`தீராக் கோபமும் முடிவில்லாக் காதலும் உன் மீது மட்டுமே!' - நா.முத்துக்குமார் நினைவுகள்
ஒவ்வொருவருக்கும் அவரது பாடல்கள் பல வகையில் நெருக்கமாக இருக்கும். தந்தையை, மகனை, மகளை, நண்பனை, காதலனை, கணவனை என ஒவ்வொரு உறவையும் கண்முன் கொண்டுவரும் வரிகள் அவை. மூன்றே பாடல்கள்... அந்த கவி அரக்கன் எழுதிய மூன்றே பாடல்கள் என்னை முழுமையாக ஆக்கிரமித்தன. இன்னும் ஆக்கிரமித்துக்கொண்டிருக்கின்றன. என்னை பொறுத்தவரை, அவர் வெறும் பாடலாசிரியரோ, கவிஞரோ கிடையாது. என் காதலன் அவன். என் தனிமையை உடைத்த பேரன்பின் ஆதி ஊற்று அவன். இது அவனுக்காக..!

உன் நினைவுதினம் என்பதற்காக மட்டுமல்ல. நினைவுகளில் தொலைந்து, வங்கக் கடலின் பரப்பளவைக் கூட்ட, என் கண்ணீரைப் பரிசளித்துக்கொண்டிருந்தபோது எனக்குள் இருந்த வெற்றிடத்தை நிரப்பிய ஆக்சிஜன் நீ என்பதற்காக!
பெசன்ட் நகர் பீச்... சோளக் கருதுகளை தீயில் வாட்டும் அந்தப் பாட்டியின் பக்கத்தில்தான் எழுதப்படாத என் நிரந்தர இடம். ஏதேதோ எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்கும். ஆனால், கண்கள் மட்டும் ஓயாமல் அழுதுகொண்டிருக்கும். அழுவது மட்டுமே தொழிலாய்க் கொண்டிருந்த அந்த நாள்களில் எனக்கு இருந்த ஒரே துணை 'பறவையே எங்கு இருக்கிறாய்' பாடல்தான். ரிப்பீட் மோடில் இடைவிடாமல் ஒலித்துக்கொண்டே இருக்கும். 'பார்க்கும் திசைகளெல்லாம் பாவை முகம் வருதே' என்ற வரிகளின்போது, தூரத்தில் அலையில் கால் நனைத்துக்கொண்டிருக்கும் அந்தப் பெண்ணில், நான் விரும்பிய முகத்தைக் காணத் துடித்திருக்கிறேன். அவளின் உருவ ஒற்றுமைக்குக் கொஞ்சமும் சம்பந்தம் இல்லாதவர்களின் முகத்திலும் அவளைக் காண எத்தனித்திருக்கிறது என் மனம்.
ஆனால், அடுத்த வரியே என் முட்டாள்தனத்தை உச்சியில் அடித்து உறைக்க வைக்கும். 'மீன்கள் கானலின் நீரில் தெரிவதுண்டோ'. ஏதேதோ எண்ணங்கள் தோன்றும். நாம் செய்தது காதல்தானா என்றுகூட. கடைசியில் அந்த வரியை நினைத்து சிரிப்புதான் வரும். நாசியைத் தாண்டி வழிந்தோடும் கண்ணீரைத் தடுப்பதற்காக மட்டுமே அசைந்த உதடுகளுக்கு, சிரிப்பென்று ஒன்று இருக்கிறது என்று நினைவூட்டியவன் நீதான்! நான் அழுதபோதெல்லாம் என்னைச் சிரிக்க வைத்தவன் நீதான்!
அதற்கு முன்பெல்லாம் உன்மீது தீராக் கோபம் கொண்டிருக்கிறேன். ஏனெனில், நான் சிரித்துக்கொண்டிருந்த நாள்களிலெல்லாம் என்னை அழவைத்தவன் நீ. 11 வருட விடுதி வாழ்க்கை, மிகவும் சந்தோஷமாகத்தான் கழிந்தது. ஒவ்வொரு நாளும் உற்சாகமாகவே நகரும். ஆனால், அந்த வரிகள்... இந்த 11 வருடங்களில் விடுதியின் தூரம், வயதின் தூரம் என வளர்ந்த நான் இழந்திருந்த விஷயத்தை நெஞ்சுக்குள் சொருகிச்செல்லும். 'வளர்ந்ததுமே யாவரும் தீவாய் போகிறோம். தந்தை அவனின் பாசத்தை எங்கே காண்கிறோம்'. அப்பாவை நினைத்து அழும்போதெல்லாம், அந்த விடுதியைச் சுற்றி கானல் கடலை உருவாக்கி என்னைத் தீவுக்குள் அடைத்தவன் நீ.

அப்போது மட்டுமல்ல, பெசன்ட் நகரை நான் என் ஆறுதலுக்கான இடமாய்த் தேடுவதற்கு முன்பு, பைத்தியக்காரன்போல் அழவைத்தவன் நீ. உலகமே உன் ஆனந்த யாழை மீட்டி மீட்டி பரவசப்பட்டபோது, உன் நதிவெள்ளத்தில் நீந்தத் தெரியாத மீனாய் தள்ளாடினேன். 'என் கண்ணின் இரு கரு விழிகள் உன் முகத்தைக் காட்டுதடி. கண்ணீர்த் துளிகள் காட்சியை மறைக்குதடி' என்று மகளை நினைத்து நீ எழுதிய வரிகளுக்கு இந்தப் பாழாய்ப் போன இதயம் அவளை உருவகப்படுத்தி அழுத நாள்கள் அதிகம்.
இப்படியான வரிகளுக்காக உன்மீது மிகுந்த கோபம் கொண்டிருக்கிறேன். ஆனால், என் தனிமையை உடைத்த உன் பறவைக்காக உன்னை அந்த வங்கக் கடலினும் பெரிதாய் நேசிக்கத் தொடங்கினேன். மனித மனம், தன் தனிமையை உடைக்கும் ஒவ்வொரு விஷயத்தின் மீதும் தீராக் காதல் கொள்ளுமே! நான் கொண்ட இரண்டாம் தீராக் காதல் நீதான். உன் வரிகள்தான். நான் நேசிப்பவர்கள், காதலித்தவர்கள் என் உணர்வுகளில், என் புன்னகையில், என் கண்ணீரில் எப்படியான தாக்கத்தை ஏற்படுத்தினார்களோ, அதற்கு இணையான தாக்கத்தை ஏற்படுத்தியது உன் வரிகள் மட்டுமே! அதற்கு இப்போது நான் எங்கே போவேன்?
காற்றின் வழியாகத்தான் தகவல்கள் பரிமாறப்படுகின்றன. எதிர்காலத்தில், இந்த உலகம் நீரின் வழியாகவும் தகவல்களை பரிமாறத் தொடங்கும். அப்போது மழையின் வாயிலாக உன் தமிழை, என்னை அழவைத்த, என்னை சிரிக்க வைத்த, என் தனிமையை உடைத்தெறிந்த உன் தமிழை எனக்கு அனுப்பிவை. காலம் எனக்குக் கொடுக்கக் காத்திருக்கும் அடுத்த தனிமைக்கான ஆயுதமாக அதை நான் சேமித்துக் கொள்கிறேன். முடிந்தால் இப்போதே அனுப்பிவிடு. ஏனெனில், என்னைப் போலவே இப்போது வானமும் அழுதுகொண்டிருக்கிறது... உன்னை நினைத்து..!
`தீராக் கோபமும் முடிவில்லாக் காதலும் உன் மீது மட்டுமே!' - நா.முத்துக்குமார் நினைவுகள்
Reviewed by Author
on
August 16, 2018
Rating:
No comments:
Post a Comment