மட்டக்களப்பு அங்கொடையாக மாறிவிடும் அபாயம்!
ஒக்டோபர் 10ஆம் திகதி சர்வதேச மனநல தினம் (World Mental Health Day, October 10 ) உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
மனிதனின் அனைத்து வெற்றி தோல்விகளுக்கும் அவன் மனமே மூலமாக இருக்கிறது என்றால் மிகை இல்லை. உடலால் நன்றாக இருந்து மனதால் பாதிக்கப்பட்டுள்ள உள்ளங்களுக்கு ஆறுதல் அளிக்க வலியுறுத்தியே உலக மனநல தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
"கௌரவமான கண்ணியமான உளநலம் உளவியல்சார், மனநலம் சார் முதலுதவிகள்" எனும் தொனிப் பொருளில் அனுஷ்டிக்கப்படும் உலக உளநல தினத்தை முன்னிட்டு சுகாதார ஊழியர்களை தெளிவூட்டும் நிகழ்வு களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் டாக்டர் கு.சுகுணன் தலைமையில் நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையினுடைய உள நல வைத்திய நிபுணர் Dr.தனபாலசிங்கம் கடம்பநாதன் கலந்து கொண்டு சுகாதார ஊழியர்களுக்கான உள நல நோயாளர்கள் மற்றும் இதற்கான காரணங்கள் பற்றி தெளிவு படுத்தினார்.
உளநல வைத்திய நிபுணர் தொடர்ந்து உரையாற்றுகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள எங்களுடைய நோயாளிகள் எந்தளவு தூரம் கௌரவமான கண்ணியமாகவும் சமூகத்தால் நடத்தப்படுகிறார்கள் என்ற வகையில் பார்க்கும் போது நாங்கள் நிறைய விடையங்களை செய்ய வேண்டியதாக இருக்கிறது.
இந்த சமூகவடு சமூகநாணயம் என்று சொல்வது பத்து வருடங்களுக்கு முன்பு இருந்ததனை விட குறைவடைந்திருந்தாலும் தற்போதும் இவை இருந்து கொண்டுதான் இருக்கிறது எனக் குறிப்பிட்டார்.
மன நோயாளிகளின் தொடர்ச்சியான பராமரிப்பு தொடர்பாக எங்களுடைய மாவட்டத்தில் குடும்ப மக்கள் குடும்ப அங்கத்தவர்களிடத்தில் கூடுதலான ஒரு பிரச்சினையாக எதிர் நோக்குகிறார்கள்.
பதிவு செய்யப்பட்ட நோயாளிகள், மருந்து எடுக்க வேண்டிய நோயாளிகளுக்கு குடும்பத்தவர்கள் குறித்த பங்கினை ஆற்ற முடியாத காரணத்தாலும் சரியாக தொடர்ச்சியாக மருந்துகளை எடுக்க தவறுவதனாலும் இப்படியான நிலைகளில் நோய் மிகவும் முற்றிய நிலையில் இறுதியாக அவசர பொலிஸ் பிரிவின் ஊடாகவோ அல்லது 119 ஊடாகவோ அல்லது சிறைச்சாலைகள் ஊடாகவோ நீதிபதிகள் ஊடாகவோ வைத்தியசாலைக்கு வருகிறார்கள் இது ஒரு பாரிய சவாலாக இருக்கிறது.
பொதுவாக எங்களுடைய கலாச்சாரத்தினை பொறுத்த வரையில் ஒரு குறிப்பிட்ட நபரினை அந்த குடும்ப அங்கத்தவர்கள் பொலிஸாரிடம் கொடுப்பது அல்லது சிறைச்சாலைக்கு அனுப்புவது என்பது ஒரு இலகுவான காரியமாக இருந்திருக்கவில்லை.
ஆனால் இன்றைய போக்கில் மனநோயாளிகள் அந்த ஒரு கட்டத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார்களா என்ற ஒரு கேள்வி வருகிறது என குறிப்பிட்டார்.
குடும்ப அங்கத்தவர்களிடையே மனநோயாளிகளைப் பராமரிப்பது தொடர்பில் கூடுதலான அறிவினை புகட்ட முடியும். அதே போல் குடும்ப அங்கத்தவர்களால் குடும்பத்தில் அவர்களை பராமரிக்க முடியும் என்ற நம்பிக்கையினை அவர்கள் மத்தியில் எப்படி வளர்க்க முடியும்?
அதேபோல் இப்போது இருக்கின்ற இந்த போக்கினை எப்படி மாற்ற முடியும் என்பது தொடர்பில் நாங்கள் மிகவும் நிதானமாக சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். அப்படி இல்லா விட்டால் மீண்டும் ஒரு அங்கொடை வைத்தியசாலை போன்ற நிலமை மட்டக்களப்பில் தோன்றும் அபாயம் உள்ளதாக என உள நல வைத்திய நிபுணர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் காத்தான்குடி சிரேஷ்ட உள நல வைத்திய அதிகாரி Dr.சுசிகலா பரமகுலதாஸ், உள நல சமூக மருத்துவ உத்தியோகஸ்தர் நா.நித்தியானந்தம் மற்றும் வைத்தியசாலையின் வைத்தியர்கள் தாதியர்கள் மருந்தாளர்கள் வைத்தியசாலை உத்தியோகஸ்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு அங்கொடையாக மாறிவிடும் அபாயம்!
Reviewed by Author
on
October 13, 2016
Rating:

No comments:
Post a Comment