முதலாவது சர்வதேச போட்டியிலேயே தங்கம் வென்று அசத்திய தமிழன்! -
இதன்படி, இலங்கை சார்பாக தான் பங்குபற்றிய முதல் சர்வதேசப் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்று மெய்வல்லுனர் அரங்கில் மிகவும் குறுகிய காலத்தில் அதிசிறந்த பெறுபேறையும் சண்முகேஸ்வரன் பெற்றுக்கொண்டார்.
வியட்நாம் மெய்வல்லுனர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட வியட்நாம் பகிரங்க மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடர் வியட்நாமின் ஹோச்சிமிங் நகரில் நடைபெற்றது.
இதில் இலங்கை சார்பாக 4 வீரர்கள் பங்கேற்றிருந்தனர்.
இதில் போட்டிகளின் இரண்டாவது நாள் நடைபெற்ற ஆண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் கலந்துகொண்ட சண்முகேஸ்வரன், போட்டித் தூரத்தை 31 நிமிடங்களும் 01.25 செக்கன்களில் நிறைவு செய்து முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார். இது அவரது இவ்வருடத்துக்கான அதிசிறந்த நேரப் பதிவாகும்.
ஹட்டன் – வெலி ஓயாவைப் பிறப்பிடமாகக் கொண்ட 26 வயதுடைய கே. சண்முகேஸ்வரன், கடந்த 3 வருடங்களாக அரை மரதன் மற்றும் 10 ஆயிரம் மீற்றர் உள்ளிட்ட நீண்ட தூர போட்டிகளில் பங்குபற்றி தேசிய மட்டத்தில் பல வெற்றிகளைப் பதிவுசெய்திருந்தார்.
அதிலும் குறிப்பாக, கடந்த 4 வருடங்களாக இலங்கை பிரபல மெய்வல்லுனர் பயிற்றுவிப்பாளரான சஜித் ஜயலாலிடம் பயிற்சிகளைப் பெற்று வருகின்ற சண்முகேஸ்வரன்,
இவ்வருட முற்பகுதியில் நடைபெற்ற இராணுவ தொண்டர் படையணி மெய்வல்லுனர் மற்றும் முப்படையினருக்கான மெய்வல்லுனர் போட்டித் தொடர்களில் ஆண்களுக்கான மரதன் ஓட்டப் போட்டிகளில் பங்குபற்றி தங்கப் பதக்கங்களை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இந்தோனேஷியாவின் பாலம்பேங் நகரில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டு விழாவுக்கு இலங்கை மெய்வல்லுனர் வீரர்களைத் தெரிவுசெய்வதற்கான தகுதிகாண் போட்டிகளின் இரண்டாவதும், இறுதியுமான கட்டம் கடந்த மே மாதம் கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்றது.
இதில் ஆண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட சண்முகேஸ்வரன், குறித்த போட்டியை 31 நிமிடங்களும் 16.84 செக்கன்களில் நிறைவு செய்து முதலிடத்தைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
முதலாவது சர்வதேச போட்டியிலேயே தங்கம் வென்று அசத்திய தமிழன்! -
Reviewed by Author
on
September 21, 2018
Rating:
Reviewed by Author
on
September 21, 2018
Rating:


No comments:
Post a Comment