அண்மைய செய்திகள்

recent
-

1983 கறுப்புயூலை நினைவேந்திலும் ஈழத்தமிழர்களின் சர்வதேசம் நோக்கிய கோரிக்கையும் : பிரதமர் வி.உருத்திரகுமாரன்

தமிழர் தாயகத்தில் சிறிலங்கா இராணுவபடை நீக்கம் என்பது பொறுப்புக் கூறலுக்கும் தமிழ்த் தேசியச் சிக்கலின் அரசியல் தீர்வுக்கும் முன்தேவையாகும் என 1983 கறுப்புயூலை நினைவேந்தல் செய்தியில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரவித்துள்ளார்.

1983 யூலையும், அதையடுத்து இராணுவ ஒடுக்குமுறையின் நிறுவனமயமும், தமிழ்த் தேசிய இனச்சிக்கலின் தீர்வும் பின்னிப் பிணைந்து கிடக்கின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பிரதமர் விஉருத்திரகுமாரன் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையின் முழுவடிவம் :

1983 யூலை – தமிழர்கள் மீது சிங்களத்தின் இராணுவ ஒடுக்குமுறை நிறுவன மயமாக்கப்பட்டதன் பிறப்பு.

1983 யூலையில் நிகழ்ந்த தமிழர் விரோதக் கொலைவெறியாட்டத்தில் பத்து நாளில் 2,000 – 3,000 தமிழர்கள் உயிரிழந்தார்கள், ஒன்றரை இலட்சம் மக்கள் வீடுவாசல் இழந்து இடம்பெயர நேரிட்டது.

தமிழர்களின் தொழில் கட்டமைப்பில் 90 விழுக்காடு அழிந்து போயிற்று. இந்த நரவேட்டை அரசின் இசைவுடன், அரசினால் ஒழுங்கு செய்யப்பட்டு நடத்தப்பட்டது. அதிபர் ஜெயவர்த்தனா அதனைக் கண்டிக்கவே இல்லை.

தமிழர்-விரோதக் கும்பல் வன்முறை ஐக்கிய தேசியக் கட்சி அமைச்சர்கள் சிறில் மத்யூ, காமினி திசநாயகா ஆகியோரின் நெறிப்படுத்தலுடனும் அரவணைப்புடனும் நடைபெற்றது.

பன்னாட்டுச் சட்டவாளர் ஆணையம் உண்மையறியும் பணிக்காக அதன் பிரித்தானியப் பிரிவின் தலைவர் பால் சீகார்ட் அவர்களை சிறிலங்காவுக்கு அனுப்பி வைத்தது. 1983 யூலையில் நிகழ்ந்த தமிழர்-விரோத வன்முறை என்பது 'மிகவும் முன்கூட்டியே வகுத்தும் தொகுத்தும் திட்டமிட்டபடி அடுத்தடுத்து நிறைவேற்றப்பட்ட செயல்களே' என்று அவர் எழுதினார்.
பன்னாட்டுச் சட்டவாளர் ஆணைய வெளியீடாகிய த ரிவ்யூ இந்த வன்முறை 'இனக் கொலைச் செயல்களுக்கு ஒப்பானது' என்று அறிவித்தது.

1956 ஜூன் 5ஆம் நாள் குழந்தைகள் உள்ளிட்ட 146 தமிழ் உழவர்கள் கல் ஓயாவில் படுகொலை செய்யப்பட்டதிலிருந்தே பெருந்தொகையான தமிழர்கள் மீது கும்பல் வன்முறை என்பது வாடிக்கையாகி விட்டது. தனிச் சிங்களச் சட்டத்துக்கு எதிராக காலிமுகத் திடலில் தமிழ்த் தலைமை அமைதிவழியில் முன்னெடுத்த அறப் போராட்டம் நடந்து கொண்டிருந்த போதுதான், அந்தப் போராட்டத்தின் விளைவாகவே, இந்தப் படுகொலை நிகழ்ந்தது.

கல் ஓயாவில் படுகொலை நிகழ்ந்து அரை நூற்றாண்டுக்கு மேலாகியும் அது தொடர்பாக ஒரே ஒருவர் கூட நீதியின் முன் நிறுத்தப்படவே இல்லை.

தமிழர்களின் அறப் போராட்டத்துக்கும் அதனைப் படைகொண்டு ஒடுக்கும் அடக்குமுறைக்குமான தொடர்பை அதிரடியாக வெளிப்படுத்தும் வகையில், 1960 அறப்போராட்டம் நசுக்கப்பட்டதைத் தொடர்ந்து வடக்கில் நிரந்தர இராணுவப் பாசறை நிறுவப்பட்டது.

யூலைப் படுகொலை குறித்து எழுந்த கூக்குரலால் 1983 ஆகஸ்டில் ஐநா துணை ஆணையத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தூதுவர் இவ்வாறு உறுதியளித்தார்: 'கொலைகளுக்கும் வன்முறைக்கும் அழிவு வேலைகளுக்கும் காரணமானவர்களின் தகுநிலை, கருத்தியல் அல்லது அரசியல் சார்புகள் என்னவாயினும், அவர்களனைவரையும் நீதியின் முன் நிறுத்த சிறிலங்க ஆட்சியாளர்கள் இயன்றதனைத்தும் செய்வார்கள். இதில் எவருக்கும் விலக்களிக்கப்படாது.'

அரசைச் சேர்ந்தவர்களாலேயே திட்டமிட்டு நிறைவேற்றப்பட்ட இந்தத் தமிழர்-விரோதப் பெருங்கொலைகளுக்காக இது வரை புலனாய்வோ வழக்குத் தொடுப்போ எதுவும் இல்லை.

இந்த நரவேட்டையின் போது அதிபர் ஜெயவர்த்தனா வன்முறையைக் கட்டுப்படுத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது மட்டுமன்று, யூலை 26ஆம் நாள் லண்டன் 'டெய்லி டெலிகிராப்' ஏட்டில் சொன்னார்: 'யாழ்ப்பாணத்து மக்கள் என்ன கருதுகிறார்கள் என்ற கவலை எனக்கில்லை... அவர்களைப் பற்றி, அவர்களது வாழ்க்கை, அவர்களது எண்ணம் பற்றியெல்லாம் இப்போது நினைத்துப் பார்க்க முடியாது... வடக்கில் எந்த அளவுக்கு அழுத்தம் கொடுக்கிறீர்களோ, இங்கே சிங்கள மக்கள் அந்த அளவுக்கு மகிழ்வார்கள்.... நான் தமிழர்களைப் பட்டினி போட்டு விரட்டியடித்தால், சிங்கள மக்கள் மகிழ்வார்கள் என்பதுதான் உண்மை.'

அதிபர் ஜெயவர்த்தனா உள்ளூர் ஏடுகளிலும் இப்படித்தான் கூறினார் என்பதில் ஐயமில்லை. அவரது கூற்று 'தமிழர்களைக் கொல்வதற்கு உரிமம்' கொடுத்தாற்போலாகி விட்டது. இதுவே நாட்டு அதிபரின் பார்வையில் தமிழர்கள் வேறொரு தனித் தேசம் ஆவார்கள் என்பதைக் காட்டுவதாகவும் அமைந்தது.

தமிழ், சிங்கள 'மக்களினங்கள்' இடையிலான வேறுபாட்டுக் குறிப்போடு தமிழ்த் தேசத் தகுதியைச் சுற்றிவளைத்துச் செல்லுபடியாக்கியது. 1983 தமிழர்-விரோத வெறியாட்டம் இந்தியா விடுத்த கடும் எச்சரிக்கையின் ஊடாகவே நிறுத்தப்பட்டது.

யூலைப் படுகொலையைத் தொடர்ந்தே ஆட்சியாளர்கள் தேசியப் பாதுகாப்பு அமைச்சகம் நிறுவி, சிறப்பு அதிரடிப் படை அமைத்ததின் ஊடாகத் தமிழர்களைக் குறிவைத்து இராணுவ, உளவு நடவடிக்கைகளை நிறுவனமயமாக்கினார்கள்.

2009 குளிர் காலத்திலும் இளவேனிற்காலத்திலும் முள்ளிவாய்க்காலிலும் அதையொட்டிய பகுதிகளிலும் நிகழ்ந்த தமிழர் விரோத இனவழிப்புச் செயல் – 1,46,000 மக்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டிய அந்த இனவழிப்புச் செயல் – 1983க்குப்பின் நிறுவனமயமாக்கப்பட்ட சிங்கள இராணுவம், இராணுவ உளவுத் துறை ஆகியவற்றின் நடவடிக்கைகளது உச்ச விளைவுதானே தவிர வேறன்று.

மனித உரிமைகளுக்கான தமிழ் மையம் 1956 முதல் 2007 முடிய பாதுகாப்புப் படையினர் பதினாயிரக் கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்திருப்பதை ஆவணப்படுத்தியுள்ளது.

போர் முடிந்ததிலிருந்து, 2015 செப்டெம்பர் ஐநா மனித உரிமை மன்றத் தீர்மானத்துக்கு முகங்கொடுக்கும் நிலையிலும் கூட, தமிழ்ப் பகுதிகள் மீதான இராணுவ ஒடுக்குமுறை தொடர்ந்துள்ளது.

குற்றங்கள் மீண்டும் நிகழாமல் இருப்பதற்கு வழிசெய்யும்படியான பாதுகாப்புத் துறைச் சீர்திருத்தமும் சட்ட நிறுவனச் சீர்திருத்தமும் செய்ய வேண்டும் என்பது இந்தத் தீர்மானத்தின் குறிப்பான கோரிக்கையாகும்.

இது மாற்றநோக்கு நீதியின் இன்றியமையா அடிக்கூறுகளில் ஒன்று. பாதுகாப்பு அமைச்சகத்தின் வலைத்தளத்தில் கண்டுள்ளபடி, நாட்டின் 20 படைப்பிரிவுகளில் 17 பிரிவுகள் மரபுவழித் தமிழ்ப் பகுதியான வடக்குகிழக்கில் நிற்கின்றன. வடக்கில் பெரும்பகுதியில் 5 தமிழ்க் குடிமக்களுக்கு ஒருவர் வீதம் சிங்களப் படையாள் நிற்கிறார்.

பிரித்தானியத் தமிழர் பேரவை தரும் கணக்குப்படி, வடக்கில் 68,000 ஏக்கர் தமிழருக்குச் சொந்தமான நிலம் இன்னும் இராணுவத்தின் பிடியில் உள்ளது.

வெளி அச்சுறுத்தல் ஏதும் இல்லாத இன்றைய நிலையில் படைநீக்கம் செய்வதற்குப் பதிலாக, உள்ளபடி நடப்பது என்னவென்றால் இராணுவத்தின் ஆள்வலு, செலவுத் திட்டம் இரண்டையும் அதிகமாக்கியுள்ளனர்.

இராணுவமும் அதன் உளவுப் பிரிவும் தமிழர் வாழ்விலும் நல்லதுகெட்டது அனைத்திலும் நீக்கமற மூக்கு நுழைக்கும் நிலை உள்ளது. இராணுவம் வணிகம் செய்கிறது, வேளாண் விளைபொருள் விற்பனை செய்கிறது, பயணியர் விடுதிகள் நடத்துகிறது, பள்ளிமுன்பருவக் கல்வி புகட்டுகிறது, வெகுநெருக்கமான குடும்பச் சடங்குகளில் கூட வந்து நிற்பேன் என்று வலியுறுத்துகிறது.
1983 யூலையும், அதையடுத்து இராணுவ ஒடுக்குமுறையின் நிறுவனமயமும் தமிழ்த் தேசிய இனச்சிக்கலின் தீர்வும் பின்னிப் பிணைந்து கிடக்கின்றன. சிங்கள மேலாதிக்கம் மிக்க தேசிய மன நிலைக்குள் ஆழப் பதிந்துள்ளன.

தமிழர் தாயகத்தின் படைநீக்கம் பொறுப்புக் கூறலுக்கும் தமிழ்த் தேசியச் சிக்கலின் அரசியல் தீர்வுக்கும் முன்தேவையாகும்.

கருப்பு யூலையை நினைவு கூரும் இந் நாளில் ஈழத் தமிழ் மக்களின் சுதந்திரத்திற்கும், நீதிக்கும், சமாதானத்திற்குமான கோரிக்கைக்கு ஆதரவு வழங்குமாறு சர்வதேச சமுதாயத்தை ஈழத்தமிழ் மக்கள் கோரி நிற்கின்றனர். இவ்வாறு பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
1983 கறுப்புயூலை நினைவேந்திலும் ஈழத்தமிழர்களின் சர்வதேசம் நோக்கிய கோரிக்கையும் : பிரதமர் வி.உருத்திரகுமாரன் Reviewed by NEWMANNAR on July 24, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.