உயிர் எழுத்துகளை ஒலிக்கும் முறைகள் -
எல்லா எழுத்துகளையும் எப்படி வேண்டுமானாலும் வாய்க்கு வந்தபடி ஒலித்துச் செல்லக் கூடாது.
ஒவ்வோர் எழுத்தும் ஓர் ஒலிப்பின் குறிப்பு வடிவம் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். எழுத்தின் வழியே அடையாளங்கண்டு, அவ்வொலியை எழுப்பப் பழக வேண்டும். அதுதான் எழுத்தின் பயன்.
உயிரெழுத்து என்பது வாய் திறந்த நிலையில் எழுப்பப்படும் ஒலிகளைக் குறிப்பது. அதில் நாவை ஒருபோதும் சுழற்றக் கூடாது. ஒலிப்பதற்கு ஏற்ப உதடுகளை அசைக்க வேண்டும்.
தாடையைக் குறைத்தும் கூட்டியும் நன்கு பிரிக்க வேண்டும். நாக்குக்கு வேலையே இல்லை. பிரித்த தாடையை அதே நிலையில் வைத்துக்கொண்டு ஒலியை எழுப்ப வேண்டும்.
தொண்டையிலிருந்து ஒலி எழும்பும் நிலையில் தாடையையும் உதடுகளையும் பயன்படுத்த வேண்டும்.
- அ - தாடையைச் சிறிதே கீழிறக்கிய பின் காற்று வெளியேறுவதற்கு உதடுகளை மீன்போல் திறக்க வேண்டும்.
- ஆ - அதே நிலையில் நீட்டி ஒலிக்க வேண்டும்.
- இ - தாடையைச் சிறிதே கீழிறக்கிப் பிரித்த நிலையில் உதட்டுக் கடைவாய்ப் பகுதியைச் சிரிப்பதுபோல் இடம் வலம் இருபுறங்களிலும் இழுக்க வேண்டும்.
- ஈ - அதே நிலையில் நீட்டி ஒலிக்க வேண்டும். இப்போது உதடுகள் சிரிப்பதைப்போன்ற பாவனையில் இருக்கும். அதனால்தான் ஈ என்று சிரிக்காதே என்கிறோம்.
- உ - தாடை சற்றே கீழிறங்கிய நிலையில் உதடுகள் இரண்டையும் முன்குவிக்க வேண்டும்.
- ஊ - அதே நிலையில் நீட்டி ஒலிக்க வேண்டும். அதனால்தான் பலூன் ஊதும் நிலையில் இவ்வாறு ஊ என்று காற்றைக் கூட்டித் திரட்டி ஊதுகிறோம்.
- எ - தாடையை நன்கு கீழிறக்கி உதடுகளை வட்டமாக விரியுமளவுக்குத் திறந்து கூறவேண்டும்.
- ஏ - அதே நிலையில் நீட்டி ஒலிக்க வேண்டும். தாடையை நன்கு பிரித்த நிலையில் வாயை நன்றாகத் திறந்து ஏஏஏ என்று ஒருவரை அழைத்தால் அதுதான் நம்மால் எழுப்பக்கூடிய பெரிய சத்தம் ஆகும்.
- ஐ - அ என்பதற்குச் செய்ததில் தொடங்கி இ என்பதற்குச் செய்ததில் முடிக்க வேண்டும். வாயைப் பிரித்து உதடுகளைச் சிரிப்பதுபோல் இருபுறமும் பின்னுக்கிழுக்க வேண்டும். அதனால்தான் வியந்து சிரிப்பதற்கு ஐ என்கிறோம். (அ இ என்பதன் கலவைதான் ஐ.)
- ஒ - தாடையை முடிந்தவரை கீழிறக்கி உதடுகளை முன்னால் குவிக்க வேண்டும். தாடையை நன்கு பிளந்து உதடுகளை மூடும் முயற்சிபோல் இது இருக்கும்.
- ஓ - அதே நிலையில் நீட்டி ஒலிக்க வேண்டும். அதனால்தான் வியப்பில் வாயைப் பிளப்பதை ஓ என்று கூறுகிறோம்.
- ஔ - அ என்பதற்குச் செய்ததில் தொடங்கி உ என்று செய்ததில் முடிக்க வேண்டும். அதாவது வாயைச் சற்றே பிரித்து உதடுகளைக் குவிக்க வேண்டும். (அ உ என்பதன் கலவைதான் ஔ)
உயிர் எழுத்துகளை ஒலிக்கும் முறைகள் -
Reviewed by Author
on
February 19, 2018
Rating:

No comments:
Post a Comment