சிறந்த சாதனைகளை எய்திய பெண்கள் விருதுகளுக்காக விண்ணப்பிக்க முடியும்....
இலங்கையின் நிபுணத்துவம் வாய்ந்த பெண்களின் அடையாளத்தை சர்வதேச ரீதியில் கொண்டு செல்லும் வகையில், தொழில் நிலைகளில், வியாபாரங்களில் மற்றும் தினசரி வாழ்க்கையில் சிறந்த சாதனைகளை எய்திய பெண்கள் இந்த விருதுகளுக்காக விண்ணப்பிக்க முடியும் என்று முகாமைத்துவத்துக்கான பெண்கள் அமைப்பின் நிறுவுனரும் தலைமை அதிகாரியுமான சுலோச்சனா செகேரா தெரிவித்தார்.
மட்டக்களப்பு ஈஸ்ற் லகூன் சுற்றுலா விடுதியில் இன்று நடைபெற்ற ஆறாவது பெண்கள் நிபுணத்துவ மற்றும் தொழில் நிலை விருதுகள் தொடர்பாக அறிவிக்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்த விருதுகள் அறிமுகப்படுத்தும் நிகழ்வில், 2013ம் ஆண்டு சிறந்த சாதனைப் பெண்ணாகத் தெரிவு செய்யப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான சிரேஷ்ட செயற்பாட்டு அதிகாரி ஆகியோரும் கலந்து கொண்டு கருத்துக்களை வெளியிட்டனர்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த சுலோச்சனா செகேரா,
“கடந்த சில ஆண்டுகளில் முகாமைத்துவத்துக்கான பெண்கள் அமைப்பு இலங்கையின் சிறந்த பெண்கள் தலைமைத்துவ சாதனைகளை கௌரவப்படுத்தியுள்ளது.
அதன்மூலம் அவர்களின் அடுத்த கட்ட பிரத்தியேக நிலைக்கு கொண்டு செல்ல உதவியாக அமைந்திருந்தது. இதில் பலர் சர்வதேச கருத்து தலைவர்களாக உருவாக்கம் பெற்றுள்ளனர்.
பெண் தொழில் முயற்சியாளர்கள், ஊழியர்கள், விநியோகஸ்தர்கள், மற்றும் தலைவர்கள் ஆகியோர் பொருளாதார வளர்ச்சி மற்றும் வாய்ப்புக்களின் இயந்திரங்களாக அமைந்துள்ளனர்” என்றும் அவர் தெரிவித்தார்.
முகாமைத்துவத்துக்கான பெண்கள் அமைப்பு, உலக வங்கியின் சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனம் ஆகியன இணைந்து 6வது பெண்கள் நிபுணத்துவ மற்றும் தொழில் நிலை விருதுகள் 2016க்காக விண்ணப்பதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரியுள்ளன.
தொழில் நிலைகளில், வியாபாரங்களில் மற்றும் தினசரி வாழ்க்கையில் சிறந்த சாதனைகளை எய்திய பெண்கள் இந்த விருதுகளுக்காக விண்ணப்பிக்க முடியும்.
விருதுக்கான விண்ணப்பங்களை மே மாதம் 30 வரை விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும். விருது வழங்கும் நிகழ்வு எதிர்வரும் ஜூன் மாதம் 24ம் திகதி நடைபெறவுள்ளது.
கடந்த ஆண்டு 55 பெண்கள் 22 பிரிவுகளில் தமக்குரிய விருதுகளை பெற்றிருந்தனர்.
இன்று நடைபெற்ற இந்த அறிமுகப்படுத்தும் நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்டத்தில் பணிபுரியும் ஐக்கிய நாடுகள் முகவர் அமைப்புக்கள் மற்றும் இதர அபிவிருத்தி பங்காளர்கள் ஆகியவற்றில் பங்காற்றும் நபர்கள் உள்ளடங்கலாக பெண்கள் தலைவிகள் மற்றும் தொழில் முயற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.
சிறந்த சாதனைகளை எய்திய பெண்கள் விருதுகளுக்காக விண்ணப்பிக்க முடியும்....
Reviewed by Author
on
May 15, 2016
Rating:

No comments:
Post a Comment