கிளிநொச்சியில் கொல்லப்பட்ட பெண்ணின் உடற்கூறுப் பரிசோதனை அறிக்கை....
கிளிநொச்சியில் சடலமாக மீட்கப்பட்ட பெண் கழுத்து நெரித்து கொல்லப்பட்டுள்ளார் என உடற்கூறுப் பரிசோதனை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
உடற்கூறுப் பரிசோதனைக்காக நேற்று இரவு சடலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்ட நிலையில் சற்றுமுன் உடற்கூறுப் பரிசோதனை நிறைவடைந்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில், கயிறு ஒன்றினால் கழுத்து நெரிக்கப்பட்டதாலேயே பெண் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அந்த பெண் கணவனை பிரிந்து வாழந்து வந்த நிலையில் தற்போது உடற்கூறுப் பரிசோதனை அறிக்கையிலிருந்து அவர் ஐந்து மாத கர்ப்பிணி எனவும் தெரியவந்துள்ளது.
எனினும் அவர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்படவில்லை என உடற்கூறுப் பரிசோதனை அறிக்கை மூலமாக தெரியவந்துள்ளதுடன், இடதுபுற கண்ணிற்கு மேற் பகுதியில் குத்தப்பட்ட உட்காயம் ஒன்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடற்கூறுப் பரிசோதனை முடிவடைந்த நிலையில் இறுதிக் கிரிகைகளுக்காக பெண்ணின் சடலம் தந்தையாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவிற்கான பிரதிப் பொலிஸ்மா அதிபரின் பணிப்பின் பெயரில் அமைக்கப்பட்டுள்ள விசேட பெரும் குற்றப் பிரிவு குழுவினர் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
அத்துடன் குறித்த பெண் பயன்படுத்திய கைத்தொலைபேசியின் தரவுகள், பொலிஸாரால் சந்தேகநபர்களாக கணிக்கப்பட்டுள்ளவர்களின் கைத்தொலைபேசியின் தரவுகள், பொலிஸாருக்கு தேவையான இடங்களில் உள்ள கண்காணிப்பு கமரா காட்சிகளின் பிரதியினைப் பெறுவதற்கான கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் இன்று அனுமதி கோரப்பட்டுள்ளது.
கிளிநொச்சியில் கொல்லப்பட்ட பெண்ணின் உடற்கூறுப் பரிசோதனை அறிக்கை....
Reviewed by Author
on
August 31, 2018
Rating:

No comments:
Post a Comment