அண்மைய செய்திகள்

recent
-

தனியார் கல்வி நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் : நீதிபதி இளஞ்செழியன் எச்சரிக்கை


பாலியல் வதை, போதைப் பொருள் பாவனை மற்றும் போதைப்பொருள் விற்பனை குற்றம் சாட்டப்படுகின்ற தனியார் கல்வி நிறுவனங்கள் உடனடியாக இழுத்து மூடப்படும். அந்த நிறுவனங்களின் பொறுப்பாளர்களுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இத்தகைய வழக்கு விசாரணைகள் முடியும் வரையில் சம்பந்தப்பட்ட தனியார் கல்வி நிறுவனங்கள் செயற்படுவதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நேற்று செவ்வாய்க்கிழமை யாழ் மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதைவஸ்து வழக்கு தொடர்பிலான பிணை மனு ஒன்றை ஆய்வு செய்தபோதே இவ்வாறு தனியார் கல்வி நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தனியார் கல்வி நிறுவனங்கள் டியுசன் வகுப்புக்கள் நடத்தும்போது மிகவும் பொறுப்போடு செயற்பட வேண்டும் என்றும் பாலியல்வதை, போதைவஸ்து பாவனை, போதைப்பொருள் விற்பனை போன்ற குற்றச்சாட்டுக்கள் எழாத வகையில் ஒழுக்க விழுமியங்களைப் பேணி நடந்து கொள்ள வேண்டும் என்றும் நீதிபதி இளஞ்செழியன் அறிவுறுத்தியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் கல்வி நிலையங்கள் பலவற்றில் பல குறைபாடுகள் காணப்படுகின்றன. சில தனியார் கல்வி நிலையங்கள் மாட்டுக் கொட்டகைகளைப் போன்று காணப்படுகின்றன.

இத்தகைய கல்வி நிறுவனங்களை அவற்றின் பொறுப்பாளர்களும் நிர்வாகிகளும் உடனடியாக சீரமைக்க வேண்டும். காற்றோட்டமுள்ள சுத்தமான மலசலகூட வசதி கொண்ட சுகாதாரத்திற்குப் பாதிப்பில்லாத வகையில் தனியார் கல்வி நிலையங்கள் நடைபெறுகின்றனவா என தனியார் கல்வி நிலையங்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்குகின்ற மாநகர சபை, நகர சபை, பிரதேச சபை அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் திடீர் பரிசோதனைகளை மேற்கொண்டு உறுதி செய்துகொள்ள வேண்டும்.

ஏதேனும் வசதி குறைபாடுகள், சுகாதாரப் பாதிப்புகள் தனியார் கல்வி நிறுவனங்களில் காணப்படுமேயானால் அவற்றுக்கு எதிராக சம்பந்தப்பட்ட அதிகாரரிகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாணவ, மாணவிகள் ஒன்று கூடுகின்ற தனியார் கல்வி நிலையங்கள் பாலியல்வதை, போதைபொருள் பாவனை மற்றும் போதைப்பொருள் விற்பனை போன்ற குற்றச்செயல்கள் இடம்பெறுவதற்கு வாய்ப்பான இடங்களாகக் கருதப்படுகின்றன.

போதைப்பொருள் விற்பனை செய்பவர்கள் தனியார் கல்வி நிலையங்களில் கூடுகின்ற மாணவர்களை இலக்கு வைத்து தமது போதைப்பொருள் வர்த்தகத்தை முன்னெடுக்கும் சந்தர்ப்பங்கள் அவதானிக்கப்பட்டிருக்கின்றன.

எனவே, தனியார் கல்வி நிலையங்களில் பாலியல்வதை குற்றம் இடம்பெற்றதாகவோ அல்லது போதைப்பொருள் பாவனை மற்றும் போதைப்பொருள் விற்பனை தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டால், அந்தக் கல்வி நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

பாலியல்வதை மற்றும் போதைப்பொருள் குற்றம் தொடர்பில் எவரேனும் தனியார் கல்வி நிலைய வளாகத்தினுள் கைது செய்யப்பட்டால், அது தொடர்பிலும் சம்பந்தப்பட்ட தனியார் கல்வி நிலையத்தின் பொறுப்பதிகாரி அதற்கான பொறுப்பை ஏற்று பதிலளிக்க வேண்டும.

இலங்கையில் வைத்தியசாலை தாதியர், சிறைச்சாலை பெண் உத்தியோகத்தர் போன்ற பெண்கள் தவிர வேறு பெண்கள் மாலை 6 மணியில் இருந்து அதிகாலை 6 மணிவரை இரவு நேர கடமையில் ஈடுபட முடியாது. தொழில்பார்க்கவும் முடியாது. ஆடைத் தொழிpற்சாலை பெண்கள் கூட மாலை 6 மணியின் பின்னர் வேலை செய்ய முடியாது.

எனவே தனியார் கல்வி நிலையங்கள் சூரியோதயத்தின் பின்னர் சூரியன் மறைவதற்கிடையிலான பகல் வேளைகளில் மாத்திரமே வகுப்புக்களை நடத்த வேண்டும். அதிகாலை வேளைகளிலும், இரவு வேளைகளிலும் வகுப்புக்கள் நடத்துவதைத் தனியார் கல்வி நிலையங்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

பெண்பிள்ளைகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலும் போதை விற்பனையும் அதிகரிக்கின்ற நேரங்களாக, இரவு நேரங்களே அமைந்திருக்கின்றன.

எனவே, தனியார் கல்வி நிலையங்கள், அதிகாலை வேளையிலும் இரவிலும் வகுப்புக்களை நடத்தி பாலியல்வதை மற்றும் போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகாமல் இருப்பது அவசியமாகும்.

மாணவிகள் அதிகாலையில் தனியார் கல்வி நிறுவனங்களில் வகுப்புகளுக்கு வரும்போதும், இரவு நேரத்தில் தனியார் கல்வி நிறுவனங்களின் வகுப்புக்கள் முடிந்து வீடு செல்லும்போதும், அவர்களுக்கு வீதிகளில் ஆபத்து வந்தால்கூட, தனியார் கல்வி நிறுவுனங்களில் வகுப்புக்கள் நடத்திய ஆசிரியரும் அந்த நிறுவனங்களின் பொறுப்பதிகாரியும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டிய நிலை ஏற்படும்.

எனவே, அவற்றைத் தவிர்த்து, மாணவிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி, தனியார் கல்வி நிறுவனங்களை, போதை வஸ்து பாவனை மற்றம் போதை வஸ்து விற்பனை இல்லாத பிரதேசமாக மாற்றியமைக்க வேண்டியது அனைத்து தனியார் கல்வி நிறுவன நிர்வாகிகளினதும் பொறுப்பாகும்.

முக்கியமாக பெண்கள் மீதான வன்செயல்களுக்கு, போதைவஸ்தே முக்கிய காரணியாக அமைந்துள்ளது என்பதை தனியார் கல்வி நிறுவனங்கள் கவனத்திற் கொள்ள வேண்டும்.

தனியார் கல்வி நிலையங்களுக்கு முன்னால் உள்ள வீதியோரங்களில் தனியார் கல்வி நிலையங்களுக்கு வரும் மாணவர்கள் கூடி நின்று கதைப்பதையும், அதனால், வீதியில் செல்வபர்களுக்கு அவர்கள் இடைஞ்சல் ஏற்படுத்துவதையும், தனியார் கல்வி நிலையங்கள் கவனித்து, மாணவர்கள் அவ்வாறு கூடி நிற்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு மாணவர்கள் வீதியோரங்களில் கூடி நிற்கும் சந்தர்ப்பங்களைத்தான், மாணவர்களுக்கு போதை வஸ்துக்களை இலகுவில் விற்பனை செய்வதற்கான வாய்ப்பாக போதைவஸ்து வியாபாரிகள் பயன்படுத்திக் கொள்கின்றார்கள்.

எனவே, போதை வஸ்து வியாபாரிகள் மாணவர்களை அணுக முடியாத வகையில், வகுப்புக்கள் முடிந்த பின்னர், மாணவர்களை கல்வி நிலைய வளாகத்தில் நிறுத்தி வைத்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

யாழ்ப்பாண சமூகத்திலிருந்து, போதை வஸ்துக்களை ஒழிப்பதற்கு அனைத்துத் தரப்பும் தமக்குரிய கடமைகளில் இருந்து தவற முடியாது என்ற அடிப்படையிலேயே இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகின்றன என்று நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.

இந்த அறிவுறுத்தல்களை மாநகர சபை மற்றும் நகர சபை ஆணையாளர்கள், பிரதேச சபை செயலாளர்களுக்கு நடவடிக்கைக்காக அனுப்பி வைக்குமாறு யாழ் நீதிமன்ற பதிவாளுக்கு நீதிபதி பணித்துள்ளார்

தனியார் கல்வி நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் : நீதிபதி இளஞ்செழியன் எச்சரிக்கை Reviewed by Author on July 06, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.