சர்ச்சையில் ஆரம்பமாகி குழப்பத்தில் முடிந்த முசலி பிரதேச செயலக ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்-Photos
மன்னார் மாவட்டம் முசலி பிரதேசச் செயலக ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்று (30) வெள்ளிக்கிழமை காலை முசலி பிரதேசச் செயலகத்தின் கேட்போர் கூடத்தின் அபிவிருத்திக்குழு இணைத்தலைவர்கள் தலைமையில் இடம் பெற்ற போதும் குறித்த கூட்டம் சர்ச்சையில் ஆரம்பமாகி குழப்ப நிலையில் முடிவடைந்துள்ளது.
இவ்விடையம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,,,
முசலி பிரதேச செயலக ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம், இன்று வெள்ளிக்கிழமை(30) காலை 10.30 மணியளவில் முசலி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நானாட்டான் பிரதேச செயலாளரும், முசலி பிரதேச செயலக பதில் செயலாளருமான மரியதாசன் பரமதாசனின் நெறிப்படுத்தலில் ஆரம்பமானது.
இதன் போது அபிவிருத்தி குழு இணைத்தலைவர்களான அமைச்சர் றிஸாட் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன் , கே.கே.மஸ்தான் மற்றும் முதலமைச்சரின் பிரதிநிதியும், வட மாகாண அமைச்சருமான பா. டெனீஸ்வரன், ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
பிரதேச செயலக ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்திற்கான உரிய ஏற்பாடுகள் பூர்த்தி செய்யாத நிலையில் பல்வேறு அசௌகரியங்கள் அங்கு ஏற்பட்டிருந்தது.
முசலி பிரதேசச் செயலாளர் சமூகமளிக்காத நிலையில் முசலி பிரதேச செயலக பதில் செயலர் தலைமையில் இடம் பெற்றது.
இதன் போது இணைத்தலைவர்களுக்கு தனித்தனியாக ஒலிவாங்கிகள் வைக்கப்படாது பொதுவான ஒலிவாங்கியை பயண்படுத்தி இணைத்தலைவர்கள் உரை நிகழ்த்தினர்.
மேலும் இணைத்தலைவர்கள் மற்றும் வருகை தந்த திணைக்கள தலைவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய வேளைத்திட்டம் தொடர்பான அறிக்கை அடங்கிய கையேடுகள் வழங்கப்படவில்லை.
இதனால் அங்கு பல்வேறு பிரச்சினை ஏற்பட்டது.
-முசலி பிரதேசத்தின் பல்வேறு அபிவிருத்திகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
குறிப்பாக அப்பிரதேசத்தின் குடி நீர்,சுகாதாரம்,வைத்தியம்,கால் நடை வளர்ப்பு,விவசாயம்,மின்சார வசதி,வீதி,போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு வேளைத்திட்டங்கள் தொடர்பாகவும்,குறித்த வேளைத்திட்டத்தில் உள்ள குறை நிறைகள் தொடர்பாகவும் ஆரயப்பட்டது.
-இதன் போது அங்கு கலந்து கொண்ட கிராம மட்ட நிர்வாக பிரதி நிதிகள் முசலி பிரதேசச் செயலகம் மீதும் குறிப்பிட்ட சில திணைக்கள அதிகாரிகள் தொடர்பிலும் அவர்களின் சுய நல செயற்பாடுகள் குறித்தும் நேரடியாக இணைத்தலைவர்களிடம் தெரிவித்தனர்.
-குறிப்பாக முசலி பிரதேசத்தில் உள்ள விவசாய குளங்கள் புனரமைப்பு செய்யாத நிலையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள்,அங்குள்ள வைத்தியசாலை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள வைத்தியர் தட்டுப்பாடு,உற்பட முசலி பிரதேசத்தில் உள்ள பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக இணைத்தலைவர்களின் கவனத்திற்குகொண்டு சென்றனர்.
-மேலும் முசலி பகுதியில் தொடர்ச்சியாக சட்ட விரோதமான முறையில் மண் அகழ்வு இடம் பெற்று வருவதாகவும்,குறித்த நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது.
அதற்கு அமைவாக இனி வரும் காலங்களில் தனிப்பட்ட முறையில் மண் அகழ்வுக்கான அனுமதிப்பத்திரம் புதிதாக வழங்குவதை தடை செய்வதாகவும்,இவ்விடையம் தொடர்பில் முசலி பிரதேசச் செயலாளர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அமைச்சர் றிஸாட் பதியுதீன் தெரிவித்தார்.
தொடர்ச்சியாக குறித்த கூட்டத்தை உரிய முறையில் நடத்த முடியாத நிலை ஏற்பட்டதோடு, அழைக்கப்பட்டவர்களை விட மேலதிகமானவர்கள் குறித்த கூட்டத்தில் கலந்து கொண்டு தமது பிரச்சினைகளை கூறியமையினால் குறித்த கூட்டத்தில் நீண்ட நேரம் சல சலப்பு ஏற்பட்டது.
இதனால் முசலி மக்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் உள்ளமை குறித்த கூட்டத்தில் இருந்து தெரிய வந்துள்ள போதும் உரிய முடிவுகள் எவையும் எட்டப்படாத நிலையில் முசலி பிரதேச ஒருங்கிணைப்பக்குழு கூட்டம் நிறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சர்ச்சையில் ஆரம்பமாகி குழப்பத்தில் முடிந்த முசலி பிரதேச செயலக ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்-Photos
Reviewed by NEWMANNAR
on
September 30, 2016
Rating:

No comments:
Post a Comment