அண்மைய செய்திகள்

recent
-

கொழும்பை அதிரவிட்ட கறுப்பு சட்டை போராட்டம்! கடைசிநேர குழப்பத்திற்கு யார் காரணம்? -


மலையக வரலாற்றில் ஒக்டோர் 24ம் திகதியான இன்று மறக்க முடியாத நாளாக பதிவாகியுள்ளது. மலையக மக்களுக்காக கொழும்பில் இன்று முன்னெடுக்கப்பட்ட கறுப்பு சட்டடை போராட்டம் இந்த நிலையை ஏற்படுத்தியுள்ளது.

ஒக்டோபர் 24 போராட்ட குழுவினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இந்த ஆர்ப்பாட்டமானது மிகப் பெரிய வெற்றியை அடைந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
மிகவும் அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டத்தின் இறுதி நேரத்தில் குழப்பம் ஏற்பட்டிருந்தது. இதனால் பொலிஸார் தடியடி நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சம்பவம் குறித்த சில திடுக்கிடும் தகவல்கள் தற்போது.

 வெளியாகியுள்ளன. பெருந்தோட்ட மக்கள்......
இலங்கையின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக பெருந்தோட்ட மக்கள் இருந்து வருகின்றனர். எனினும் அந்த மக்களின் சமூக, பொருளாதார, அரசியல் நிலைமைகள் பெரிதும் பின்தங்கிய நிலையில் இருக்கின்றது.
இதனை எவரும் மறுக்க முடியாது. இவர்களின் பொருளாதாரம் பெருந்தோட்ட துறையை நம்பியே இருக்கின்றது.
ஆங்கிலேயக் காலனித்து ஆட்சியில் இலங்கைக்கு எவ்வாறு அழைந்துவரப்பட்டு பெருந்தோட்டங்களில் குடியமர்த்தப்பட்டார்களோ அந்த நிலையிலிருந்து இன்னமும் இந்தச் சமூகம் எழுச்சிப் பெற முடியாத ஒரு துர்ப்பாக்கிய நிலைமையிலேயே வாழ்ந்து வருகின்றனர்.

மலையகப் பெருந்தோட்ட மக்கள் வாழும் பிரதேசங்களை எடுத்துப் பார்த்தால் அவை நாட்டின் ஏனைய பிரதேசங்களை விடவும் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகின்றன.
இது மறைக்க முடியாத உண்மையாகும். இதற்கு பெருந்தோட்ட பிரதேசங்களில் வாழும் இந்திய வம்சாவளி மக்களின் பிரஜா உரிமை பறிக்கப்பட்டமை ஒரு உதாரணம்.
மலையக மக்கள் பல்வேறு காலகட்டங்களிலும், பல்வேறு ஒடுக்கு முறைகளுக்கு உள்ளாகியுள்ளனர். எனினும், தற்போது அந்த மக்களின் வாழ்க்கை முறைமையில் சற்று மாற்றம் ஏற்பட்டு வருவதை காணமுடிகின்றது.
1000 ரூபாய் சம்பள கோரிக்கை......
பெருந்தோட்ட துறையில் பணிப்புரியும் மக்களின் நாளாந்த சம்பளமாக 1000 ரூபா வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது.
பெருந்தோட்டத் தொழிற்துறையான தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தற்போது ஒருநாள் அடிப்படைச் சம்பளமாக 500 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, பொருட்களுக்கான விலையேற்றம் ஆகியவற்றினைக் கருத்திற்கொண்டு, தமக்கான ஒருநாள் அடிப்படை சம்பளமாக 1000 ரூபாய் வழங்க வேண்டுமென கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.


இந்த விடயம் தொடர்பில் தொழிற்சங்கங்களுக்கும், முதலாளிகள் சம்மேளனத்துக்கும் இடையில் மேற்படி சம்பள விவகாரம் தொடர்பில், மூன்று கட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற போதும், அவை அனைத்தும் தோல்வியிலேயே முடிவடைந்தன.
இந்த நிலையில்அதிகபட்டசமாக தொழிலாளி ஒருவருக்கு ஒருநாள் அடிப்படைச் சம்பளமாக 600 ரூபாவையே வழங்க முடியும் என்று, பெருந்தோட்ட முதலாளிகள் தெரிவித்துள்ளனர்.
நாடளாவிய ரீதியில் வெடித்த போராட்டம்...
தொழிற்சங்கங்களுக்கும், முதலாளிகள் சம்மேளனத்துக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததை தொடர்ந்து, 1000 ரூபாய் சம்பள உயர்வை வலியுறுத்தி மலையக பகுதிகளில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

எனினும், இந்த போராட்டமானது நாளடைவில் தீவிரமடைந்தமையினால், மலையக மக்களுக்கு ஆதரவாக வடக்கு, கிழக்கு பகுதி மக்களும் போராட்டத்தில் குதித்தனர். இதனால் இந்த விடயம் அண்மைய காலமாக இலங்கையில் பேசும் விடயமாக மாறியது.
கடந்த இரண்டு நாட்களாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, திருகோணமலை, மட்டக்களப்பு உள்ளிட்ட பகுதிகளில் பொது மக்கள், பல்கலைக்கழக மாணவர்கள் என பலரும் மலையக மக்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதித்தனர்.
டீம் 24......
இந்நிலையிலேயே, மலையக மக்களின் 1000 ரூபாய் சம்பள உயர்வை வலியுறுத்தும் போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் சமூக தலைதளங்கள் ஊடாக அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
டீம் 24 என்ற பெயரில் இயங்கிய குழு ஒன்று இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. ஒக்டோபர் 24ம் திகதியான இன்று இந்த போராட்டத்தை முன்னெடுக்கும் வகையில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

குறிப்பாக கொழும்பில் பணிப்புரியும் மலையக இளைஞர், யுவதிகளை இலக்காக கொண்டு இந்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. முகப்புத்தகம், வட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களின் வாயிலாக இதற்காக பிரத்தியேக நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருந்தன.
டீம் 24, ஒக்டோபர் 24 போராட்ட குழுவாக மாற்றம்....
ஆரம்பத்தில் டீம் 24 என்ற பெயரில் இயங்கி வந்த இந்த குழு இறுதி நேரத்தில் ஒக்டோபர் 24 போராட்ட குழுவாக தன்னை அடையாளப்படுத்திக்கொண்டது.
நேற்றைய தினம் கொழும்பு விஹாரமகா தேவி பூங்காவில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.
போராட்டத்தை ஒழுங்கு செய்த ஏற்பாட்டு குழுவில் ஒரு சிலர் தனித்துவமாக செயற்பட தொடங்கியதை அடுத்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

கொழும்பு நகரை அதிரவிட்ட கறுப்பு சட்டை போராட்டம்......
அந்த வகையில், அடிப்படை சம்பளத்தை ஆயிரம் ரூபாயாக அதிகரிக்குமாறு வலியுறுத்தி தலைநகர் கொழும்பில் இன்று மாபெரும் கறுப்பு சட்டை போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இன்று காலை 10 மணிக்கு ஒன்று கூடியஇளைஞர், யுவதிகள் பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
ஆரம்பத்தில் சுமாரான கூட்டமே போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர். எனினும், சிறிது நேரத்தின் பின்னர் இளைஞர், யுவதிகள் போராட்ட களத்தை நோக்கி படையெடுக்க போராட்டம் மிகவும் தீவிரமடைந்தது.
சுமார் 10 ஆயிரம் பேர் வரையில் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால், காலி முகத்திடல் மற்றும் ஜனாதிபதி செயலகம் உள்ளிட்ட இடங்களில் பொலிஸார் குவிக்கப்பட்டனர். கலகம் அடக்கும் பொலிஸாரும் வரவழைக்கப்பட்டனர்.

இந்த போராட்டம் காலை 10 மணிமுதல் 12 மணி வரையில் காலி முகத்திடலில் கவனயீர்ப்பு போராட்டமாக முன்னெடுக்கப்பட்டது.
பொலிஸார் தடியடி.......
12 மணியுடன் இந்த போராட்டம் நிறைவுபெறும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தபோதும், முன்னறிவிப்புகள் இன்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த சிலர் ஜனாதிபதி செயலகம் நோக்கி பேரணியாக சென்றனர்.
இதன்போது, ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னதாக வீதித் தடைகளை ஏற்படுத்திய பொலிஸார், போராட்டக்காரர்களை அந்த இடத்திலேயே தடுத்து நிறுத்தினர். இதனால் குறித்த இடத்திலே தமது போராட்டத்தை அவர்கள் தொடர்ந்தனர்.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் அவ்விடத்திற்கு வந்து தமது கோரிக்கைக்கு தீர்வினை பெற்றுத்தராவிட்டால் போராட்டத்தை கைவிடப்போவதில்லை என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், உடனே இவ்விடத்தை விட்டு கலைந்து செல்லாவிட்டால் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல் மேற்கொள்ளப்படும் என பொலிஸார் போராட்டக்காரர்களை எச்சரித்திருந்தனர்.
எனினும், பொலிஸாரின் எச்சரிக்கையை மீறி செயற்பட்டமையின் காரணமாக பொலிஸார் நீர் தாரை பிரயோகம் மேற்கொண்டிருந்ததுடன், தடியடியும் நடத்தியதாக தெரிவிகப்பட்டுள்ளது.
கறுப்பு சட்டை போராட்டத்தில் நுழைந்த கறுப்பு ஆடுகள்......
அரசியலை புறம் தள்ளி முற்று முழுதாக சமூக நோக்கம் கருதி ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டத்தில் சில அரசியல் வாதிகள் மற்றும் தொழிற்சங்கங்களுடன் தொடர்புடைய நபர்கள் கலந்துகொண்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொலிஸார் விதித்த கட்டுப்பாடுகளுடன் மிகவும் அமைதியான முறையில் ஒக்டோபர் 24 போராட்ட குழு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்ததுடன், உரிய நேரத்தில் ஆர்ப்பாட்டத்தை முடித்துக்கொண்டதாகவும் தெரியவந்துள்ளது.

எனினும், அரசியல் வாதிகள் மற்றும் தொழிற்சங்கங்களுடன் தொடர்புடைய நபர்களே மாலை நேரம் வரையில் இருந்து, இந்த போராட்டத்தை குழப்பும் வகையில் செயற்பட்டுள்ளதாக ஒக்டோபர் 24 போராட்ட குழு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நபர்களே எல்லை மீறி செயற்பட்டதாகவும், இதன் காரணமாகவே பொலிஸார் நீர் தாரை மற்றும் தடியடி நடத்தியதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

வெற்றியடைந்த கறுப்பு சட்டை போராட்டம்.......
மலையக வரலாற்றில் இந்த ஒக்டோபர் 24 போராட்டமானது பதியப்பட வேண்டிய ஒன்றாக மாறியுள்ளது. காரணம் யாரும் எதிர்பாராத அளவுக்கு இந்த போராட்டத்தில் இளைஞர் மற்றும் யுவதிகள் கலந்துகொண்டிருந்தனர்.
மலையக பகுதிகளில் கடந்த காலங்களில் பல்வேறு போராட்டங்கள் இடம்பெற்றிருந்த போதிலும், இன்றைய ஒன்டோபர் 24 போராட்டம் மிகவும் முக்கியத்துவம் பெற்ற ஒன்று என சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.

கொழும்பை அதிரவிட்ட கறுப்பு சட்டை போராட்டம்! கடைசிநேர குழப்பத்திற்கு யார் காரணம்? - Reviewed by Author on October 25, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.