வடக்கு விவசாய அமைச்சில் 203 பதவி வெற்றிடங்கள்!
வடக்கு மாகாண விவசாய அமைச்சில் 203 வெற்றிடங்கள் வெற்றிடங்கள் காணப்படுவதாக தெரிவித்துள்ள அமைச்சர் ஐங்கரநேசன், திணைக்களங்களினால் மேற்கொள்ளப்படும் வேலைகளை வினைத்திறனுடன் முன்னெடுத்து உரிய காலத்தில் விளைபயன் மிக்கதாக நிறைவுறச் செய்வதில் நிர்வாகரீதியாக நாங்கள் பல சவால்களை எதிர்கொள்ளவேண்டியுள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேற்படி அமைச்சின் 2017 ஆண்டுக்கான ஒதுக்கீட்டை சபையில் சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மாகாண விவசாயத் திணைக்களத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்துப் பதவிகளுக்குமான 607 ஆளணியில் தற்போது 404 ஆளணியினரே கடமையாற்றி வருகின்றனர். அதாவது 203 வெற்றிடங்கள். அவற்றை நிரப்புவதற்கு நாங்கள் மேற்கொண்டுவரும் பகீரத எத்தனங்களையும் மீறி அவை இன்னமும் நிரப்பப்படாமலேயே உள்ளன.
இலங்கை விவசாய சேவைத் தரத்தினர் (17 வெற்றிடம்)
இலங்கை விவசாய சேவைக்குரிய உயர்மட்டப் பணிநிலைகளாக மாகாண விவசாயப் பணிப்பாளர், மேலதிக மாகாண விவசாயப் பணிப்பாளர்,பிரதி விவசாயப் பணிப்பாளர்கள், உதவி விவசாயப் பணிப்பாளர்கள் ஆகிய பணிநிலைகள் விளங்குகின்றன. மாகாண விவசாயத் திணைக்களத்தில் உதவிப்பணிப்பாளர்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட ஆளணி 14.ஆனால்,இந்தப் பணிநிலையில் இன்று எவருமே நியமனம் பெறவில்லை. பிரதிப் பணிப்பாளர்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட ஆளணி 06 ஆக இருந்தபோதும் 04 உத்தியோகத்தர்கள் மாத்திரமே பணிபுரிகின்றனர்.
கிளிநொச்சி மாவட்டப் பிரதி விவசாயப்பணிப்பாளருக்கான ஆளணி நிரப்பப்பட முடியாத நிலையில், தற்போது ஒப்பந்த அடிப்படையில் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். மேலதிக மாகாண விவசாயப் பணிப்பாளருக்கான அனுமதிக்கப்பட்ட ஆளணி ஒன்றாக இருந்தபோதும் அந்த ஒன்று கூட இன்னமும் நிரப்பப்படாமல் வெற்றிடமாகவே நீடிக்கிறது. இலங்கை விவசாய சேவைத் தரத்தில் மொத்தமாக 24 ஆளணியினர் பணிபுரியவேண்டியவடக்கு விவசாயத் திணைக்களத்தில் தற்போது 05 உத்தியோகத்தர்கள் மாத்திரமே எல்லோரது கடமைகளையும் சேர்த்துச் சுமக்கின்றனர்.மாகாண விவசாய அமைச்சின் பணிகளை மாத்திரம் அல்லாது, தேசிய உணவு உற்பத்தித் திட்டம் போன்ற மத்திய அரசின் திட்டங்களையும் இந்தக் குறைந்த ஆளணியின் மூலமே நிறைவேற்ற வேண்டியும் உள்ளது.
விவசாயப்போதனாசிரியர்கள் (58 வெற்றிடம்)
விவசாயிகளுடன் நேரடியாகத் தொடர்பாடி விரிவாக்க சேவையை முன்னெடுப்பதில் விவசாயப் போதனாசிரியர்களின் பங்களிப்பு மிகவும் இன்றியமையாதது. அனுமதிக்கப்பட்ட 161 விவசாயப் போதனாசிரியர்களது ஆளணியில் தற்போது 103 விவசாயப் போதனாசிரியர்களே கடமையாற்றி வருகின்றனர். 58 வெற்றிடங்கள் நிலவுகின்றன.இப்பதவிக்கான ஆட்சேர்ப்புத் திட்டத்தில் கோரப்பட்டுள்ள தகுதியான விவசாய டிப்ளோமாவைப் பூர்த்தி செய்தவிண்ணப்பதாரிகள் போதியளவு இல்லாத காரணத்தால் இந்த வெற்றிடங்களை நிரப்பமுடியாத நிலையே நீடிக்கிறது.
இவ்வெற்றிடங்களை ஓரளவு நிவர்த்தி செய்வதற்காக க.பொ.த உயர்தரத்தில் விஞ்ஞான பாடத்தில் மூன்று பாடங்களிலும் சித்தியடைந்த விண்ணப்பதாரிகளை விவசாயப் போதனாசிரியர் பயிற்சித்தரம் என்னும் பதவிக்குள் ஆட்சேர்ப்புச் செய்து இலங்கை விவசாயக் கல்லூரிகளுக்கு விடுவித்து விவசாய டிப்ளோமாவை (N.V.Q. Level – 6)பூர்த்தி செய்ய வைப்பதன் மூலம் விவசாயப் போதனாசிரியர்களாக நிரந்தர நியமனம் வழங்கப்படுகிறது.
தொழில்நுட்ப உதவியாளர் (விவசாய விரிவாக்கம்) (110 வெற்றிடம்)
தொழில்நுட்ப உதவியாளர் (விவசாய விரிவாக்கம்) பதவிக்கு அனுமதிக்கப்பட்ட 140 ஆளணியில் 30 உத்தியோகத்தர்களே கடமையாற்றி வருகின்றனர். இப்பதவிக்கான ஆளணியும் முழுமையாக நிரப்பப்படாமைக்கு விவசாய டிப்ளோமாவைப் பூர்த்தி செய்த விண்ணப்பதாரிகள் பற்றாக்குறைவாக இருப்பதே காரணம் ஆகும்.
அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் (16 வெற்றிடம்)
அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான அனுமதிக்கப்பட்டுள்ள ஆளணி 65. இவ்வாளணியில் தற்போது 16 வெற்றிடங்கள் நிலவுகின்றன. திணைக்களத்தின் நிதி, நிர்வாக மற்றும் தொழில்நுட்பக் கடமைகளை வினைத்திறனாக முன்னெடுப்பதில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களது பங்களிப்பு மிகவும்இன்றியமையாதது. வேறு திணைக்களங்களில் விவசாயப் பட்டதாரிகளாக உள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்களை விவசாயத் திணைக்களத்தில் கடமையாற்றுவதற்கு ஏதுவாக விடுவிப்பின்; விவசாய அபிவிருத்திச் செயற்பாடுகளை வினைத்திறனாக முன்னெடுத்துச்செல்ல இயலும்
விவசாயத் திணைக்களம் ஆளணிப் பற்றாக்குறையால் சேவைகளை வழங்குவதில் கடும் நெருக்கடிகளை எதிர் கொண்டபோதும் தன் சக்திக்கு மீறி உழைத்ததன் காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய சில அடைவுகளை எட்டியிருக்கிறது என்பதை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.
வடக்கு விவசாய அமைச்சில் 203 பதவி வெற்றிடங்கள்!
Reviewed by Author
on
December 23, 2016
Rating:
Reviewed by Author
on
December 23, 2016
Rating:


No comments:
Post a Comment