நாம் அழுகின்ற கண்ணீரில் நீங்களும் இணைகின்றீர்கள்
யாழ்ப்பாணம் கொக்குவில் குளப்பிட்டிப் பகுதியில் வைத்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த மாணவர்களை பொலிஸாரே சுட்டுக் கொன்றதாகவும் சந்தேகத்தின் பேரில் ஐந்து பொலிஸாரைக் கைது செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளிப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் என்பது சாதாரண விடயமல்ல.
இது மீண்டும் வடபுலத்தில் சுட்டுக் கொல்லும் கலாசாரத்தை அரங்கேற்றுவதற்கானது என்றே கூற முடியும்.
நல்லாட்சியில் ஒரு அமைதிநிலை ஏற்பட்டுள்ளது என்று மக்கள் நம்பியிருக்க, அந்த நம்பிக்கையை நிர்மூலமாக்கும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட வெறியாட்டம் நடந்தேறியுள்ளது.
இச்சம்பவம் தமிழ் மக்களின் வாழ்வு இப்போதும் எப்படி இருக்கிறது என்பதைக் கோடிகாட்டியுள்ளது.
மாணவர்கள் இருவரின் கொலை தொடர்பில் சரியான விசாரணை தேவை என்று கேட்பதெல்லாம் ஒரு மடமைத்தனமான விடயம்.
இத்தகைய கோரிக்கைகளை அரசின் முந்தானையைப் பிடித்திருக்கும் பதவிப் பித்தர்கள் மட்டுமே கேட்பார்கள்.
இத்தகையதொரு கொலை தென்பகுதியில் நடந்திருக்குமாயின் நல்லாட்சியின் ஆயுள் அன்றோடு முடிந்திருக்கும்.
மாறாக தென்பகுதியைச் சேர்ந்த யாழ்.பல்கலைக் கழக மாணவர்கள் இருவர் மேற்படி சூட்டுச் சம்பவத்தில் யாழ்ப்பாணத்தில் பலியாகியிருந்திருந்தால், நிலைமை எப்படியாக அமையும் என்பதை நாம் சொல்லி எவரும் தெரிந்து கொள்ள வேண்டியிராது.
ஆனால், பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் பலியானதாகக் கூறப்படுவது யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் தமிழ் மாணவர்கள் என்பதால் உடனடி யாக விசாரணை வேண்டும் என்பதோடு இழந்த வருக்கே இழப்பு என்பதாகக் கதை முடிந்துவிடும் - முடிக்கப்படும்.
இதற்கு அடிப்படைக் காரணம் தமிழ் அரசியல் தலைமையின் பலயீனம் என்பது மறுக்க முடியாத உண்மை.
வன்னி யுத்தம் தொடர்பில் சர்வதேச விசாரணை தேவை என்று வலியுறுத்தி, சர்வதேச விசாரணைக்கு வழிவகுத்திருந்தால் - அதன்வழி குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைக்க வகை செய்திருந்தால் மட்டுமே படைத்தரப்பு பயந்திருக்கும்.
அதைச்செய்யாத தமிழ்த் தலைமையின் கொடு மைத்தனத்தால், தமிழன் எவனையும் எந்த இடத்திலும் வைத்துச் சுட்டுக்கொல்லலாம் என்று பாதுகாப்புத் தரப்பு நினைக்கலாயிற்று.
உடனடியாக விசாரணை தேவையயன்று வழமைப்படி உளறுகின்றவர்கள்; இந்த நாட்டில் நடந்த விசாரணை குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கியதாக நம்புகிறார்கள் போலும். இவர்களுக்கு ஓர் உண்மை தெரியவில்லை.
நேற்று முன்தினம் சுட்டுக்கொல்லப்பட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் கொலை தொடர்பில் விசாரணை நடைபெறும். சம்பிரதாயச் சடங்குக்காக பொலிஸார் சிலர் கைது செய்யப்படுவர்.
ஐந்து ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் சுட்ட துப்பாக்கியைக் காணவில்லை என்றோ அல்லது சுட்டவர் மனக்குழப்பத்தில் இருந்தார் என்றோ கதை முடியும்.
அப்போது, விசாரணை தேவை என்று இன்று கூறுவோர் அடுத்த தேர்தலுக்காக ஆசாடபூதிகளாக கும்பிடுவேடத்தில் தமிழ் மக்களிடம் வாக்குக் கேட்பர். இதுவே எங்களின் தலைவிதி.
என்ன செய்வது! உயிரிழந்த எம் இனிய சோதரர்களே! நாம் நாளாந்தம் விடுகின்ற கண்ணீரில் உங் களுக்கும் இடம் ஒதுக்குவதைத் தவிர எங்களால் வேறென்னதான் செய்ய முடியும்?
ஆத்ம சாந்தி என்றொன்று இருந்தால் அது உங் களுக்கு கிடைக்கட்டும். இல்லை; மறுபிறப்பு உண்டெனில் ஈழத் தமிழனாகப் பிறவாதிருக்க இறைவனைப் பிரார்த்தனை செய்கின்றோம்.
வலம்புரி
நாம் அழுகின்ற கண்ணீரில் நீங்களும் இணைகின்றீர்கள்
Reviewed by NEWMANNAR
on
October 22, 2016
Rating:

No comments:
Post a Comment