இரா.சம்மந்தனுக்கு தமிழ் அரசியல் கைதிகள் அவசர கடிதம்!
தாமதப்படும் எமது விடுதலை தொடர்பாக ஜனாதிபதி, பிரதமருடன் பேசி உடனடியாக தீர்வு எடுங்கள் என எதிர்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்மந்தனுக்கு அனுராதபுரம் சிறைச்சாலை தமிழ் அரசியல் கைதிகள் இன்று கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளனர்.
அக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
'ஐயா கடந்த 2015.10.18 அன்று எம்மால் மேற்கொள்ளப்பட்ட உண்ணாவிரதப்போராட்டதில் நான் ஜனாதிபதியை நம்புகின்றேன்.
நீங்களும் ஜனாதிபதியை நம்புங்கள். நிச்சயம் நான் உங்களுக்கு ஒரு தீர்வைப் பெற்றுத் தருவேன் என்ற வாக்குறுதியை அளித்து எமது உண்ணாவிரதப்போராட்டத்தை முடிவுக் கொண்டு வந்தீர்கள்.
ஆனால் தங்களால் வழங்கப்பட்ட உறுதிமொழிகளின் படி கைதிகளின் விடுதலை தொடர்பாக இதுவரை ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படாமல் காலத்தை தாமதிக்கும் செயற்பாட்டின் ஊடாக நாம் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டு வருகின்றோம்.
8- 15 வருடங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள எம்மை சட்ட நடவடிக்கை அல்லது விசேட நீதிமன்றம் அமைத்து விடுதலை செய்வது என்பது காலத்தை இழுத்தடித்து எம்மை பழிவாங்கும் ஒரு செயற்பாடாகவே எம்மால் உணரமுடிகிறது.
விசேட நீதிமன்றம் என்பது தங்களையும், தமிழ் மக்களையும், சர்வதேசத்தையும் ஏமாற்றும் ஒரு தந்திரமான செயற்பாடே.
மேலும் தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட மறுக்கப்பட்ட நீதிக்கு சமம் என்பது தாங்கள் அறியாதது ஒன்றல்ல.
இவ்வாறான செயற்பாடுகளினால் தாமதம் அடைந்து கொண்டு செல்லும் எமது விடுதலை தொடர்பில் அதிக கரிசணை கொண்டு விரைவான தீர்வை பெற்றத் தர வலியறுத்தி முதல் கட்டமாக 08.08.2016 அன்று அடையாள உண்ணாவிரதம் மேற்கொள்ளவுள்ளோம்.
இந்த நாட்டில் ஒரு ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்ட போதிலும் எந்தவொரு மாற்றமும் தென்படவில்லை. அரச தலைவர் மட்டுமே மாறியுள்ளார்.
அரச இயந்திரம் மாறமால் உள்ளதை தாங்களும் அறிவீர்கள் என நம்புகின்றோம்.
எமது விடுதலை தொடர்பில் சட்டமாஅதிபத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளின் ஊடாக இதனை நன்கு உணரமுடிகின்றது.
அவை பின்வருமாறு, தமிழ் பிரதேச நீதிமன்றங்களில் உள்ள எமது வழக்குகளை சிங்கள பிரதேசங்களுக்கு மாற்றுவது, நீண்டகாலமாக தடுத்து வைத்துவிட்டு புதிய புதிய வழக்குகளை தாக்கல் செய்வது, 3- 4 மாதங்கள் என்ற அடிப்படையில் காலத்தை இழுத்தடித்தல், சட்டா அதிபர் சார்பில் ஆஜராகும் சட்டத்தரணிகள், பயங்கரவாத விசாரணைப்பிரிவு அதிகாரிகள் என்போர் தொடர்ந்தும் முன்னைய நாள் அரச தலைவரினதும், கோத்தபாய ராஜபக்சவின் கையாளவும் செயற்படுகின்றமை என்பன நடைபெற்றுவருகின்றது.
உண்மையான நல்லிணக்கம் தமிழ் மக்களின் மனங்களை வெல்வதே ஆகும். எனவே எமது விடுதலை என்பது மேற்கொள்ளப்படாது வெறுமனே வாயால் கூறிக் கொண்டிருப்பது நல்லிணக்கத்திற்கான அறிகுறி அல்ல.
மேற்கூறிய விடயங்களினை கவனத்தில் எடுத்து எமது விடுதலை தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரா.சம்மந்தனுக்கு தமிழ் அரசியல் கைதிகள் அவசர கடிதம்!
Reviewed by Author
on
August 06, 2016
Rating:
Reviewed by Author
on
August 06, 2016
Rating:


No comments:
Post a Comment