணை ஒன்றுக்காக அவரை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் கைதுசெய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்திருக்கிறார்.
இது இவ்வாறு இருக்க இலங்கை தமிழரசு கட்சியின் இளைஞர் அணி செயலாளரும் மன்னார் நித்திலம் பதிப்பகத்தின் உரிமையாளருமான சிவகரன் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
வவுனியா பயங்கரவாத தடுப்பு பிரிவினராலேயே இவர் கைது செய்யப்பட்டிருந்தார். இவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மேடை பேச்சாளரும் கடந்த வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு தோல்வியுற்றவருமாவார்.
இவ்வாறு இவ்வாரத்தில் மட்டும் பலர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். விசேட விசாரணைகளுக்காக கைது செய்யப்படுவதாக கூறப்பட்டே இவர்கள் கைது செய்யப்பட்டுவருகின்றனர்.
இந்நிலையில் நாட்டில் நல்லிணக்க செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு தேசிய ஒற்றுமை பலப்படுத்தப்படும் என்ற நம்பிக்கை வலுவடைந்து வருகின்ற நிலையில் இவ்வாறான சம்பவங்கள் அவற்றுக்கு தடையாக அமைந்து விடுமோ என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக யாராவது பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டால் அல்லது குற்றச் செயல்களில் ஈடுபடுவதற்கு திட்டமிட்டால் அது தொடர்பில் விசாரணைகளை நடத்தி சம்பந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டியது அவசியமாகும்.
அதனை விமர்சிப்பதற்கோ, அதனை தவறு என்று கூறுவதற்கோ நாம் இங்கு விளையவில்லை. ஆனால் அவ்வாறு குற்றச்செயல்கள் மற்றும் பயங்கரவாத செயற்பாடுகளுடன் யாராவது தொடர்புபட்டிருப்பின் அவர்களை கைது செய்வதற்கு நாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு முறைமை காணப்படுகிறது.
அவ்வாறு ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிமுறைகளுக்கு அமைய சந்தேகநபர்களை கைதுசெய்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். அதனைவிடுத்து இவ்வாறு கடத்தல் பாணியில் முன்னாள் போராளிகளை கைதுசெய்ய முயற்சிப்பதானது மக்கள் மத்தியில் வீண் அச்சத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்துவதாக அமைந்து விடும்.
கடந்த மஹிந்த ராஜபக்சவின் அரசாங்க காலத்தில் இவ்வாறு கடத்தல்கள் மற்றும் காணாமல்போன சம்பவங்கள் அதிகளவில் காணப்பட்டன. அக்காலத்தில் இவ்வாறு கடத்தல் பாணியில் கைது செய்யப்படும் சம்பவங்கள் அதிகமாக காணப்பட்டதுடன் மக்கள் மத்தியில் பாரிய அச்சமும் நிலவியது.
அந்தவகையில் தற்போது இடம்பெறும் கடத்தல் பாணியிலான கைதுகளைப் பார்க்கும்போது கடந்த அரசாங்க காலத்தில் மேற்கொள்ளப்பட்ட கடத்தல்களைப் போன்று தற்போதைய காலத்திலும் சம்பவங்கள் அரங்கேறுகின்றனவா என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்படுகின்றது.
காரணம் யுத்த காலத்திலும் அதற்குப் பின்னரான காலத்திலும் கடத்தல் மற்றும் காணாமல்போதல் சம்பவங்களுக்கு முகம் கொடுத்து வந்த இந்த நாட்டின் பாதிக்கப்பட்ட மக்கள் இவ்வாறு ஒரு சில சம்பவங்கள் இடம்பெற்றவுடன் எங்கே மீண்டும் நாட்டில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுகின்றனவா என்றும் அச்சம் கொள்ளும் நிலைமை ஏற்படுகின்றது.
எனவே அரசாங்கம் இவ்வாறான செயற்பாடுகளை வெளிப்படைத் தன்மையுடனும் ஏற்றுக் கொள்ளப்பட்ட விதிமுறைகளுக்கு அமைவாகவும் முன்னெடுக்கவேண்டியது அவசியமாகும்.
இது இவ்வாறிருக்க அண்மையில் யாழ்ப்பாணத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதங்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கே முன்னாள் புலி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு வருவதாக அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்திருக்கின்றார்.
அவ்வாறு அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதங்கள் தொடர்பில் விசாரணை நடத்த வேண்டுமாயின் அதற்கென உரிய விதிமுறைகளைப் பின்பற்றி சந்தேக நபர்களை கைதுசெய்ய முடியும். அதனை விடுத்து இவ்வாறு பலவந்தமான முறையில் முன்னாள் போராளிகளை கடத்திவிட்டு பின்னர் கைது செய்ததாக அறிவிப்பதானது நல்லிணக்க செயற்பாடுகளைக் குழப்புவதாகவே அமையும்.
அதாவது பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் பிரதேச பொலிஸ் அதிகாரிகளை அழைத்துச் சென்று சந்தேகநபர்களை கைது செய்யலாம். மாறாக சிவில் உடையில் சென்று கைது செய்வது ஒருவித அச்சத்தை ஏற்படுத்துவதாகவே அமையும்.
இது இவ்வாறிருக்க நேற்று முன்தினம் பத்திரிகை ஆசிரியர்களை சந்தித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. அதாவது வடக்கு, கிழக்கு முன்னாள் புலி உறுப்பினர்கள் தொடர்ந்தும் கைது செய்யப்பட்டு வருகின்றமையால் மக்கள் மத்தியில் குழப்பமும் அச்சமும் நிலவுகின்றதே என்று ஜனாதிபதியிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் இந்தப் பிரச்சினை குறித்து தான் தேடிப் பார்ப்பதாகவும் அவ்வாறு நடந்திருந்தால் அதனை அனுமதிக்க முடியாது எனவும் கூறியிருக்கிறார்.
அந்த வகையில் இவ்வாறு பலவந்தமான முறையில் கடத்தல் பாணியில் முன்னாள் புலி உறுப்பினர்களை கைது செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் ஆமோதித்திருக்கிறார்.
எனவே இந்த விவகாரம் தொடர்பில் பொதுமக்களுக்கு விளக்கமளிக்கப்பட வேண்டியது அவசியமாகும். வடக்கில் மீண்டும் புலிகள் உருவாகி வருவதாகவும் நாட்டில் தேசிய பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாகவும், தென்னிலங்கையில் இனவாத சக்திகள் கூச்சலிட்டு வருகின்ற நிலையில் அவர்களை திருப்திபடுத்தும் நோக்கத்தில் அரசாங்கம் இவ்வாறு கைதுகளை முன்னெடுக்கின்றதா என்ற அச்சமும் சந்தேகமும் மக்கள் மத்தியில் ஏற்படுகின்றது.
எனவே இவ்வாறு மக்கள் மத்தியில் ஏற்படுகின்ற இந்த அச்சத்தையும் சந்தேகத்தையும் அரசாங்கம் தொடரவிடக்கூடாது. குறிப்பாக மக்கள் யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் நிம்மதி பெருமூச்சுடன் தமது வாழ்க்கையை ஆரம்பிக்க எத்தனித்துக் கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் இவ்வாறான அசம்பாவிதங்கள் இடம்பெறுவதானது மக்களின் வாழ்க்கையை சீர்குலைப்பதாகவே அமைந்துவிடும்.
எனவே அரசாங்கம் இந்த பாதுகாப்பு விடயத்தில் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்படும் வகையிலும் சமாதானம் குறித்த நம்பிக்கைக்கு கேடு விளைவிக்கும் வகையிலும் செயற்படக்கூடாது. குறிப்பாக தேசிய பாதுகாப்பு குறித்த செயற்பாடுகள் மிகவும் முன்னேற்றகரமான நிலையிலும் சட்ட திட்டங்களுக்கு உட்பட்ட வகையிலும் முன்னெடுக்கப்படவேண்டும்.
அரசாங்கமானது தேசிய பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்பதுடன் கொடூரமான யுத்தம் ஒன்று நடைபெற்ற நாட்டில் மீண்டும் அவ்வாறான சம்பவங்கள் தலைதூக்காமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டியதும் அவசியமாகும்.
நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்பது பதவியிலிருக்கும் அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்பதில் மாற்றுக் கருத்துக்கிடமில்லை. அதற்கு நாட்டின் அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
ஆனால் நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் செயற்பாடுகள் மக்கள் மத்தியில் மீண்டும் அச்சத்தை தோற்றுவிக்கும் வகையில் அமைந்து விடக்கூடாது என்பதையே நாங்கள் சுட்டிக் காட்டுகின்றோம்.
குறிப்பாக தற்போது இடம்பெற்று வரும் இந்த முன்னாள் புலி உறுப்பினர்களின் கைது விவகாரமானது சட்ட திட்டங்களுக்கு உட்பட்ட வகையில் இடம்பெற வேண்டும்.
மாறாக மக்களின் அடிப்படை மனித உரிமையை மீறும் வகையில் கடத்தல் பாணியில் அச்சத்தை ஏற்படுத்தும் ரீதியில் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறக்கூடாது என்பதையும், ஒட்டுமொத்த முன்னாள் போராளிகள் மற்றும் மக்கள் மத்தியில் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தும் வகையில் இந்த செயற்பாடுகள் இடம்பெறக் கூடாது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
கடத்தல் பாணியில் கைதுகள்! நல்லிணக்க செயற்பாடுகளைக் குழப்புவதாகவே அமையும்!
Reviewed by Author
on
April 29, 2016
Rating:

No comments:
Post a Comment