கேப்பாப்புலவு மக்களின் தொடர் போராட்டம்! ஜனாதிபதிக்கு சிறிதரன் எம்.பி கடிதம்....
முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச காலத்தில் பல ஜனநாயக வழிப்போராட்டங்களை நடத்தி தமது கோரிக்கைகளை முன்வைத்த போதும் அவர்களின் மீள்குடியேறும் உரிமை தடுக்கப்பட்டமை அவர்களின் அடிப்படை உரிமையைப் பறிக்கின்ற செயலாக அமைந்திருந்தது என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், ஜனாதிபதிக்கு இன்று அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்தும் அந்த கடிதத்தில் அவர் தெரிவிக்கையில்,
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் அமைந்துள்ள கேப்பாப்புலவு கிராம மக்கள் தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி தொடர்ச்சியாக முன்னெடுத்து வரும் ஜனநாயக வழிபோராட்டம் தொடர்பில் தங்கள் விரைவான நடவடிக்கையினை எதிர்பார்த்து இக்கடிதத்தை எழுதுகின்றேன்.
மேற்படி கிராமத்தில் 186 குடும்பங்கள் தமக்குச் சொந்தமான 485 ஏக்கர் காணியில் ஏழு தலைமுறைகளாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள். 2008.11.24 இறுதியுத்தம் நடைபெறும் வரையில் குறித்த காணிகளில் வாழ்ந்த மக்கள் மீள்குடியேற்றத்தின் போது அவர்கள் மீள்குடியமர பலவந்தமாக தடுக்கப்பட்டிருக்கிறார்கள்.
இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் பல ஜனநாயக வழிப்போராட்டங்களை நடத்தி கோரிக்கைகளை முன்வைத்த போதும் அவர்களின் மீள்குடியேறும் உரிமை தடுக்கப்பட்டமை அவர்களின் அடிப்படை உரிமையைப் பறிக்கின்ற செயலாக அமைந்திருந்தது.
தற்போது தங்களது நல்லாட்சி உருவாக்கப்பட்ட போது உங்கள் மீது அந்த மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை அதிகமானது. நீதி புரளாது நேர்மையான முறையில் தங்களின் நியாயமான உரிமை கிடைக்கும் என்று கேப்பாப்புலவு மக்களும் நம்பிக்கை கொண்டிருந்தனர்.
ஆனால் தங்களது குடும்பத்தினரோடு நடுத்தெருவில் இரவு பகலாக உணவு தவிர்த்து போராடவும் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளமை மிகுந்த வருத்தம் அளிக்கிறது. போராடித்தான் சொந்தக் காணிகளில் குடியேற வேண்டும் என்ற மக்களின் தலை விதியை உண்மையான பௌத்தனாக இருந்து சிந்தித்து பாருங்கள்.
கேப்பாப்புலவுமக்கள் குறித்த காணிகளை தமது வாழவிடமாக மட்டுமன்றி ஜீவனோபாய நிலமாகவும் பயன்படுத்தி வந்தனர். 135 குடும்பங்களின் சீவியம் அந்த நிலத்தில்த் தான் தங்கியிருந்தது. அந்த மண்ணில் மேற்கொள்கின்ற விவசாயத்தால் மாத்திரமே உணவு, கல்வி, உட்பட்ட அனைத்துத் தேவைகளையும் சிறிய அளவில் நிறைவு செய்தனர்.
மேலும் 55 குடும்பத்தினர் நந்திக்கடலையே தமது வாழ்வாதாரமாக கொண்டிருந்தனர். நந்திக்கடலின் மேற்குக் கிழக்கு கரைகளில் கரையோர மீன்பிடித்தலுக்கு அனுமதி அளித்துள்ள போதிலும் நந்திக்கடலின் மத்திய பகுதி முழுவதும் இராணுவ வலயத்தினுள் அபகரிக்கப்பட்டுள்ளது.
இதனால் நண்டு, இறால் போன்ற பொருளாதாரப்பயன் அதிகரித்த தொழிலை செய்யமுடியாத வகையில் குறித்த மக்கள் தடுக்கப்பட்டுள்ளனர். போதிய அளவு உட்கட்டமைப்பு வசதிகளோடு இம் மக்கள் அங்கு வாழ்ந்தார்கள்.
குறிப்பாக அரசாங்கப் பாடசாலை ஆரம்ப சுகாதார நிலையம் பொதுநோக்கு மண்டபங்கள் இந்து, கிறிஸ்தவ ஆலயங்கள் பொருளாதார இயற்கை வளங்கள் என்பன அம்மக்கள் பூர்வீகமாக வாழ்ந்த கலாச்சார வாழ்வை அடையாளப்படுத்துகின்றன.
அந்த வாழ் விடங்களை பார்த்து ஏங்கித் தவித்தவாறு இடமற்று வாழ்கின்ற குறித்த மக்களின் உணர்வுகளின் பிரதிபலிப்பை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள் எனக் கேட்டுக்கொள்கின்றேன்.
கௌரவ ஜனாதிபதி அவர்களே! கேப்பாப்புலவு மக்கள் கடந்த பல வாரங்களாக ஜனநாயக வழியில் போராடி வருகிறார்கள். வலிகாமத்தின் சில பகுதிகளையும் சம்பூர்பிலக் குடியிருப்பு பரவிப்பாஞ்சான், புதுக்குடியிருப்பு என்பவற்றில் நடைபெற்ற மக்களின் நீதியான போராட்டங்களை அடுத்து அந்த மக்களுக்கு காணிகளைத் தாங்கள் கையளித்தமை கேப்பாப்புலவு மக்களையும் தங்கள் மீதுஅதிக நம்பிக்கை வைக்கச்செய்திருக்கிறது.
கடந்த ஐந்து நாட்களாக தொடர்போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களில் இருவர் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு மயக்கமும் சோர்வும் அடைந்திருந்தனர்.
இந்நிலை நீடித்தால் ஒரு சில தினங்களில் அவர்களின் உயிருக்கு ஆபத்து நிகழும் எனக் கருதி அவர்களின் உணவு தவிர்ப்புப் போராட்டத்தை அவர்களின் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் தற்காலிகமாக கைவிடசெய்துள்ளோம்.
எனவே உணர்வுபூர்வமான நிலையில் தமது வாழ்விட உரிமைக்காக போராடுகின்ற மக்களின் நோக்கம் நீதியானது. ஆகவே தாங்கள் இவ்விடயத்தில் நேரடியாக தலையிட்டு அதிஉச்ச அணுகுமுறைகள் ஊடாக குறித்த காணிகளை வழங்கி உதவுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் ஜனாதிபதிக்கு இன்று அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கேப்பாப்புலவு மக்களின் தொடர் போராட்டம்! ஜனாதிபதிக்கு சிறிதரன் எம்.பி கடிதம்....
Reviewed by Author
on
March 16, 2017
Rating:

No comments:
Post a Comment