உலக லெவன் கிரிக்கெட் அணிக்கெதிரான டி20 தொடரை வென்றது பாகிஸ்தான்
உலக லெவன் - பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை பாகிஸ்தான் அணி வென்று சுதந்திர தின கோப்பையை கைப்பற்றியது.
பாகிஸ்தானில் உள்ள கடாஃபி மைதானத்தில் பாகிஸ்தான் - உலக லெவன் அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதல் இரண்டு போட்டிகள் ஏற்கனவே நடந்து முடிந்துவிட்டது. இதில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றுள்ளன. இந்நிலையில், கோப்பை யாருக்கு என்பதை தீர்மானிக்கும் கடைசி போட்டி நேற்று நடந்தது. இப்போட்டியில், டாஸ் வென்ற உலக லெவன் அணி கேப்டன் டு பிளிஸ்சிஸ் பீல்டிங் தேர்வு செய்தார்.
அதன்படி பாகிஸ்தான் அணியின் பகர் சமான், அஹமது ஷேசாத் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். பகர் சமான் 27 ரன்கள் எடுத்திருந்த நிலையில் எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆனார்.
அடுத்து ஷேசாத் உடன் இளம் வீரர் பாபர் ஆசம் ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஷேசாத் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார்.
அணியின் ஸ்கோர் 163 ரன்னாக இருக்கும்போது ஷேசாத் 89 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். ஷேசாத் - ஆசம் ஜோடி இரண்டாம் விக்கெட்டுக்கு 102 ரன்கள் சேர்த்தது. அடுத்து சோயிப் மாலிக் களம் இறங்கினார். அரைசதம் அடிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாபர் ஆசம் 48 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். அப்போது பாகிஸ்தான் 19.1 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்தது.
20 ஓவர்கள் முடிவடைந்த நிலையில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் குவித்தது. சோயிப் மாலிக் 17 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். உலக லெவன் அணியின் திசாரா பெரேரா இரண்டு விக்கெட்கள் எடுத்தார்.
தொடர்ந்து 184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் உலக லெவன் அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக தமீம் இக்பாலூம், ஹாசிம் அம்லாவும் களமிறங்கினர். இக்பால் 14 ரன்களில் உஸ்மான் கான் வேகத்தில் போல்டானர். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான அம்லாவும் 21 ரன்களில் ரன் அவுட்டாகி வெளியேறினார்.
அடுத்து களமிறங்கிய பென் கட்டிங் 5 ரன்களிலும், ஜார்ஜ் பெய்லி 3 ரன்களிலும், கேப்டன் டு பிளிஸ்சிஸ் 13 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். இதனால் அந்த அணி 10 ஓவர்களுக்குள் ஐந்து விக்கெட்களை இழந்து தடுமாறியது.
அதைத்தொடர்ந்து டேவிட் மில்லரும், திசாரா பெரேராவும் ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்க போராடினர். அதிரடியாக விளையாடிய திசாரா பெரேரா 13 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து டேரன் சமி களமிறங்கினார். மில்லரும் 32 ரன்களில் கேட்சாகி வெளியேறினார்.
20 ஓவர்கள் முடிவில் உலக லெவன் அணி எட்டு விக்கெட்கள் இழப்பிற்கு 150 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் டேரன் சமி 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன்மூலம் பாகிஸ்தான் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணி தரப்பில் ஹசன் அலி 2 விக்கெட்கள் வீழ்த்தினார். 89 ரன்கள் எடுத்த அகமது ஷேசாத் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
இதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டு போட்டிகளில் வென்ற பாகிஸ்தான் அணி சுதந்திர தின கோப்பையை கைப்பற்றியது. பாகிஸ்தான் அணியின் இளம் வீரர் பாபர் ஆசம் தொடர் நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
உலக லெவன் கிரிக்கெட் அணிக்கெதிரான டி20 தொடரை வென்றது பாகிஸ்தான்
Reviewed by Author
on
September 16, 2017
Rating:

No comments:
Post a Comment