சொந்த மண்ணில் தொடரை இழந்த மேற்கிந்திய தீவுகள்:
மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் வங்கதேச அணி, கடைசி ஒருநாள் போட்டியில் நேற்று விளையாடியது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற வங்கதேசம் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. தொடக்கவீரர் அனமுல் 10 ஓட்டங்களில் அவுட் ஆனார். அதனைத் தொடர்ந்து, தமிம் இக்பால்-ஷாகிப் அல் ஹசன் ஜோடி இணைந்தது.
பவுண்டரிகளை விரட்டிய இந்த இணை 81 ஓட்டங்கள் எடுத்து. ஷாகிப் அல் ஹசன் 44 பந்துகளில் 37 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரஹிம் 12 ஓட்டங்களில் பெவிலியன் திரும்பினார்.
பின்னர், மக்மதுல்லா அதிரடியில் மிரட்டினார். மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய தமிம் இக்பால் சதம் விளாசினார். 124 பந்துகளை சந்தித்த அவர் 2 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 103 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து வந்த மோர்தசா அதிரடியாக 25 பந்துகளில் 36 ஓட்டங்களும், கடைசி வரை களத்தில் நின்ற மக்மதுல்லா 3 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 67 ஓட்டங்களும் குவித்தனர்.
இதனால் வங்கதேச அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 301 ஓட்டங்கள் குவித்தது. மேற்கிந்திய தீவுகள் அணி தரப்பில் ஹோல்டர் 2 விக்கெட்டுகளும், நர்ஸ் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
பின்னர் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியில் கிறிஸ் கெய்ல், வங்கதேச வீரர்களின் பந்துவீச்சை சிதறடித்தார். அவருடன் களமிறங்கிய தொடக்க வீரர் லீவிஸ் 13 ஓட்டங்களில் அவுட் ஆனாலும், ஹோப் மற்றும் கெய்ல் இணை நிலைத்து நின்று விளையாடியது.
அணியின் ஸ்கோர் 105 ஆக உயர்ந்த போது கிறிஸ் கெய்ல் 66 பந்துகளில் 5 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 73 ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆனார். பின்னர் வந்த ஹெட்ம்யர் தனது பங்குக்கு 42 பந்துகளில் 30 ஓட்டங்கள் எடுத்தார்.
அடுத்து களமிறங்கிய ரோவ்மன் பவுல் ஆரம்பத்திலேயே அதிரடி காட்டினார். அப்போது நிதானமாக ஆடிக்கொண்டிருந்த ஹோப் அவுட் ஆனார். அவர் 94 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 64 ஓட்டங்கள் எடுத்தார்.
பின்னர் வந்த அணித்தலைவர் ஹோல்டர் 9 ஓட்டங்களிலேயே அவுட் ஆனார். இறுதிவரை களத்தில் நின்ற ரோவ்மன் பவுல் 41 பந்துகளில் 4 சிக்ஸர் 5 பவுண்டரிகளுடன் 74 ஓட்டங்கள் எடுத்தார்.
மேற்கிந்திய தீவுகள் அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 283 ஓட்டங்கள் மட்டுமே எடுத்ததால், வங்கதேச அணி 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணி தரப்பில் மோர்தசா 2 விக்கெட்டுகளும், ரஹ்மான், ஹுசைன் மற்றும் ஹசன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை, வங்கதேசம் 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. வங்கதேச அணி வீரர் தமிம் இக்பால் ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதினை பெற்றார்.
சொந்த மண்ணில் தொடரை இழந்த மேற்கிந்திய தீவுகள்:
Reviewed by Author
on
July 30, 2018
Rating:
No comments:
Post a Comment