2 நாள்களில் செலவாகிய ரூ. 40 மில்லியனால் வடமாகாணத்தில் கல்வி வளர்ச்சி ஏற்பட்டதா?
அதிபர் மீது நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டார் அமைச்சர் குருகுலராசா
‘‘நீங்கள்தான் குறிப்பிடுகின்றீர்கள். சம்பந்தப்பட்ட மாணவியிடம் இருந்து எந்த முறைப்பாடும் கிடைக்கவில்லை’’ எனக் கூறியுள்ளார்.
சம்பந்தப்பட்ட மாணவியிடம் இருந்து முறைப்பாடு கிடைக்கவில்லை என்ற நிலைப்பாட்டை அமைச்சர் எடுத்த வேளையிலும் அதிபருக்கு எதிராக விசாரணை நடத்தப்பட்டு அவர் 1AB பாடசாலையில் இருந்து தரம் இறக்கப்பட்டுள்ளார் என்ற அமைச்சரின் கூற்று இந்தச் சம்பவத்தை நிரூபிக்கின்றது.
இவ்வாறு அந்த அதிபருக்கு எதிராக விசாரணை நடத்தப்பட்டது. அவர் தரம் இறக்கப்பட்டார் என்பவற்றுக்கு எதுவித ஆதாரமும் விசாரணைக் குழுவிடம் முன்வைக்கப்படவில்லை. எனினும் அமைச்சரின் பதிலில் இருந்து குறித்த சம்பவம் உண்மை என்பதும் இது குறித்து அமைச்சர் அறிந்திருந்தார் என்பது நிரூபணமாகின்றது.
கல்வித் துறையையே தலை குனியவைக்கும் செயல்
மூடிமறைக்கப்பட்டது
மேலும் அமைச்சரிடம் குறித்த அதிபருடன் என்ன தொடர்பு எனக் கேட்கப்பட்ட வேளையில் தாம் கல்விப் பணிப்பாளராக இருந்த வேளையில் அந்த அதிபர் சேவைக்கால ஆலோசகராக இருந்தார் என்றும் அவர் தன்னுடைய நண்பனில்லை என்றும் கூறியிருந்தார். எனினும் இந்தச் சம்பவத்தை நன்கு அறிந்திருந்தும் குறித்த அதிபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு வலயக் கல்விப் பணிப்பாளரை அல்லது செயலாளரை கேட்க அமைச்சர் தவறியுள்ளார்.
கல்வித்துறையையே தலை குனிய வைக்கும் இந்தச் செயல், கல்வி அமைச்சர் உட்பட கல்வி அதிகாரிகளால் மூடிமறைக்கப்பட்டுள்ளதை நாம் காண்கின்றோம். இது ஓர் தவறான செயலாகும். குறித்த அதிபர் மாணவியின் மீது புரிந்த பாலியல் வன்முறை நடவடிக்கையானது ஓர் குற்றவியல் நடவடிக்கையாக அமைகின்றது.
இந்தச் சம்பவத்தை மூடி மறைப்பதில் அமைச்சருக்கு பங்கு இருந்துள்ளது என்பது நிரூபணமாகின்றது. எனவே இது ஓர் அதிகார முறைகேடு என்ற முடிவுக்கு விசாரணைக்குழு வருகின்றது.
ஆசிரியர் மீதான பழிவாங்கல் ; முதல்வர் விசாரிக்கவேண்டும்
3.5 ஆ) குறித்த அதிபர் பாடசாலை மாணவியுடன் தகாத முறையில் நடந்துகொள்ள முயன்ற விடயத்தை பாடசாலை வகுப்பாசிரியர் வலயக் கல்விப்பணிப்பாளர் முருகவேளுக்குக் கடிதம் மூலம் முறைப்பாடு செய்தார். அதற்காக அந்த ஆசிரியர் பழிவாங்கப்பட்டு வலயக் கல்விப் பணிப்பாளர் முருகவேளால் இடமாற்றம் செய்யப்பட்டமை.
இந்த விடயம் குறித்து எதுவித நேரடி சாட்சியமும் விசாரணைக் குழுவிடம் முன்வைக்கப்பட வில்லை. எனினும் கல்வி அமைச்சரிடம் இது குறித்து கேட்கப்பட்ட வேளையில், “குறித்த ஆசிரியர் தமது விருப்பப்படி இடமாற்றம் பெற்றுச் சென்றதாகவும் இந்த முறைப்பாடு தமக்கு வரவில்லை என்றும் வந்திருந்தால் நடவடிக்கை எடுத்திருப்பேன்” என்றும் கூறியிருந்தார்.
சம்பந்தப்பட்ட ஆசிரியையின் சாட்சியம் எம் முன் நெறிப்படுத்தப்படாமையால் இந்தக் குற்றச்சாட்டை விசாரணைக்குழு நிராகரிக்கின்றது. அதேவேளையில் இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் முறையான விசாரணை ஒன்றை நடத்துமாறு கல்வி அதிகாரிகளைப் பணிக்குமாறு முதலமைச்சரை இந்த விசாரணைக்குழு கேட்டுக்கொள்கின்றது.
கல்விப் பணிப்பாளரின் நடத்தை தொடர்பில் விசாரணை அவசியம்
3.5) குறித்த ஆசிரியரின் கடித மூலமான முறைப்பாட்டை விசாரிக்கச் சென்ற வலயக்கல்விப் பணிப்பாளர், அந்த ஆசிரியரை ஏனைய ஆசிரியர்கள் முன்னிலையில் கொச்சைப்படுத்தியமை தொடர்பாக அனந்தி சசிதரன், கல்வி அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு வந்தும் வலயக் கல்விப் பணிப்பாளருக்கு எதிராக எதுவித நடவடிக்கையும் எடுக்காமை.
இது தொடர்பில் விசாரணைக் குழுவிடம் செய்யப்பட்ட முறைப்பாட்டில் குறித்த கல்விப் பணிப்பாளர் விசாரணைக்கு என்று சென்ற வேளையில், அந்த முறைப்பாட்டைச் செய்த வகுப்பாசிரியையிடமிருந்து தமக்கு ஒரு காதல் கடிதம் வந்துள்ளது என்று பகிரங்கமாகக் கூறினார் என்பதாகும்.
இதிலிருந்து கல்வி அமைச்சரிடம் விசாரணைக் குழு விசாரித்த வேளையில், “தமக்கு எழுத்து மூலமான அறிவித்தல் ஒன்றும் இல்லை என்றும் அனந்தி சசிதரன் சொன்னது தமக்குத் தெரியாது எனவும் கூறியிருந்தார்.
இங்கு சம்பந்தப்பட்ட ஆசிரியையின் சாட்சியம் விசாரணைக் குழு முன்னிலையில் நெறிப்படுத்தப்படாமையால் இந்தக் குற்றச் சாட்டை இந்த விசாரணைக்குழு நிராகரிக்கின்றது.
அதேவேளையில் ஆசிரியையினால் செய்யப்பட்ட முறைப்பாட்டின் பெரிய தன்மை காரணமாக வலயக் கல்விப் பணிப்பாளரின் இந்த நடத்தை குறித்து ஓர் முறையான விசாரணை நடத்துமாறு கல்வி அதிகாரிகளைப் பணிக்குமாறு முதலமைச்சரை இந்த விசாரணைக்குழு கேட்டுக் கொள்கின்றது.
அதிபருக்கு எதிராக குற்றவியல் வழக்கு
மேலும் கிளிநொச்சி, பாரதி பாடசாலையில் 2015ஆம் ஆண்டளவில் மாணவி ஒருவருடன் அப்போதைய அதிபர் தகாத முறையில் நடக்க முற்பட்டமை தொடர்பிலும் இந்த விடயத்தை வலயக் கல்விப்பணிப்பாளருக்குத் தெரியப்படுத்திய ஆசிரியை இடமாற்றம் செய்யப்பட்டமை குறித்தும் குறித்த ஆசிரியை இந்த முறைப்பாட்டைச் செய்ததைமயால் வலயக் கல்விப் பணிப்பாளர் ஆகிய முருகவேளினால் ஏளனம் செய்யப்பட்டமை தொடர்பிலும் குற்றவியல் நடவடிக்கைகள் சட்டத்துக்கு அமைய விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை அவர்களுக்கு எதிராக எடுக்கப்படவேண்டும் எனவும் இந்த விசாரணைக்குழு கேட்டுக் கொள்கின்றது.
அமைச்சருக்கு எதிரான குற்றச்சாட்டை செயலாளரின்
சாட்சியம் நிரூபிக்கின்றது
3.6) கிளிநொச்சி கனிஷ்ட வித்தியாலயத்திலும் கிளிநொச்சி புனித திரேசா பெண்கள் பாடசாலையிலும் தனக்கேற்றவர்களை அதிபராக நியமனம் செய்ய கல்வி அமைச்சின் செயலாளருக்கு அழுத்தம் கொடுத்தமை.
இந்த விடயம் குறித்து கல்வி அமைச்சர் தமது சாட்சியத்தில், “கல்வி அமைச்சில் விண்ணப்பம் கோரி நேர்முகத்தேர்வு நடத்தித்தான் நியமனம் செய்தார்கள் என்றும் தாம் அதற்கு எந்தவித அழுத்தமும் கொடுக்கவில்லை” என்றும் கூறியிருந்தார்.
வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் தமது சாட்சியத்தில், “2015ஆம் ஆண்டு கிட்டத்தட்ட 80 அதிபர்களுக்கு தரம் 1 பதவியுயர்வு கொழும்புக் கல்வி அமைச்சால் வழங்கப்பட்டது.
அதில் வெற்றிடமாக இருந்த பாடசாலைகளுக்கு விண்ணப்பம் கோரி நேர்முகப்பரீட்சை நடத்தப்பட்டது. அப்போது கிளி/ புனித திரேசா பெண்கள் பாடசாலையில் இருந்த அதிபர் வேறு பாடசாலைக்குத் தெரிவு செய்யப்பட்டதால் கிளி/ புனித திரேசா பெண்கள் கல்லூரிக்கு அதிபர் வெற்றிடம் ஏற்பட்டது. அதற்கு வலிகாமம் கல்வி வலயத்தில் சங்கானை கோட்டக் கல்வி அதிகாரியாக இருந்த வகுப்பு 1 அதிபரை அந்த பாடசாலைக்கு நியமிக்குமாறு கல்வி அமைச்சர் கூறியிருந்தார்” என்று தெரிவித்தார்.
கல்வி அமைச்சின் செயலாளரின் சாட்சியம் கிளி/ புனித திரேசா பெண்கள் பாடசாலை தொடர்பில் அமைச்சர் மீது கொண்டுவரப்பட்ட குற்றச்சாட்டை நிரூபிக்கின்றது. அங்கு கல்வி அமைச்சரின் அழுத்தம் காரணமாகவே அந்த நியமனம் நடைபெற்றது என்ற முடிவுக்கு இந்த விசாரணைக்குழு வருகின்றது.
கிளிநொச்சி கனிஷ்ட வித்தியாலயம் தொடர்பில் எந்தவித சாட்சியமும் எம்முன் வைக்கப்படாத நிலையில் கிளிநொச்சி கனிஷ்ட வித்தியாலயம் தொடர்பான குற்றச்சாட்டு நிராகரிக்கப் படுகின்றது.
நிதி வீண்விரயம் குறித்து செயலாளரின் சாட்சியம் இது
3.7) வடக்கு மாகாணத்திலுள்ள கல்வி வலயங்களில் ஆசிரியர் மாநாடு என்ற பெயரில் பெருமளவில் நிதி செலவழித்து வீண்விரயம் செய்தமை
இந்தக் குற்றச்சாட்டுத் தொடர்பில் சாட்சியமளித்த வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன், “ஆசிரியர் மாநாடு 12 வலயங்களில் நடத்தப்பட்டது.
2015ஆம் ஆண்டு PSDG நிதியில் ரூபா 80 மில்லியன் ஒதுக்கி ஆசிரியர் மாநாட்டையும் அதிபர் மாநாட்டையும் கட்டாயம் நடத்தும்படி கூறப்பட்டது. நாங்கள் ரூபா 80 மில்லியனை யும் இதற்குப் பயன்படுத்த முடியாது எனக்கூறி ரூபா 40 மில்லியனை இந்தத் தேவைக்கும் மிகுதி ரூபா 40 மில்லியனை ஆசிரியர்களுக்கான தளபாடங்களைக் கொள்வனவு செய்வதற்கும் வழங்கினோம்.
அதன்படி ரூபா 40 மில்லியனில் ரூபா 24 மில்லியனை ரூபா 2 மில்லியன்படி 12 வலங்களுக்கும் மிகுதி ரூபா 16 மில்லியனை அதிபர் மாநாட்டுக்கும் ஒதுக்கி வழங்கினோம். ஒவ்வொரு வலயமும் தமக்கு வழங்கிய நிதிக்கேற்றவாறு ஒதுக்கி செலவு செய்தார்கள்” என்று கூறியிருந்தார்.
மேலும் அவர் தமது சாட்சியத்தில், “நாங்கள் ஒவ்வொரு வலயத்துக்கும் நிதியைக் கொடுத்து அவர்களே விழாவுக்கான திட்டங்களை மேற்கொண்டு செய்தார்கள். இந்த மாநாட்டின் நோக்கம் எல்லா ஆசிரியர்களும் ஒன்றுகூடி தங்களது திறமைகளை வெளிப்படுத்துவது. அவர்களுக்கான பாடவிதானங்களுடன் தொடர்பான சுற்றறிக்கைகளுடனான ஆய்வுகள் ஆக்கங்கள் பற்றிய நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டன”என்றும் கூறியிருந்தார்.
இவரது சாட்சியத்தில் இருந்து ஆசிரியர் மாநாட்டுக்கென வழங்கப்பட்ட ரூபா 80 மில்லியன் ரூபா 40 மில்லியனாக வடக்கு மாகாணக் கல்வி அமைச்சால் குறைக்கப்பட்டது என்பது தெரியவருகின்றது. மேலும் ஆசிரியர் மாநாட்டுக்கென இந்த நிதி வழங்கப்பட்ட போதிலும் ஒவ்வொரு வலயத்துக்கும் நிதியை வழங்கிய பின் அவர்களே விழாவுக்கான திட்டங்களை மேற்கொண்டு செய்தார்கள் என்றும் கூறியிருந்தார்.
நிதி விரயம் குறித்து கல்வி அமைச்சரின் சாட்சியம் இது
இந்த விடயம் சாட்சியமளித்த வடக்கு மாகாணக் கல்வி அமைச்சர், “ஆசிரியர்கள், அதிபர்கள் மாநாட்டுக்கென நிதி ஆணைக்குழுவால் ரூபா 40 மில்லியன் வழங்கப்பட்டது. எம்மால் இந்த மாநாடு நடத்தப்படவில்லை. ஒவ்வொரு கல்வி வலயமும் கையேட்டின்படி இதில் சொல்லப்பட்ட விடயங்களை நடத்தினார்கள். அவர்களின் ஆக்கங்களைக் கொண்டு சஞ்சிகைகள் வெளியிட்டார்கள்.
ஆசிரியர்களுக்கு உள்ள சந்தேகங்கள் தொடர்பாக ஆய்வுகள் நடத்தினார்கள். கல்வியியலாளர்களைக் கொண்டு விரிவுரை நடத்தினார்கள். ஒவ்வொரு கல்வி வலயத்திலும் 2 நாள்கள் இது நடைபெற்றது. கல்விக் கண்காட்சிகள், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. ஆசிரியர்களின் ஆற்றலை வெளிப்படுத்துகின்ற நிகழ்வுகள்தான் நடைபெற்றன.
இது எவ்வாறு நடத்த வேண்டும் என நிதி ஆணைக்குழு ஒரு பிரமாணத்தை அனுப்பி இருக்கின்றது. அதில் இருந்து விலகிச் செல்ல முடியாது. அந்த வகையில்தான் செயற்படுத்தப்பட்டன. இதன் மூலம் ஆசிரியர்கள் மத்தியில் எவ்வாறு வகுப்பறையில் கற்பிக்க வேண்டும் என்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது” என்று கூறியிருந்தார்.
மேலும் அமைச்சர் தமது சாட்சியத்தில், “இந்த மாநாட்டில் என்ன நடைபெற்றது என்பதை தாம் பார்க்கவில்லை என்றும் செயலாளர்கள், மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள், கல்வி வலயங்களில் தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல்களைப் பார்ப்பார்கள் என்றும் 12 வலயங்களில் பதினையாயிரம் ஆசிரியர்கள் இருக்கின்றார்கள் என்றும் கூறியிருந்தார்.
மேலும் அமைச்சரிடம் ஆசிரியர்களின் திறன் விருத்திக்காக வழங்கப்பட்ட அந்த நிதியை ஒருநாளில் செலவு செய்யாமல் அவர்களின் கல்வி கற்பிப்பதற்கான அறிவை வளர்ப்பதற்கு பயன்படுத்தலாம் எனக்கூறப்பட்ட போது, அந்த நிதி இதற்காகவேதான் வழங்கப்பட்டது எனக் கூறியிருந்தார்.
நிதிப் பயன்பாட்டில் கல்வி அமைச்சர் பொறுப்பற்ற செயற்பாடு
வடக்கு மாகாணக் கல்வி அமைச்சு செயலாளரின் சாட்சியத்தையும் வடக்கு மாகாணக் கல்வி அமைச்சரின் சாட்சியத்தையும் ஒப்பிட்டு நோக்கும் இடத்து வடக்கு மாகாணக் கல்வி அமைச்சரின் பொறுப்பற்ற செயற்பாடு மிகத் தெளிவாக வெளிப்படுகின்றது.
கல்வி அமைச்சின் செயலாளர், ரூபா 80 மில்லியன் வழங்கப்பட்டு பின் அது தங்களால் ரூபா 40 மில்லியனாகக் குறைக்கப்பட்டது எனக்கூறிய வேளையில், அமைச்சர் ரூபா 40 மில்லியன் மட்டுமே தரப்பட்டதாகக் கூறியுள்ளார்.
நிதி ஆணைக்குழுவின் அறிவுறுத்தலுக்கு அமைவாகவே இந்த நிதி செலவு செய்யப்பட்டது என்றும் நிதி ஆணைக்குழுவின் பிரமாணத்தை மீற முடியாது என்றும் கல்வி அமைச்சர் தெரிவிக்கும் அதே வேளை அமைச்சின் செயலாளர் வழங்கப்பட்ட ரூபா 80 மில்லியன் நிதியில் ரூபா 40 மில்லியன் வேறு தேவைக்குப் பாவிக்கப்பட்டதாகக் கூறியுள்ளார்.
சம்பந்தப்பட்ட அமைச்சர் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் ஏற்கனவே கையளிக்கப்பட்டிருந்த போதிலும் அவர் தமது சாட்சியத்தில் குறிப்பிட்டுள்ள ஆவணங்கள் எதனையும் விசாரணைக்குழு முன் சமர்ப்பிக்கவில்லை.
அவ்வாறு செய்யுமாறு தமது அமைச்சின் செயலாளரையும் அவர் பணிக்கவில்லை. நிதி ஆணைக்குழுவின் இன் அறிவுறுத்தலைச் சமர்ப்பிக்காது அமைச்சர் சாட்சியமளித்துள்ளார். மேலும் ஆசிரியர் மாநாட்டின் போது சஞ்சிகைகள் வெளியிடப்பட்டதாகக் கூறிய போதிலும் அவை விசாரணைக்குழு முன் சமர்ப்பிக்கப்படவில்லை.
கல்வி வளர்ச்சிக்கென ஆசிரியர் அதிபர் மாநாடு நடத்த நிதி ஆணைக்குழுவால் தரப்பட்ட ரூபா 80 மில்லியன் அமைச்சரின் அறிவுக்கு அப்பாற்பட்ட வகையில் ரூபா 40 மில்லியனாகச் செயலாளரினால் குறைக்கப்பட்டு அந்தத் தொகையும் 2 நாள்களில் செலவு செய்யப்பட்டுவிட்டது.
இரண்டு நாள்களில் ரூபா 40 மில்லியனை செலவு செய்த இந்தச் செயற்பாடு வடக்கு மாகாணக் கல்வி வளர்ச்சிக்கு எவ்வாறு உதவியது என்பது பெரும் கேள்விக்குறியாகவே உள்ளது.
கல்வி வளர்ச்சி குறித்து திறனாய்வு அவசியம்
அத்துடன் மிகுதி ரூபா 40 மில்லியனுக்கு ஆசிரியர்களுக்குத் தேவையான தளபாடங்கள் பெறப்பட்டதாக அமைச்சு செயலாளர் கூறியுள்ளார். அந்தத் தளபாடங்கள் பற்றிய விவரம் ஆணைக்குழுவுக்கு வழங்கப்படவில்லை.
இன்றும்கூட எமது பாடசாலைகளில் சுகாதாரத்துக்கும் ஊறுவிளைவிக்கக்கூடிய கரும்பலகையும் வெண்கட்டிகளும் பாவிக்கப்படுகின்றன. இந்த நிலையில் நிதி ஆணைக்குழுவால் வழங்கப்பட்ட ரூபா 80 மில்லியனில் ரூபா 40 மில்லியன் 2 நாள்களில் செலவு செய்யப்பட மிகுதி ரூபா 40 மில்லியனுக்குத் தகுந்த விளக்கம் எமக்குத் தரப்படவில்லை.
இந்த ரூபா 40 மில்லியகும் 12 கல்வி வலயங்களில் 2 நாள்களில் செலவு செய்யப்பட்டதன் மூலம் வடமாகாணக் கல்வி வளர்ச்சியில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டதா? என்ற விடயம் திறனாய்வுக்கு உட்படுத்த வேண்டியது ஒன்றாகும். இந்த நிதி ரூபா 80 மில்லியனையும் உபயோகித்து ஆசிரியர்கள் அதிபர்களின் செயற்றிறனை அதிகரிக்கும் கொள்கை ரீதியாகத் திட்டமிட்டுச் செயற்பட்டிருக்க முடியும். அவ்வாறான திட்டம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.
ஆசிரியர்களுக்கு அவர்கள் கற்பிக்கும் பாடத்திலுள்ள அறிவு அதனைக் கற்பிக்கும் முறை பற்றிய அறிவு என்பன தொடர்ச்சியாக வளர்ச்சியடைய வேண்டும் என்பதில் இரண்டாவது கருத்துக்கு இடமில்லை. எனவே இந்த நிதியைக் கொண்டு ஆசிரியர்களுக்கு அவர்கள் கற்பிக்கும் பாடத்திலான அறிவு அதனைப் போதிக்கும் ஆற்றல் என்பவற்றை வளர்க்கக் கூடிய பயிற்சிகளை அந்தத் துறையில் அறிவும் அனுபவமும் உடையவர்கள் மூலமாக வழங்கி கல்வித்துறையை மேம்படுத்த இந்த நிதியைத் திட்டமிட்டுப் பயன்படுத்தியிருக்க முடியும்.
நிதி வீண் விரயம் நடந்தது உண்மையே
வடக்கு மாகாண மாணவர்களுக்கு ஒரு சிறந்த எதிர்காலத்தை உருவாக்கிக் கொடுக்கக்கூடிய ஒரே வளமாக அமைவது கல்வியே ஆகும். வடக்கு மாகாணம் ஒரு காலத்தில் கல்வியில் மிக முன்னேறிய நிலையில் இருந்தது. இந்தக் கல்விவளம் போர்க்காலத்தில் தொடர்ச்சியாகச் சீரழிக்கப்பட்டுப் பூச்சியம் என்ற நிலைக்கு வந்தது. ஆயினும் தற்போது அதிபர்கள், ஆசிரியர்கள், மாணர்கள் ஆகியோரது அயராத உழைப்பால் இந்த மாகாணத்தில் கல்வி மீண்டும் வளர்ச்சியடைய ஆரம்பித்துள்ளது.
இந்த நிலையில் 2015ஆம் ஆண்டு நிதி ஆணைக்குழுவின் அறிவுறுத்தலால் வழங்கப்பட்ட ரூபா 80 மில்லியனும் உரிய வகையில் தகுந்த கொள்கை அடிப்படையில் மாணவர்கள் பயனடையக்கூடிய வகையில் திட்டமிடப்பட்டு ஆசிரியர்களினதும் அதிபர்களினதும் தகுதியை உயர்த்துவதற்குரிய மேற்படிப்புக்கள் பயிற்சிகள் போன்றவற்றிலும் கற்பிக்கும் ஆற்றலை மேம்படுத்துவதற்கும் பயன்படுத்தப்பட்டிருப்பின் அது மிகவும் வரவேற்கத்தக்கதாக அமைந்திருக்கும்.
இதற்குப் பதிலாக இந்தப் பணத்தில் ரூபா 40 மில்லியன் 2 நாள்களில் செலவு செய்யப்பட்டதும் மிகுதி ரூபா 40 மில்லியன் ஆசிரியர்களின் தளபாட கொள்வனவுக்குப் பயன்படுத்தியதாகக்கூறப்பட்டமையும் மிகவும் கவலைக்குரிய வகையில் இந்தப் பணம் வீண் விரணம் செய்யப்பட்டதை நிரூபிக்கின்றது.
கணக்காய்வு அவசியம்
எனவே வடக்கு மாகாணக் கல்வி அமைச்சருக்கு எதிரான இந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது என்ற முடிவுக்கு இந்த விசாரரணைக்குழு வருகின்றது. மேலும் இந்தத் தொகை ரூபா 80 மில்லியனும் எவ்வாறு செலவு செய்யப்பட்டது என்பது குறித்து முழுமையான கணக்காய்வு செய்யப்பட்டு தவறு இழைத்ததாகக் காணப்படுபவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் இந்த விசாரணைக்குழு பரிந்துரைக்கின்றது.
வடமாகாணத்தில் வாழும் மக்களுக்கு வழிகாட்டும் பொறுப்பை தம் கரங்களில் ஏந்தியுள்ளவர்கள் கொள்கைகள் திட்டங்கள் என்பவற்றை வகுக்கும் வேளையில் இந்த மக்கள் கடந்த காலங்களில் அனுபவித்த துன்ப துயரங்கள் கடந்து வந்த பாதை என்பவற்றை ஒரு தடவையாவது திரும்பிப்பார்க்க வேண்டும் என்றே இந்த விசாரணைக்குழு கருதுகின்றது.
ஆளுநரால் நடத்தப்பட்டவைக்கு அமைச்சர் பொறுப்பாளியல்ல
3.8) மாகாணப் பாடசாலைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் முன்னாள் அரச தலைவரின் வருகைக்காக ஆறு தேசியப் பாடசாலைகளை அலங்கரிப்பதற்கு பெருந் தொகைப் பணத்தைச் செலவழித்தமை.
மேற்டி குற்றச்சாட்டு தொடர்பில் பதிலளித்த வடமாகாணக் கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர், “தமது அமைச்சின் செயலாளருக்கு மாகாண ஆளுநர் கூறியே இந்த விடயம் நடைபெற்றதாகக் கூறியிருந்தார்.
இந்த விடயம் தொடர்பில் கொள்கை அடிப்படையிலான முடிவு எதுவும் வடக்கு மாகாணக் கல்வி அமைச்சரால் எடுக்கப்படாத நிலையில் மாகாண ஆளுநரால் கையளிக்கப்பட்ட அதிகாரங்களை செயற்படுத்தும் செயலாளர் ஆளுநரின் கோரிக்கைப் படி செயற்பட்டமைக்கு அமைச்சர் பொறுப்புக்கூற வேண்டியதில்லை என இந்த விசாரணைக் குழு கருதுகின்றது.
3.9) கிளிநொச்சி வலயக்கல்விப்பணிப்பாளர் முருகவேளின் சேவைக் காலம் முடிவுற உள்ள நிலையில் வேறு பொருத்தமான பணிப்பாளர் ஒருவரை நியமிப்பதற்கான நடவடிக்கையை இதுவரை எடுக்காமல் ஒப்பந்த அடிப்படையில் அவரது சேவையைத் தொடருவதற்கு முயற்சிக்கின்றமை.
வலயக் கல்விப் பணிப்பாளர் நியமனத்தில் அமைச்சர்
தலையிடுவது தவறு
இந்தக் குற்றச்சாட்டு குறித்து சாட்சியமளித்த கல்வி அமைச்சர், “வலயக் கல்விப் பணிப்பாளர் பதவிக்கு விண்ணப்பம் கோருவதில்லை என்றும் சேவை மூப்பு அடிப்படையில் நியமனம் செய்வது என்றும் தற்போது தென்மராட்சி கல்விப் பணிப்பாளரை பதிற்கடமைக்கு நியமித்துள்ளோம் என்றும் சாட்சியமளித்தார். இது தவறன நிலைப்பாடாகும்.
இந்த நியமனங்களில் தலையிட அமைச்சருக்கு எந்தவித அதிகாரமும் கிடையாது. அரசமைப்பின் பிரகாரம் மாகாண ஆளுநருக்கே இந்த அதிகாரம் உண்டு. அவர் யாருக்கு அந்த அதிகாரத்தை கையளித்துள்ளாரோ அவரே அரசியல் தலையீடு எதுவும் இன்றி அந்தக் கடமையைச் செய்ய வேண்டும்.
எனவே அமைச்சின் செயலாளர் அல்லது வடக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு இவர்களில் யாருக்கு இந்த அதிகாரம் கையளிக்கப்பட்டுள்ளதோ அவர்கள் இந்த நியமனத்தைப் பொறுப்பேற்று அரசியல் தலையீடு எதுவுமின்றி தகுதி உடையவரை இந்தப் பதவிக்கு உடன் நியமிக்க வேண்டும் எனவும் வடமாகாண கல்வி அமைச்சர் இந்த நியமனமத்தில் தலையிடக்கூடாது எனவும் இந்த விசாரணைக்குழு பணிக்கின்றது. மேலும் இந்தக் குற்றச்சாட்டானது எதிர்காலத்தில் நிகழவிருக்கும் ஒருவிடயம் தொடர்பானதாகையால் இந்தக் குற்றச்சாட்டை விசாரணைக்குழு நிராகரிக்கின்றது.
அமைச்சர் ஐங்கரநேசனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள்
4.1) வவுனியா மாவட்டத்தில் மூங்கில், மல்லிகை வளர்ப்புத் திட்டங்கள், எள்ளு விநியோகித்து சுயதொழிலை முன்னெடுக்க வைக்கும் திட்டம் ஆகியவற்றை கையூட்டுப் பெறும் நோக்கத்துக்காக நிராகரித்தமை.
இலங்கையில் நடைமுறையிலுள்ள சட்டங்க ளின் படி ஓர் விவசாயி தனது காணியில் வேறு சட்டங்களால் தடை செய்யப்பட்ட பயிர்களைத் தவிர, தான் விரும்பிய பயிரை பயிரிடும் உரிமை உண்டு. ஆனால் நீர்ப்பாசனச் சட்டத்தின் படி அரசால், மாகாண சபையால் பராமரிக்கப்பட்டு வரும் நீர்ப்பாசன நீர்த் தேக்கங்களிலிருந்து குறிப்பிட்ட பயிருக்கு நீர் பெற வேண்டுமெனின், குறிப்பிட்ட தகுதி வாய்ந்த அரச, மாகாண உத்தியோகத்தர்களிடமிருந்து அனுமதியைப் பெற வேண்டுமென்ற கட்டுப்பாடு உள்ளது.
வடக்கு மாகாண சபையைப் பொறுத்தவரையில் தரைக்கீழ் தரைமேல் உள்ள நீரை உபயோகித்தல், பயிர்ச்செய்கைக்கு பாவித்தல் என்பதை கட்டுப்படுத்தும், ஒழங்குபடுத்தும் நியதிச் சட்டங்கள் எதுவும் நிறைவேற்றப்பட்டுள் ளதாகத் தெரியவில்லை.
எனவே விவசாயி ஒருவர் தனது சட்டபூர்வ உரித்துடைய காணியில் மழை நீரையோ, நிலத்தடி நீரையோ, உபயோகித்து தனது வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக, உணவுக்காகவோ, வர்த்தக தேவைக்காக எந்தவித பயிர்களையோ மரப் பயிர்களையோ பயிரிடும் உரிமை அவர்களுக்கு உண்டு என்று விசாரணைக் குழு கருதுகின்றது.
மேற்படி கருதுகோளின் அடிப்படையில் மேற்படி குற்றச்சாட்டில் விடயங்களை தொடர்பாக விசாரணையின் போது முன்வைக்கபட்ட விடயங்களையும் அவற்றுக்குத் திணைக்கள உத்தியோகத்தர்களது விளக்க சாட்சியங்களையும் இறுதியில் அமைச்சரால் விசாரணைக்குழு வுக்கு அறிக்கப்பட்ட விளக்கங்க ளும் மேற்படி குற்றச் சாட்டுகள் விசாரணை யின் பொழுது சந்தேகத்துக்கு அப்பாற்பட்ட முறையில் எண்பிக்கப்பட்டுள்ளனவா? என ஆராய்வோம்.
முதலீட்டாளரை சந்திக்க அழைத்தமை அமைச்சர் மீது
சந்தேகத்தை ஏற்படுத்துகிறது
வவுனியா நெடுங்கேணி பிரதேச செயலர் பிரிவில் இந்திய முதலீட்டாளர் ஒருவராகிய ராம் என்பவர் மூங்கில் செய்கையில் விவசாயி களை ஊக்குவிக்கும் திட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு முன்மொழிவு ஒன்றை முன்வைத்து நெடுங்கேணிப் பிரதேச செயலர் தலைமையில் கூட்டம் ஒன்றைக் கூட்டி திட்டத்தின் நன்மை தீமைகளை எடுத்துரைத்தார்.
இது வெளிநாட்டு முதலீடு என்ற காரணத்தால் மாகாண முதமைச்சரின் அனுமதிக்கு விண்ணப்பித்து முதலமைச்சரால் அந்த விண்ணப்பம் மாகாண விவசாய அமைச்சருக்கு முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் மாகாண விவசாய அமைச்சர் அந்தத் திட்டத்தை அனுமதிக்க மறுத்துவிட்டார். முதலீட்டாளர் மாகாண ஆளுநரிடம் அனுமதியைப் பெற்று திட்டத்தை அந்தப் பிரதேசத்தில் நடைமுறைப்படுத்தியுள்ளார்.
மாகாண விவசாய அமைச்சர் மூங்கில் வளர்ப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதை மறுத்ததோடு, குறிப்பிட்ட முதலீட்டா ளரை வேண்டிய ஆவணங்களுடன் வந்து தன்னை சந்திக்கும்படி கேட்டுள்ளார். தன்னை வந்து சந்திக்கும்படி கோரியமை மாகாண விவசாய, கமநல சேவை கால்நடை அபிவிருத்தி, நீர் வழங்கல், உணவு வழங்கல் விநியோகித்தல், சுற்றாடல் மற்றும் கூட்டுறவு அமைச்சரின் நடத்தை மீது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக விசாரணைக்குழு முன் விளக்கமளித்த அமைச்சர், “மூங்கிலை எரித்து மின்சாரம் பெறும், அதாவது அனல் மின் நிலையம் அமைப்பதை சுற்றுச்சூழல் அமைச்சர் என்ற ரீதியில் தான் அனுமதிக்க முடியாதென்றும் அவ்வாறெனில் காற்றாலை மின்சாரம் பெற மாகாண சபையுடன் ஒப்பந்தம் செய்தது போல ஒரு தொகைப் பணத்தை வருடாந்தம் CSRஇற்கு வழங்க வேண்டும்” எனவும் குறிப்பிட்டார். இது அவரது கருத்தில் உள்ள இரட்டைத்தன்மையை எடுத்துக் காட்டுகின்றது.
இந்த விடயத்தில் விவசாய, கமநலசேவை கால்நடை அபிவிருத்தி நீர் வழங்கல், உணவு வழங்கல் விநியோகித்தல், சுற்றாடல் மற்றும் கூட்டுறவு அமைச்சர் மாகாண சபைியல் சுற்றுச் சூழல் அமைச்சர் என்ற சட்டபூர்வமற்ற நிலைப்பாட்டை வைத்துக்கொண்டு இந்த விடயங்களில் தலையிடுவதையும் விசாரணைக் குழு கவனத்தில் எடுத்துள்ளது.
தொடரும் .....
நன்றி - உதயன்
தொடரும் .....
நன்றி - உதயன்
2 நாள்களில் செலவாகிய ரூ. 40 மில்லியனால் வடமாகாணத்தில் கல்வி வளர்ச்சி ஏற்பட்டதா?
Reviewed by NEWMANNAR
on
June 11, 2017
Rating:

No comments:
Post a Comment