சைக்கிளில் உலகைச் சுற்றி வந்த இருவர் உயிரிழந்திருக்கலாம்: மெக்சிகோ அதிகாரிகள் -
Holger Hagenbusch என்னும் ஜேர்மானியரும் Krzysztof Chmielewski என்னும் போலந்து நாட்டவரும் சைக்கிளில் உலகை சுற்றிவரும் முயற்சியில் ஈடுபட்டிருந்தபோது தென் மெக்சிகோவின் Chiapas மாகாண பகுதியில் வரும்போது காணாமல் போயினர்.
San Cristobal மற்றும் Ocosingo நகரங்களுக்கிடையில் உள்ள மோசமான சாலையில் பயணிக்கும்போது கட்டுப்பாட்டை இழந்து அவர்கள் இந்த பாறைச் சரிவில் விழுந்து இறந்திருக்கலாம் என்று விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அது அதிகம் விபத்து ஏற்படக்கூடிய ஒரு பகுதி என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அது மிகவும் குறுகலான ஒரு பகுதி, அது மட்டுமின்றி பாறைகளுக்கிடையில் உள்ள சரிவு 200 மீற்றர்கள் வரை ஆழமானது என்று கூறியுள்ள அதிகாரி ஒருவர் அந்த இடத்தில் சைக்கிள் ஓட்டுவது மிகவும் ஆபத்தானது என்று தெரிவித்தார்.
ஜேர்மனி மற்றும் போலந்து தூதரகங்கள் மெக்சிகோ அதிகாரிகளுடன் இணைந்து விசாரணை மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் பாறைச்சரிவில் ஒரு உடல் கண்டெடுக்கப்பட்டது. புகைப்படங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது அந்த உடல் Chmielewski உடையதாக இருக்கலாம் என்று பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
என்றாலும் DNA பரிசோதனைகளுக்குப்பின்தான் அடையாளத்தை உறுதி செய்ய முடியும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கண்டெடுக்கப்பட்ட உடல் மிகவும் மோசமாக அழுகிய நிலையில் இருந்ததாகவும், கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றும், காயங்கள் எதுவும் உடலில் காணப்படவில்லையென்றும், ஆனால் மண்டையோடு உட்பட பல எலும்புகள் உடைந்திருந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
உடல் கண்டெடுக்கப்பட்ட அதே இடத்தில் ஒரு சைக்கிளும் ஒரு ஷூவும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவை காணாமல் போன ஜேர்மானியருடையதாக இருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் தொடர்ந்து அந்த இடத்தில் வேறு ஏதேனும் கிடைக்குமா என தேடும் முயற்சியைத் தொடர்ந்து வருகின்றனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை Hagenbusch காணாமல் போன செய்தியை அவரது சகோதரர் பேஸ்புக்கில் பதிவிட்டு அவர் சைக்கிளுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தையும் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
சைக்கிளில் உலகைச் சுற்றி வந்த இருவர் உயிரிழந்திருக்கலாம்: மெக்சிகோ அதிகாரிகள் -
Reviewed by Author
on
May 07, 2018
Rating:

No comments:
Post a Comment