இரண்டாய் பிளவுபட்ட தமிழ் மக்கள் பேரவை; வலுக்கும் உள்முரண்பாடுகள்! -
தமிழ் மக்கள் பேரவையின் நேற்றைய கூட்டத்தில் பேரவை உறுப்பினர்களிடையே கடுமையான கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டதாகத் தெரியவருகிறது.
பேரவையில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கும் ஏனைய பேரவை உறுப்பினர்களுக்கும் இடையே இவ்வாறான முரண்பாடுகள் ஏற்பட்டதாக உள்மட்ட தகவல்கள் தெரிவித்தன.
இதேவேளை, பேரவைக் கூட்டத்தில் பங்கேற்ற பலர் கூட்டம் முடிந்தும் இறுகிய முகங்களுடன் வெளியேறியதை அவதானிக்க முடிந்தது.
பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு கருத்துக்கள் எதனையும் வெளியிட மறுத்த அவர்கள், வேகமாக அங்கிருந்து நழுவிச் சென்றனர்.
தமிழ் மக்கள் பேரவையின் கூட்டம் நேற்று முற்பகல் 11 மணியளவில் யாழ். பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு செய்தி சேகரிப்பதற்காக 10 இற்கும் மேற்பட்ட ஊடகங்களைச் சேர்ந்த செய்தியாளர்கள் அங்கு திரண்டிருந்தனர். எனினும் யாழில் இருந்து செயற்படும் பத்திரிகை ஒன்றைச் சேர்ந்த ஒருவருக்கு மட்டுமே உள்ளே செல்ல அனுமதி வழங்கப்பட்டது.
இதனால் அங்கு திரண்டிருந்த ஊடகவியலாளர்கள் மத்தியில் குழப்பநிலை ஏற்பட்டது. கூட்டத்தில் இடம்பெற்ற உண்மை விடயங்களை அறிந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.
எனினும் கூட்டத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை பேரவை உறுப்பினர்களிடையே கடுமையான கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டதாக உள்ளிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவித்தன.
பேரவையில் அங்கம் வகிக்கும் அரசியல் தலைவர்கள் மற்றும் அரசியல் சாராதோர் இவ்வாறு முரண்பட்டதாகவும் தெரியவருகிறது.
உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் முடிவடைந்த நிலையில், இன்னும் சில மாதங்களில் மாகாணசபை தேர்தலுக்கு தமிழ் மக்கள் முகம் கொடுக்கவுள்ளனர்.
தமிழ் மக்களின் தீர்வுக்கான ஒரே கொள்கை, கோட்பாடுடையவர்களை இணைத்துக்கொண்டு வரும் தேர்தலில் இந்தநிலையில் தமிழ் மக்கள் பேரவை களமிறங்குமா? மக்கள் மத்தியில் ஏற்பட்டிருந்தது.
கடந்த தேர்தல்களில் பேரவையின் மறைமுகச் செயற்பாடுகள் இவ்வாறான எதிர்பாப்பு மக்கள் மத்தியில் ஏற்பட ஏதுவான காரணியாக இருந்தது.
ஆயினும் நேற்றைய கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதிநிதிகளிடம் பெறப்பட்ட தகவல்களின்படி தமிழ் மக்கள் பேரவை அரசியல் சார்பற்ற பொது அமைப்பாக செயற்பட வேண்டும் என அங்கம் வகிக்கும் கட்சி சார்பற்றவர்களின் கருத்துக்கள் அமைந்திருந்ததாக தெரியவருகிறது.
இது இந்தக்கூட்டத்தில் கலந்துகொண்ட கட்சி சார்ந்தோர் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரசியலில் இறங்குவது போன்ற மாயத் தோற்றம் ஒன்றை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி, இறுதியில் அரசு சார்பான தமிழ்த் தரப்புக்கு ஆதரவு வழங்கும் நோக்குடனேயே பேரவை செயற்படுவதாக அதில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சித் தலைவர் ஒருவர் விசனம் தெரிவித்தார்.
இதேவேளை, தமிழ் மக்கள் பேரவையின் உருவாக்கத்தில் முன்னின்ற தமிழ் கட்சி ஒன்று நேற்று இடம்பெற்ற பேரவைக்கூட்டத்தை புறக்கணித்திருந்தது. இதுவும் தமிழ் மக்கள் பேரவைக்குள் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளமையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
இரண்டாய் பிளவுபட்ட தமிழ் மக்கள் பேரவை; வலுக்கும் உள்முரண்பாடுகள்! -
Reviewed by Author
on
March 02, 2018
Rating:
Reviewed by Author
on
March 02, 2018
Rating:


No comments:
Post a Comment