அண்மைய செய்திகள்

recent
-

தமிழ்மொழிக் கொலை தொடர்பில் வெடித்தது பாராளுமன்றில் சர்ச்சை!


பாரிய நிதிமோசடி தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கையினதும், இலங்கை மத்திய வங்கி பிணைமுறி வழங்கல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கையினதும் தமிழ் மொழிபெயர்ப்பு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாமை நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் விஷேட கவனத்திற்கு உள்ளானது. 

இந்த இரண்டு அறிக்கைகள் குறித்தும் பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் விவாதம் நடாத்தப்பட ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது.என்றாலும் இந்த இரண்டு அறிக்கைகளதும் தமிழ் மொழிபெயர்ப்பு சபையில் சமர்ப்பிக்கப்பட்டிராமையை சுட்டிக்காட்டி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணப் பாராளுமன்ற உறுப்பினர் எம். சுமந்திரன் ஒழுங்குப் பிரச்சினை எழுப்பினார். 

இது தொடர்பில் உத்தியோகத்தர்களிடம் விசாரணை செய்வதாகக் குறிப்பிட்ட சபாநாயகர் கரு ஜயசூரிய, சபையில் வருத்தமும் தெரிவித்தார்.
ஆனால் ஜனாதிபதி செயலகம் இந்த இரண்டு அறிக்கைகளையும் கடந்த (2018) ஜனவரி மாதம் 17 ஆம் திகதி பாராளுமன்றத்திடம் கையளித்தது. இவ்வறிக்கைகள் தொடர்பில் பெப்ரவரி 06 ஆம் திகதி பாராளுமன்றத்தில் முதலில் விவாதம் நடாத்தப்பட்டது.
எனினும் இந்த இரண்டு அறிக்கைகளதும் தமிழ் மொழிபெயர்ப்பு சபையில் வழங்கப்பட்டிராததை சுமந்திரன் எம்.பி சபையின் கவனத்திற்கு கொண்டு வந்ததைத் தொடர்ந்து இவ்விடயம் சபையில் கவனம் செலுத்தப்பட்டதோடு விவாதமும் ஒத்திவைக்கப்பட்டது. 

இற்றைக்கு 30 வருடங்களுக்கு முன்பே தமிழும், சிங்களமும் அரச கரும மொழிகளாகவும், ஆங்கிலம் இணைப்பு மொழியாகவும் அரசியலமைப்புக்கான 13 வது திருத்தத்தின் ஊடாக இந்நாட்டில் அங்கீகரிக்கப்பட்டது. இத்திருத்தம் 1978 ஆம் ஆண்டில் சபையில் அங்கீகரிக்கப்பட்டது.
அத்தோடு 1991 இல் அரச கரும மொழிகள் ஆணைக்குழுவும் அமைக்கப்பட்டு மொழி அமுலாக்கத்திற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன.அத்தோடு சகல சட்டங்களும், துணை நிலைச் சட்டவாக்கங்களும் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் வெளியிடப்பட வேண்டும் என்று அரசியலமைப்பின் 23 (1) பிரிவின் கீழ் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

தற்போது மொழிகள் விவகாரத்திற்கென தனியான அமைச்சும் கூட உள்ளது.இருந்தும் யாப்பு ரீதியாக சம அந்தஸ்து பெற்றுள்ள தமிழ்மொழி இன்னும் முழுமையான நடைமுறையில் இல்லாதிருப்பதையே பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற நிகழ்வு எடுத்துக் காட்டுகின்றது.
இது மாத்திரமல்லாமல் ஆட்பதிவுத் திணைக்களம், குடிவரவு, குடியகல்வுத் தி​ணைக்களம், ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் போன்ற பொதுமக்களுக்கு சேவை வழங்கும் பெரும்பாலான அரசாங்க நிறுவனங்களிலும் தமிழ்மொழி இன்னும் முழுமையாக அமுலில் இல்லாதிருப்பதை அவதானிக்க முடிகின்றது.
இந்நிறுவனங்களில் சேவை பெறச் செல்லும் தமிழ் பேசும் மக்கள் தெரிவிக்கும் கூற்றுக்கள் இதற்கு நல்ல சான்றுகளாக உள்ளன.
இவ்வாறான நிறுவனங்களில் தமிழ்மொழி பேசும் மக்களால் சுயமொழியில் சேவை பெற்றுக் கொள்ள முடியாத துர்ப்பாக்கிய நிலைமை இன்றும் காணப்படுகின்றது. 

இவ்வாறான நிறுவனங்களில் கடமையாற்றும் பெரும்பாலான உத்தியோகத்தர்கள் இணைப்பு மொழியில் கூட பேச முடியாதவர்களாகவே உள்ளனர். இவ்வாறான நிறுவனங்களில் சேவை பெறச் செல்லும் தமிழ் பேசும் மக்கள் சிங்களமொழி தெரிந்தவர்களின் தயவை அல்லது துணையை நாட வேண்டிய நிலைமையே காணப்படுகின்றது.
இவை இவ்வாறிருக்க, யாழ்ப்பாணத்திலுள்ள பிரதேச செயலகமொன்றுக்கு மத்திய அமைச்சொன்றிலிருந்து அண்மையில் அனுப்பி வைக்கப்பட்ட கணக்கெடுப்பு படிவமொன்று முற்றிலும் சிங்கள மொழியில் மாத்திரம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அதனால் அப்படிவத்தைப் பூர்த்தி செய்வதற்கு அந்த அலுவலக உத்தியோகத்தர்கள் பலத்த அசௌகரியங்களுக்கு உள்ளாகினர். 

இவ்வாறான அசௌகரியங்கள் நாட்டின் வேறுபல பிரதேசங்களிலும் பதிவாகியுள்ளன.மேலும் தமிழ் பேசும் மக்கள் செறிவாக வாழும் பிரதேசங்களிலுள்ள பிரதேச செயலகங்களில் தமிழ்மொழியில் கருமமாற்றப்பட வேண்டும் என்ற விதிமுறை காணப்படுகின்றது.
ஆனால் அந்த விதிமுறை நாட்டின் பெரும்பாலான பிரதேச செயலகங்களில் நடைமுறையில் இருப்பதாக தெரியவில்லை.அதேநேரம் வீதி மற்றும் பொதுப் பெயர்ப்பலகைகளிலும் தமிழ்மொழிக் கொலை மிகவும் மோசமான முறையில் இடம்பெற்றுக் கொண்டிருப்பதையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
இதற்கு நிக்கவெரட்டிய சோமகுமாரி தென்னக்கோன் ஞாபகார்த்த தள வைத்தியசாலை என்ற சிங்கள மொழி பெயர்ப்பு பலகை 'சோமகுமாரி தென்னக்கோன் அகால மரணம்' என மொழிபெயர்க்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருப்பது சிறந்த உதாரணமாக உள்ளது.
தமிழ்மொழி இந்நாட்டின் உத்தியோகபூர்வ மொழியாக அரசியலமைப்பின் ஊடாக அங்கீகரிக்கப்பட்டு இற்றைக்கு முப்பது வருடங்கள் கடந்து விட்ட பின்பும் தமிழ்மொழி இவ்வாறான நிலைமைக்கு முகம் கொடுப்பது தமிழ் பேசும் மக்கள் மத்தியில் மனவேதனையையும், கவலைகளையுமே ஏற்படுத்தி இருக்கின்றது. 

இந்த நி​லைமை முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும். யாப்பில் தமிழ்மொழிக்கு அளிக்கப்பட்டிருக்கும் அந்தஸ்து நடைமுறைக்கு வர வேண்டும் என்பதே தமிழ் பேசும் மக்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.ஆகவே தமிழ்மொழி அமுலாக்கலை உரிய முறையில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவது மிகவும் அவசரத் தேவையாக விளங்குகின்றது.
அது சகவாழ்வு மற்றும் நல்லிணக்கம் மேலும் வளர்ச்சி பெறப் பெரும் பக்கத் துணையாகவும் அமையும். இவ்விடயத்தில் கவனம் செலுத்த வேண்டியது சம்பந்தப்பட்ட தரப்பினரின் பொறுப்பும் கடமையுமாகும்.

தமிழ்மொழிக் கொலை தொடர்பில் வெடித்தது பாராளுமன்றில் சர்ச்சை! Reviewed by Author on February 22, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.