பேசாலை மீனவர்களின் பாதிப்பு குறித்து கடற்தொழில் அமைச்சருடன் விசேட சந்திப்பு....
மன்னார் மாவட்டத்தில் கடந்த மாதம் ஏற்பட்ட திடீர் புயல் காற்று மற்றும் மழையினால் பாதிக்கப்பட்ட பேசாலை கிராம மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நஸ்ட ஈடு வழங்குவது குறித்து கடற்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீரவுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் இன்று காலை அமைச்சரின் அலுவலகத்தில் சந்தித்து உரையாடியுள்ளார்.
இதன் போது மன்னார் பிரதேச சபையின் முன்னாள் தலைவர் மாட்டின் டயஸ், பேசாலை கிராம மீனவ சங்க செயலாளர் எஸ்.இ.ஜெயந்தன் துரம்,பேசாலை டோலர் சங்க செயலாளர் ஜே.கொண்சல் குலாஸ் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
இதன் போது கடந்த மாதம் 16ம் திகதி ஏற்பட்ட திடீர் புயல் காற்று மற்றும் மழையினால் மன்னார் பேசாலை கிராம மீனவர்களின் பல லட்சம் ரூபாய் பெறுமதியான றோலர் படகுகள் சேதமாகியுள்ளது.
சுமார் 67 றோலர் படகுகளும், அதன் வலைத் தொகுதிகளும் சேதமாகியுள்ளது. இதன் மதிப்பீடு சுமார் 2 கோடி 70 லட்சம் ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது.
இதனால் பேசாலை கிராமத்தைச் சேர்ந்த சுமார் 300 மீனவக் குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளதாக கடற்தொழில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் கடற்தொழில் அமைச்சரை சந்தித்த குறித்த குழுவினர் தமது பிரச்சினைகள் குறித்தும், தமது சேத விபரங்கள் குறித்தும் பொலிஸ் அறிக்கையுடன் முழுமையாக அமைச்சர் அமரவீரவிடம் கையளித்துள்ளனர்.
இதன் போது பேசாலை கிராமத்தில் ஏற்பட்ட குறித்த திடீர் புயல் காற்றின் காரணமாக பாதிக்கப்பட்ட குறித்த மீனவர்களுக்கு உடனடியாக உரிய நிவாரணத்தை பெற்றுக் கொடுக்க துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கடற்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் வேண்டுகோள் விடுத்தமை குறிப்பிடத்தக்கது.
பேசாலை மீனவர்களின் பாதிப்பு குறித்து கடற்தொழில் அமைச்சருடன் விசேட சந்திப்பு....
Reviewed by Author
on
June 09, 2016
Rating:

No comments:
Post a Comment