பொருளாதார மத்திய நிலையம் தொடர்பில் முதலமைச்சரே முடிவு எடுப்பார்: வவுனியாவில் இரா.சம்பந்தன்!
வவுனியாவில் அமைக்கப்படவுள்ள பொருளாதார மத்திய நிலையம் தொடர்பில் முதலமைச்சரே முடிவு எடுப்பார் என எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற மற்றும் வடக்கு, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கான கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை வவுனியாவில் இடம்பெற்றதன் பின்னர் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளை சந்தித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
வவுனியாவில் நிறுவப்படவுள்ள பொருளாதார மத்திய நிலையத்தை எங்கு அமைப்பது என்பது தொடர்பில் குழப்பநிலை நீடிக்கிறது.
சுகயீனம் காரணமாக கூட்டமைப்பின் இந்தக் கூட்டத்திற்கு வடக்கு முதலமைச்சர் அவர்கள் கலந்து கொள்ளமாட்டார் என அறிந்து இரண்டு தினங்களுக்கு முன்னர் அவரைச் சந்தித்து பேசியிருந்தேன்.
அப்பொழுது பொருளாதார மத்திய நிலையம் தொடர்பிலும் கலந்துரையாடியுள்ளேன்.
அது எங்கு அமைப்பது என்பது தொடர்பில் வடக்கின் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், வடமாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோருடன் பேசி முதலமைச்சர் இறுதி முடிவு எடுப்பார்.
அது விரைவாக எடுக்கப்பட வேண்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் இந்த விடயத்தில் குழப்பம் காணப்படுகின்றது.
பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இது பற்றி உறுப்பினர்களுடன் பேசி பொது முடிவுக்கு வர முயற்சி எடுப்பார்.
ஓமந்தை, தாண்டிக்குளம், மூன்று முறிப்பு காணிகள் குறித்தும் முதலமைச்சர் தெரிவித்தார். ஓமந்தையே சிறந்தது எனத் தெரிவித்தார். அதில் அமைக்க முடியாது போனால் மூன்று முறிப்பு காணியில் அமைக்க வேண்டும் எனவும் கலந்துரையாடினார்.
அது நீண்டகால குத்தகைக்கு கொடுக்கப்பட்டதாக கூறப்படுவதாக நீங்கள் தான் சொல்கிறீர்கள். ஆனால் அப்படி கொடுக்கப்படவில்லை, அதனை விடுவிக்க முடியும் என முதலமைச்சர் கூறியுள்ளார்.
இது தொடர்பில் விரைவாக முடிவு எட்டப்பட வேண்டும்.நாங்கள் ஏற்கனவே இது தொடர்பில் உறுப்பினர்களுடன் கலந்துரையாடி ஜனநாயக ரீதியாக முடிவெடுக்குமாறு கூறியுள்ளேன்.
நான் ஒரு ஜனநாயகவாதி. ஆயுதம் தூக்கவில்லை. வன்முறைகளை மேற்கொள்ளவில்லை. அதனால் இந்த விடயத்திலும் ஜனநாயக ரீதியாகவே முடிவுகள் எட்டப்பட வேண்டும். விரைவாக முடிவினை முதலமைச்சர் எடுத்து அதனை அறிவிப்பார் எனவும் தெரிவித்தார்.
இதேவேளை, இதன்போது வவுனியா விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைக்க வேண்டும் என எதிர்கட்சித்தலைவரிடம் மனு ஒன்றினை கையளித்திருந்ததுடன், வவுனியா மொத்த மரக்கறி விற்பனை சங்கத்தினரால் தாண்டிக்குளத்தில் அமைக்க வேண்டும் எனவும் மனு ஒன்று கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பொருளாதார மத்திய நிலையம் தொடர்பில் முதலமைச்சரே முடிவு எடுப்பார்: வவுனியாவில் இரா.சம்பந்தன்!
Reviewed by Author
on
July 17, 2016
Rating:

No comments:
Post a Comment