அண்மைய செய்திகள்

recent
-

உயிரைத் தருகிறோம் தமிழைத் தா! ஆனா ரூனாவின் தமிழ் முழக்கம்!


‘ஒரு தனிமனிதர் ஓர் இயக்கமாகச் செயல்பட்ட வரலாறுதான் மறைந்த அருணாசலம்’ என்றே தமிழ்ச் சான்றோர்கள் புகழாரம் சூட்டுகின்றனர்.

அவர் உருவாக்கிய பெரியார் தமிழ் இசை மன்றம், ‘நந்தன்’ இதழ், தமிழ்ச் சான்றோர் பேரவை மூன்றும் பல ஆண்டுகள் அனலாகச் செயல்பட்டன.

தமிழ்க் கொடை ஒன்று சாய்ந்துவிட்டது. அதன் பெயர் நா.அருணாசலம். அடையாறு மாணவர் நகலகத்தின் உரிமையாளர். அன்பாக, ஆனா ரூனா என்று அழைக்கப்பட்டவர்.

எந்த அரசியல் நிலைப்பாடுகளைக் கொண்டிருந்தாலும் மொழி என்ற ஒரு குடையின் கீழ் தமிழர்களை ஒன்றிணைக்கத் தமிழ்ச் சான்றோர் பேரவை பாடுபட்டது.

தந்தை பெரியார் தமிழிசை மன்றம் தமிழ் இசைக்கு உயிரூட்டியது. இவரால் வளர்த்து எடுக்கப்பட்டவர்தான் கிராமியப் பாடகர் புஷ்பவனம் குப்புசாமி.

தமிழில் கல்வி வேண்டும், தமிழில் படித்தோர்க்கு வேலை வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்னிறுத்தி 1999 ஏப்ரல் 25-ம் நாள் தொடங்கிய 100 தமிழர்கள் பட்டினிப் போராட்டம் வரலாற்றில் முக்கியமான நிகழ்வு.

தந்தை பெரியார் தமிழிசை மன்றத்தின் மூலம் ஆண்டுதோறும் நடத்தப்பட்ட தமிழிசை விழா பல தமிழ்க் கலைஞர்களை அடையாளம் காட்டியது.

பல கிராமியத் தமிழ்க் கலைஞர்கள் அதன்மூலமே அறியப்பட்டனர் என்று சொல்லலாம்.

ஒரு கிராமத்திலிருந்து வந்து தனிமனிதனாக உழைத்து முன்னேறி தந்தை பெரியாரின் கருத்துகளால் ஈர்க்கப்பட்டதன் விளைவாக தன்னை ஒரு சமூக மனிதனாக மாற்றிக்கொண்டு கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக எண்ணற்ற பணிகளைச் செய்தவர் அருணாசலம்.

அவருடன் நெடுங்காலம் நெருங்கிச் செயல்பட்ட திராவிடத் தமிழர் பேரவைத் தலைவர் சுப.வீரபாண்டியன், ‘‘அவருடைய செயல்பாடுகளுடன் உடன் இருந்தவன்.

அவரால் முன்னெடுக்கப்பட்ட ‘நந்தன்’ இதழ், தந்தை பெரியார் தமிழிசை மன்றம், தமிழ்ச் சான்றோர் பேரவை மூன்றும் தமிழ்ச் சமூகத்துக்கு மிக முக்கியமான பங்கை ஆற்றின.

பெரியாரின் கொள்கைகள் மீது அவருக்கு மிகப் பெரிய பற்று இருந்தது. அதுதான் என்னையும் அவரையும் இணைத்தது.

ஒருநாள் அவரிடம் வேலை கேட்டு ஓர் இளைஞர் வந்தார். சான்றிதழ்களைப் பார்த்துவிட்டு, அவரை வேலைக்குத் தேர்வு செய்ய இருந்த நேரத்தில், கையில் ஏதோ கயிறு கட்டியிருப்பதைப் பார்த்தார். கயிறு கட்டியிருந்தால் வேலை தருவதில்லையே எனச் சொல்லி, ஒரு கத்திரியை எடுத்து அவரிடம் கொடுத்தார். ‘இந்தக் கயிற்றை அறுத்துவிட்டால் வேலை தருகிறேன். கயிறு உன்னைக் காப்பாற்றும் என நினைத்தால் நீ வேறு இடத்துக்குச் சென்று முயற்சி செய்யலாம்’ என்று கூறிவிட்டார்.

இளைஞன் பார்த்தான். கயிற்றை வெட்டி எறிந்தான். கடவுளை மற... மனிதனை நினை என்று அறிவுரை சொன்னார். மந்திரக் கயிறெல்லாம் வேலை தராது என்று வேலையில் சேர்த்துக்கொண்டார். கஷ்டத்தில் இருப்பவர்களின் முகக் குறிப்பை பார்த்தே உதவுவார்.

தமிழ் மொழியைக் கட்டாயப் பாடமாக்க வேண்டும் என்பதற்காக அவர் நடத்திய போராட்டத்துக்கு அவர் வைத்த முழக்கமே ‘உயிரைத் தருகிறோம், தமிழைத் தா’ என்பதுதான்.

தமிழுக்காக உயிரையும் தரக்கூடியவராக இருந்தார். தந்துவிட்டார்’’ என்றார்.

அவருடன் நெருங்கிச் செயல்பட்ட இன்னொரு களப்பணியாளர் தேவநேயன். ‘‘காங்கிரஸ், தி.மு.க., கம்யூனிஸம் என எந்தக் கட்சியின் ஆதரவாளராக இருந்தவர்களையும் தமிழ்மொழி என்ற ஒரு கொள்கைக்காக ஒன்றிணைக்க வேண்டும் என்பதுதான் அவருடையப் பெருங்கனவாக இருந்தது.

தமிழ்ச் சான்றோர் பேரவையின் சார்பாக செய்தும் காட்டினார். தமிழ் தேசியவாதிகள், திராவிட இயக்கச் சிந்தனையாளர்களோடு தலித் போராளி ஜான் பாண்டியன் போன்ற தோழர்களையும் அவர் மொழிக்காக இணைத்தார்.

அவருடைய கடைசி மூன்று நாட்கள் பெரும் துன்பத்துடன் கழிந்தன. இறுதிநாளில் பாடகர் புஷ்பவனம் குப்புசாமி தொடர்ச்சியாக ஒரு மணி நேரம் அவர் முன் அமர்ந்து தமிழிசைப் பாக்களை பாடியபடி இருந்தார்.

‘கிழவன் அல்ல... கிழக்கு திசை’ என்ற பாடல் அவருக்கு மிகவும் பிடித்த பாடல். கண்களை மூடிய நிலையில் பாடல்களைக் கேட்டுக்கொண்டே இருந்தார்.

அவருடைய விழிகளில் நீர் திரண்டு வழிந்தது. அடுத்த சில வினாடிகளில் அவர் உயிர் பிரிந்துவிட்டது.

பெரியாரையும் தமிழிசையையும் அவர் இறுதி மூச்சுவரை நேசித்ததை அப்படியே வீடியோ பதிவாகவும் எடுத்து வைத்தோம்’’ என்றார்.

தமிழை வாழவைத்தோர் சாவதில்லை சரித்திரத்தில்!

உயிரைத் தருகிறோம் தமிழைத் தா! ஆனா ரூனாவின் தமிழ் முழக்கம்! Reviewed by Author on May 27, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.