சர்வதேசம் தலையிடுவதை தவிர்க்க முடியாது! எச்சரிக்கும் இரா.சம்பந்தன்
தேசிய பிரச்சினைக்கு உள்நாட்டில் தீர்வு காணப்படாவிட்டால் இலங்கை மீதான சர்வதேச அழுத்தம் மேலும் மோசமடைவதைத் தவிர்க்க முடியாது என எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட 8 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், யுத்தம் ஏற்பட்டமைக்கான காரணங்கள் இன்னமும் நிவர்த்திசெய்யப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
அரசமைப்பு நிர்ணய சபை குழுவின் இடைக்கால அறிக்கை மீதான மூன்றாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு நேற்று நாடாளுமன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “இலங்கையானது பல்லின சமூகத்தைக் கொண்ட நாடாகும். இவ்வாறான சூழ்நிலையில் முன்வைக்கப்படும் பரிந்துரைகள் பிரிக்கப்படாத நாட்டுக்குள் ஜனநாயகம், உரிமை, சகவாழ்வு மற்றும் ஒற்றுமை என்பவற்றை பலப்படுத்துவதாக அமைந்திருக்க வேண்டும்.
அரசமைப்பானது பிரிக்கப்படாத நாடு சகலருக்கும் உரித்தானது என்பதை உறுதிப்படுத்துவதாக இருக்கவேண்டும். நாடு அபிவிருத்தியை நோக்கிச் செல்லக்கூடியதாகவும், நாட்டை அமைதியானதாக பேணக்கூடியதாகவும் இருக்கவேண்டும்.
யுத்தம் என்ற பாரிய தடை நீங்கியுள்ள சூழலில் நாம் தற்போது இருக்கின்றோம். யுத்தம் முடிவடைந்து 8 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், யுத்தம் ஏற்பட்டமைக்கான காரணங்கள் இன்னமும் நிவர்த்திசெய்யப்படவில்லை.
யுத்தம் முடிவடைந்த பின்னரும் நேர்மையான சமாதானத்தை ஏற்படுத்த முடியாமலிருப்பது துரதிர்ஷ்டவசமானது. மூன்று ஜனாதிபதிகளால் முன்வைக்கப்பட்ட யோசனைகள் கவனத்தில் கொள்ளப்படாது யுத்தம் தொடர்ந்தமை கவலைக்குரியது.
இந்நிலையில், தேசிய பிரச்சினைக்கு உள்நாட்டில் தீர்வு காணப்படாவிட்டால் இலங்கை மீதான சர்வதேச அழுத்தம் மேலும் மோசமடைவதைத் தவிர்க்க முடியாது என எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.
சர்வதேசம் தலையிடுவதை தவிர்க்க முடியாது! எச்சரிக்கும் இரா.சம்பந்தன்
Reviewed by Author
on
November 02, 2017
Rating:

No comments:
Post a Comment