2,000க்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிப்பு....முல்லைத்தீவில் கடும் வறட்சி:
முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவும் வறட்சி காரணமாக வவுனிக்குளத்தின் கீழான சிறுபோகச்செய்கை மேற்கொள்ளப்படாத நிலையில் 2,000க்கும் மேற்பட்ட விவசாயிகள் நேரடியான பாதிப்புக்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இதனால் முல்லைத்தீவு மாவட்டத்தில் குறிப்பிட்ட சில குளங்களின் குறைந்தளவான நிலங்கள் மாத்திரமே சிறுபோகச் செய்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
ஏனைய குளங்களின் சிறுபோகச் செய்கை மேற்கொள்ளமுடியாத நிலையில காணப்படுகின்றன.
இதனால் விவசாயத்தையே வாழ்வாதாரமாகக் கொண்டு வாழும் குடும்பங்கள் முழுமையாக தொழில் வாய்ப்புக்களை இழந்துள்ளன.
வவுனிக்குளத்தின் கீழ் காலபோகத்தின் போது 6,660 ஏக்கரில் நெற்செய்கை மேற்கொள்ளும் அதேவேளை ஏற்று நீர்ப்பாசன பயிர்ச்செய்கையும் மேற்கொள்ளப்படுவதுடன், சிறுபோகச் செய்கைகளின் போது 3,000 ஏக்கருக்கு மேற்பட்ட நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொள்ளப்படுவதுடன், 400 வரையான நிலப்பபரப்பில் மேட்டு நிலப்பயிர்செய்கைகளும் மேற்கொள்ளப்படும்.
ஆனால் தற்போது நிலவுகின்ற வறட்சி காரணமாக இந்தப் பயிர்ச்செய்கைகள் முழுமையாக மேற்கொள்ளமுடியாது போயுள்ளது.
இதனால் 2260 வரையான விவசாயிகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், இந்த குளத்தினை நம்பி வாழும் ஏனைய மக்களும் கடுமையான பாதிக்குப்புக்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த நிலையில் அடுத்த காலபோகச்செய்கைக்கான விதைநெல் தேவை மற்றும் இந்த பகுதி மக்களுக்கான உணவுத்தேவை என்பவற்றுக்கான தேவைகள் அதிகரித்துக் காணப்படுவதாகவும் இப்பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, முல்லைத்தீவு நந்திக்கடல் கரையோரப்பகுதிகளில் முழுமையாகச் சேதமடைந்து காணப்படுகின்ற உவர் நீர் தடுப்பணைகளை மீள் அமைத்துத்தருமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் உள்ள பயிர்ச்செய்கை நிலங்களை பாதுகாக்கும் வகையில் காணப்பட்ட உவர்நீர் தடுப்பணைகள் யுத்தம் காரணமாகவும் ஆழிப்பேரலை காரணமாகவும் முழுமையாகவே அழிவடைந்துள்ளன.
குறிப்பாக, நந்திக்கடல் பகுதியின் இரு புறங்களிலும் உள்ள விவசாய நிலங்களை பாதுகாக்கும் வகையிலும் நாயாறு குமுழமுனை போன்ற பகுதிகளிலும் கரையோர விளை நிலங்களை பாதுகாக்கும் வகையிலும் அதேபோல கொக்கிளாய் கொக்குத்தொடுவாய் கருநாட்டுக்கேணி போன்ற பகுதிகளிலும் காணப்பட்ட உவர்நீர் தடுப்பணைகள் முழுமையாக அழிவடைந்த நிலையில் தற்போது ஒரு பகுதி உவர்நீர் தடுப்பணைகள் மாத்திரம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.
ஆகவே சேதமடைந்த உவர்நீர் தடுப்பணைகளை மீள அமைத்துத்தருமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துளளனர்.
2,000க்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிப்பு....முல்லைத்தீவில் கடும் வறட்சி:
Reviewed by Author
on
June 27, 2018
Rating:

No comments:
Post a Comment