ஐரோப்பிய யூனியனின் தலைமை பதவி: பிரித்தானியாவின் அதிரடி முடிவு...
ஐரோப்பிய யூனியன் தலைமைப் பதவியை அடுத்த ஆண்டு சுழற்சி முறையில் ஏற்கப்போவதில்லை என்று பிரித்தானியா திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
ஐரோப்பிய யூனியனில் பிரித்தானியாஅங்கம் வகிப்பது குறித்து அந்த நாட்டில் கடந்த மாதம் 23ம் திகதி மக்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதில் ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரித்தானியா விலகுவதற்கு பெரும்பாலான மக்கள் ஆதரவு தெரிவித்தனர்.
இதையடுத்து, ஐரோப்பிய யூனியனில் பிரிட்டன் தொடர்ந்து இணைந்திருக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்த அப்போதைய பிரதமர் டேவிட் கமரூன் பதவி விலகினார்.
இதைத் தொடர்ந்து அவருக்குப் பதிலாக, உள்துறை அமைச்சராக இருந்த தெரசா மே புதிய பிரதமராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் ஐரோப்பியன் யூனியன் தலைமைப்பதவியை சுழற்சி முறையில் ஏற்கும் திட்டத்தை கைவிட்டுவிட்டு, ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறுவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கே முக்கியத்துவம் அளிக்க விரும்புவதாக தெரசா மே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரித்தானிய பிரதமர் தெரசாமேயின் அலுவலக செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ஐரோப்பியக் கவுன்சிலில் தலைமைப் பதவியை அடுத்த ஆண்டின் பிற்பகுதியில் 6 மாதங்களுக்கு சுழற்சி முறையில் பிரித்தானியா ஏற்பதாக திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால் இதை விட பொதுவாக்கெடுப்பில் மக்கள் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட விரும்புவதாக ஐரோப்பியக் கவுன்சில் தலைவர் டொனால்டு டஸ்கிடம் தெரசா மே தொலைபேசியில் தெரிவித்தார்.
பிரதமர் தெரசா மேயின் இந்த முடிவை டொனால்டு டஸ்கியும் வரவேற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய யூனியனின் தலைமை பதவி: பிரித்தானியாவின் அதிரடி முடிவு...
Reviewed by Author
on
July 21, 2016
Rating:

No comments:
Post a Comment