அண்மைய செய்திகள்

recent
-

வவுனியாவின் இ.போ.சபை – தனியார் பேரூந்து உரிமையாளர்கள், நடத்துனர்கள் முறுகல்- 6 பேருக்கு நீதிமன்றம் அழைப்பாணை



வவுனியா இ.போ.ச பஸ் நிலையத்தில் இருந்து வவுனியா தனியார் பஸ்கள் உள்ளூர் சேவைகளை முன்னெடுப்பதற்கு இன்று காலை சென்ற போது இ.போ.சபையினர் அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இதனால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதுடன், அதிகளவான பொலிஸாரும் குவிக்கப்பட்டனர். வவுனியாவில் 195 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய பஸ் நிலையத்தில் கடந்த 11 மாதமாக சேவைகள் இடம்பெறாமையால் அவை பூட்டப்பட்டிருந்தது. இந்நிலையில் இம்மாதம் 25 ஆம் திகதி முதல் இ.போ.சபை மற்றும் தனியார் பஸ் சேவைகள் இரண்டும் புதிய பேரூந்து நிலையத்தில் இருந்து சேவையில் ஈடுபடுமாறு முதலமைச்சரினால் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது. இது தொடர்பில் இரு பகுதியினருக்கும் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு வவுனியா நகரசபைக்கும், வவுனியா பொலிசாருக்கும் முதலமைச்சரினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது.

எனினும் இதனை நடைமுறைப்படுத்துவதில் இ.போ.சபை தரப்பால் சில பிரச்சினைகள் முன்வைக்கப்பட்டன. இதனையடுத்து நேற்றைய தினம் முதலமைச்சர் அமைச்சின் சிரேஸ்ட செயலாளர் திருமதி விஜயலட்சுமி கேதீஸ்வரன் மற்றும் வட மாகாண முதலமைச்சரின் அமைச்சின் செயலாளர் திருமதி ரூபினி வரதலிங்கம் ஆகியோர் வவுனியாவிற்கு வருகை தந்து சம்மந்தப்பட்ட தரப்புக்களுடன் கலந்துரையாடியிருந்தனர்

இதையடுத்து இன்று (26.12) காலை வவுனியா இ.போ.ச பஸ் நிலையத்திற்கு தனியார் பஸ்கள் உள்ளூர் சேவைகளை முன்னெடுக்க சென்ற போது இ.போ.சபையினர் அப் பேரூந்துகளை உள் நுழைய விடாது தடுத்து பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளனர். இதனையடுத்து குறித்த பகுதியில் பொலிசார் குவிக்கப்பட்டதுடன் பொலிசார் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் வருகை தந்து இரண்டு தரப்பினருடனும் கலந்துரையாடினர். இதனையடுத்து புதிய பேரூந்து நிலையத்தில் இருந்து தனியார் பேரூந்துகள் இயங்குவதற்கும், பழைய பேரூந்து நிலையத்தில் இருந்து இ.போ.சபை இயங்குவதற்கும் தற்காலிகமாக இணக்கம் காணப்பட்டது. உரிய சட்ட நடவடிக்கை மூலம் இரண்டு தரப்ர்க்களையும் புதிய பேரூந்து நிலையத்தில் இருந்து சேவைகளை வழங்கச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா நகரசபைச் செயலாளர் இ.தயாபரன் தெரிவித்திருந்தார். இதனையடுத்து முறுகல் நிலை பிற்பகல் முடிவுக்கு வந்தது.இதனடிப்படையில் நத்தார் மற்றும் பண்டிகைக்காலம் என்பதால் புதிய பஸ் நிலையத்தில் இருந்து முழுமையான சேவையை மேற்கொள்வதனை இரண்டு வாரங்களுக்கு பிற்போடுவது என தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும் இடைப்பட்ட காலப்பகுதியில் தனியார் பஸ்ஸின் உள்ளூர் சேவைகள் மட்டும் இ.போ.சபையின் பழைய பஸ் நிலையத்தில் இருந்தும், தூர இடங்களுக்கான சேவைகள் புதிய பஸ் நிலையத்தில் இருந்தும் செயற்படுத்துவதற்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் அமைச்சின் சிரேஸ்ட செயலாளர் விஜயலட்சுமி கேதீஸ்வரன் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் தனியார் பேரூந்து சங்கத் தலைவர் இ.இராஜேஸ்வரன் கருத்து தெரிவிக்கையில்,

வடமாகாண முதலமைச்சரின் கீழ் உள்ள போக்குவரத்து அமைச்சின் மூலம் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் எமக்கும், வவுனியா நகரசபைச் செயலாளருக்கும், இலங்கை போக்குவரத்து சபையினருக்கும், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கும் இடையில் மூன்று மணிநேரம் சந்திப்பு இடம்பெற்றது. இதன்படி எமது தனியார் பேரூந்துகளின் உள்ளூர் சேவையினை நகரசபைக்கு சொந்தமான பழைய பேரூந்து நிலையத்தில் இருந்து நடத்துமாறும் குழப்பம் விளைப்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. இதனையடுத்து நாம் பழைய பேரூந்து நிலையத்திற்கு சென்ற போது எமது பேரூந்துகளை உள்நுழைய விடாது இ.போ.சபையினர் தடுத்து குழப்பம் விளைவித்தனர். அவர்களது செயற்பாட்டுக்கு உடந்தையாக வவுனியா பொலிசாரும் நடந்து கொண்டனர். இதனையடுத்து வவுனியா நகரசைபையில் வடமாகாண சபை உறுப்பினர்களதன ப.சத்தியலிங்கம், ஜி.ரி.லிங்கநாதன், வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் செ.மயூரன், உள்ளூராட்சி உதவி ஆணையானளர், நகரசபைச் செயலாளர் ஆகியோருடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்படி எம்மிடம் 5 நாட்கள் கால அவகாசம் கேட்டுள்ளனர். எதிர்வரும் 31 ஆம் திகதியுடன் நகரசபைக்கு சொந்தமான பேரூந்து நிலையத்திற்கான ஒப்பந்த காலம் இ.போ.சபைக்கு முடிவுறுவதால் அதன் பின் அதாவது முதலாம் திகதி முதல் எந்தவொரு பேரூந்தும் வவுனியா பழைய பேரூந்து நிலையத்திலோ அல்லது முதலாம், இரண்டாம் குறுக்கு தெருவிலோ நிறுத்துவதற்கு தடைவிதிக்கப்படுவதாகவும் அதற்குரிய கடிதங்கள் சட்ட ரீதியாக வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுவதாகவும் வவுனியா நகரசபையால் வழங்கப்பட்ட உறுதிமொழிக்கு அமைவாக நாம் புதிய பேரூந்து நிலையத்தில் இருந்து எமது சேவைகளை வழங்குகின்றோம் என்றார்.

இ.போ.சபை ஊழியர் தொழிற்சங்கத் தலைவர் எஸ்.வாமதேவன் தெரிவிக்கையில்,

பழைய பேரூந்து நிலையம் வவுனியா நகரசபையால் 99 வருட குத்தகைக்கு எமக்கு வழங்கப்பட்டுள்ளது. நாம் வாடகை செலுத்தி வருகின்றோம். எமக்கு உரிய வகையில் எதுவும் தெரியப்படுத்தாது தனியார் பேரூந்துகளை எமது பேரூந்து நிலையத்திற்குள் செலுத்த முற்பட்டதால் தான் குழப்பம் ஏற்பட்டது. எமது தொழிற்சங்கம் எமது போக்குவரத்து சபை எடுக்கும் தீர்மானத்திற்கு அமைவாகவே எம்மால் செயற்பட முடியும். நாம் மத்திய அரசின் கீழே செயற்படுகின்றோம் எனவும் தெரிவித்தார்.

இதேவேளை, குழப்பம் ஏற்படுத்தி மக்களது இயல்புக்கு பங்கம் விளைவித்தமைக்காக வவுனியா பொலிஸ் நிலைய பெறுப்பதிகாரியால் வவுனியா நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டதையடுத்து தனியோர் பேரூந்து சங்கத்தைச் சேர்ந்த மூவருக்கும், இலங்கை போகுவரத்து சபை சாலை முகாமையாளர் மற்றும் இ.போ.சபை தொழிற்சங்க உறுப்பினர்கள் இருவருக்குமாக ஆறுபேரை நாளை (27.12) ஆயராகுமாறு வவுனியா நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.



வவுனியாவின் இ.போ.சபை – தனியார் பேரூந்து உரிமையாளர்கள், நடத்துனர்கள் முறுகல்- 6 பேருக்கு நீதிமன்றம் அழைப்பாணை Reviewed by Author on December 28, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.