சட்டத்தால் முடியாவிட்டால் குற்றவாளிகளை எங்களிடம் ஒப்படையுங்கள்!- வித்தியாவின் தாயார்!
யாழ். புங்குடுதீவ மாணவி சிவலோகநாதன் வித்தியா கூட்டு வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு நேற்றுடன் ஒரு வருடம் நிறைவடைந்துள்ள நிலையில் அவரது இல்லத்தில் குடும்பத்தார் உறவினர்களால் வித்தியாவை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
புங்குடுதீவு 9ம் வட்டாரம் வல்லன் பகுதியைச் சேர்ந்தவர். அம்மா அக்கா அண்ணா என ஒரு சிறிய குடும்பத்தின் கடைக்குட்டியை பறிகொடுத்து விட்டு கண்ணீர் விழிகளோடு வித்தியாவின் தாயார் கலங்கி நிற்கின்றார்.
நேற்றைய தினம் வித்தியாவின் தாயார் கருத்து தெரிவிக்கையில்,
எனது மகளுக்கு இந்த கொடூரமான சம்பவம் நிறைவடைந்து ஒருவருடம் கடந்துள்ள நிலையிலும் எனது மகளுக்கு நீதி கிடைக்கவில்லை. குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை.
என் செல்லத்துக்கு நீதி கிடைக்கும் என்று எனக்கு தெரியவில்லை. என் செல்லத்தை வக்கிரமான முறையில் படுகொலை செய்துவிட்டு நல்லவர்களைப் போன்று சட்டத்தின் முன் காட்டிக் கொள்கிறார்கள்.
ஜனாதிபதி எம் குடும்பத்தை சந்தித்து எமக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் என்றார். ஆனால் இன்றுடன் சரியாக ஒருவருடம் பூர்த்தியாகியும் நீதி கிடைக்கவில்லை.
குற்றவாளிகளை தண்டிக்க சட்டத்தால் முடியாவிட்டால் தயவு செய்து எங்களிடம் ஒப்படைக்கவும். நாங்கள் அவர்களுக்கு சரியான தீர்ப்பு வழங்குகின்றோம்.
தயவு செய்து என் மகளுக்கு நீதியை பெற்றுக்கொடுங்கள் கையெடுத்து கும்பிட்டு கேட்டுக் கொள்கிறேன்.
விரைவாக நீதிவான் நீதிமன்றில் குற்றவாளிகள் இனங்காணப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும் என கண்ணீர் மல்க தெரிவித்திருந்தார்.
மேலும் உறவினர்கள் தெரிவிக்கையில்,
எங்கள் பிள்ளையை கொலை செய்தது. இவர்கள் தான் எமக்கு நன்றாக தெரியும். சட்டம் இவர்களை நிச்சயம் தண்டிக்க வேண்டும்.
எங்கள் பிள்ளையை கட்டுகோப்பாக வளர்த்தோம் பழி தீர்ப்பு என்ற பெயரில் கொடூரமாக கொலை செய்துவிட்டார்கள். மனதின் வலி பிள்ளைகளை பறிகொடுத்தவர்களுக்கு தான் தெரியும்.
குற்றவாளிகள் நிச்சயம் சட்டத்திலிருந்து தப்பித்துக் கொண்டாலும் நாம் கும்பிடும் தெய்வம் கைவிடாது என தெரிவித்தனர்.
இவ் நினைவஞ்சலியில் உறவினர்கள் அயலவர்கள் கலந்து கொண்டனர்.
வித்தியாவுக்கு நீதி கிடைக்குமா? சட்டம் நீதி காக்குமா?
சட்டத்தால் முடியாவிட்டால் குற்றவாளிகளை எங்களிடம் ஒப்படையுங்கள்!- வித்தியாவின் தாயார்!
Reviewed by Author
on
May 14, 2016
Rating:
Reviewed by Author
on
May 14, 2016
Rating:


No comments:
Post a Comment