புள்ளிகள் கரைந்தபொழுது! எட்டு வருட தவத்தில் ஓர் படைப்பு -
எழுத்தாளர் ஆதிலட்சுமியின் எட்டு ஆண்டுகால தவமாக இந்த நாவல் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.
எழுதுவதற்கு ஒரு தகமை எனச் சில எழுத்தாளர்கள் இருக்கிறார்கள்…2009 முள்ளிவாய்க்கால் நந்திக்கடலின் முடிவின் கரைவரை சென்று மீண்ட படைப்பாளியாகவும், பண்டிதர், நா. இராசையாவின் மகளாகவும், சமூக ஒடுக்குமுறைக்கு எதிராக எழுத்துக்களத்தில் இருந்து, 1982 முதல் வரலாற்றின் தேவைகருதி 1982 முதல் இன ஒடுக்குமுறைக்கு எதிராக பேனாமுனையில் படைப்பாளிப்போராளியாகவும் விளங்கும் ஆதிலட்சுமி அவர்களும் ஈழத்து எழுத்தாளர் ஆவார்.
இலக்கியம் படைக்க சிலர் எழுதுகிறார்கள்!
சிலர் உலகை உய்விக்க, கலைகள் சிறக்க, மொழிகள் செழிக்க, என எழுதுகிறார்கள்!
கண்டது, கேட்டது, எண்ணியது, விரும்பும் எண்ணம் எனவும் சிலர் எழுதுகிறார்கள்!
காலச் சக்கரத்தில் கரைந்து போகாமல் இருக்கவும் சிலர் எழுதுகிறார்கள்…
இவரது படைப்புகள் எரிமலை, வெளிச்சம், ஈழநாதம், சுட்டும் விழி, சரிநிகர், ஞானம், வைகறை, வெள்ளிமலை, கவிதை, நாற்று, யாத்ரா போன்ற பத்திரிகைகள், சஞ்சிகைளிலும், இணையத்தளங்களிலும் வெளியாகி உள்ளன. இன்றும் பல ஊடகங்களில் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
ஒவ்வொரு மனிதருக்குள்ளும் தம் மன இருளை அகற்கி, அதன் மூலம் நிறைவான வாழ்வு வேண்டும். அதற்கு அகமாற்றம் வேண்டும். எழுத்துக்களுக்கு இவ்வலிமை உண்டு. வரலாறு என்பது முக்கியமானது.
அடுத்த தலைமுறைக்கு வரலாற்றை ஆவணப்படுத்தி கையளிக்க வேண்டிய கடமை எமக்குண்டு எனச் செவ்விகளில் கூறிய ஆதிலட்சுமியின் எட்டு ஆண்டுகாலத் தவம் ஒரு படைப்பாகி 'புள்ளிகள் கரைந்தபொழுது" எனும் நூல் வடிவாக வெளிவந்துள்ளது.
இந்நூல் முன்னர் ஈழத்திலும், கனடா, நோர்வே ஆகிய நாடுகளில் அறிமுகப்படுத்தி வெளியிடப்பட்டு கடந்த 06ஆம் திகதி மாலை 18.10 மணிமுதல் பேர்ன் மாநிலத்தில் அமைந்துள்ள சைவநெறிக்கூடம் தமிழர்களறி மண்டபத்தில் இனிதே நிறைந்த தமிழர் ஆர்வலர்களுடன் வெளியிடப்பட்டுள்ளது.
மங்களவிளக்கேற்றுதல், நினைவு வணக்கம் என்பவற்றையடுத்து தமிழர்களறியை சேர்ந்த கார்த்திகா முரளிதரன் வரவேற்புரை ஆற்றினார்.
ஞானலிங்கேசுவரர் திருக்கோவிலின் அருட்சுனையர் சிவருசி. தருமலிங்கம் சசிகுமார் நல்லாசியுரையினை வழங்கினார்.
நூலுக்கானதும் நூலாசிரியருக்குமான அறிமுகவுரையை சுவிஸ் தமிழர் கலைபண்பாட்டுகழக பொறுப்பாளர் கொலம்பஸ் வலன்ரீன் ஆற்றினார்.
நாவலுக்கான வெளியீட்டுரையை தமிழர்களறி தில்லையம்பலம் சிவகீர்த்தி நிகழ்த்த, தாயகத்திலிருந்து வருகைதந்திருந்த வாழ்நாள் பேராசிரியர்களான அ. சண்முகதாஸ், அவர்தம் பாரியார் திருவாட்டி மனோன்மணியும் நாவலை வெளியிட்டுவைத்து சிறப்பித்தனர்.
முதற்படியை சுவிற்சர்லாந்து தமிழ்கல்விச்சேவையின் ஒருங்கிணைப்பாளர் கந்தசாமி பார்த்திபன் பெற்றுச் சிறப்பித்தார்.
வெளியீட்டு நிழ்வைத்தொடர்ந்து, நாவல் குறித்த ஆய்வுரையை போராளிப்படைப்பாளியும் சியோன் மாநில தமிழ்ப்பாட ஆசிரியையுமான பிரேமினி அற்புதராசா நிகழ்த்தினார். மூத்தபோராளியும் விடுதலைப்புலிகள் ஏட்டின் முதன்மை ஆசிரயருமான சு. இரவி நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக வருகைதந்து சிறப்புரையும் ஆற்றினார்.
தொடர்ந்து நாவலாசிரியர் ஏற்புரையினையும் நன்றியுரையினையும் வழங்கினார். பலராலும் நன்கறியப்பட்டவரும், கவியாற்றல் மிகுந்தவரும், கொனிக்ஸ் தமிழ்ப்பள்ளி ஆசிரியையுமான சிவதர்சினி ராகவன் நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்தளித்தார்.
நிகழ்வின் நிறைவில் சிவகுமார் ஆதிலட்சுமி இணையர் மற்றும் வாழ்நாள் பேராசிரியர்களையும், ஞானலிங்கேசுவரர் திருக்கோவில் மங்களவாத்தியம் ஒலிக்க மாலை அணிவத்து மதிப்பளித்து சிறப்பித்தமை நிகழ்வின் மகுடமாக அமைந்தது.
விழாவில் மொழிப்பற்றாளர்கள், இலக்கிய படைப்பாளர்கள், ஊடகவியலாளர்கள், சுவைஞர்கள், நண்பர்கள் எனப் பலரும் விழாநிறைவுகாணும்வரை நிலைத்திருந்து சிறப்புச் சேர்த்தனர்.
வேற்றுநாட்டவர்களும் புரிந்துகொள்வதற்கு ஏதுவாக, இந்த நாவலை மொழியாக்கம் செய்யும் பொறுப்பை தமிழர்களறி ஏற்றுக்கொள்வதாக தில்லையம்பலம் சிவகீர்த்தி தனது வெளியீட்டுரையில் உறுதியளித்து, இளையோர்களுக்கு அழைப்புவிடுத்தமை அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்தியது.
ஈழத்தமிழ்மக்கள் எதிர்காலம் தொடர்பான அளவிறந்த அன்புநிறைந்த அக்கறையும் கரிசனையுந்தான் இவரது எழுத்தில் தெரிவதாக வெளியீட்டுரையில் தமிழர் களறியின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் நூலாசிரியர் தனது நாவலில் குறிப்பிட்டிருப்பது 'நான் அழிந்துபோகலாம், நாம் அழிந்துபோகக்கூடாது. எங்கள் முன்னோர்கள் துன்பப்பட்டார்கள், நாம் துன்பப்பட்டோம், இந்நமும் துன்பப்படுகிறோம், ஆனால் எமது அடுத்த தலைமுறையினரும் இதே துன்பங்களை அனுபவிக்கக்கூடாது என நாம் எண்ணுவதுதான் சிறப்பானது.
நமது இனம் உலகம் முழுவதும் பரந்துவாழ்வதாக நாம் பெருமை கொள்ளலாம். நாம் அந்ததந்த நாட்டவர்கள்போல நடந்துகொள்ளலாம். ஆனால் எல்லா நாடுகளும் எம்மை இலங்கைத் தமிழர்கள் என்றுதான் குறிப்பிடுகின்றன.
இதைப் புரிந்துகொண்டு அடுத்தடுத்த தலைமுறையினரின் எதிர்கால நல்வாழ்வுக்காகவாவது நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டு நிற்கவேண்டும் என உங்கள் இருகரங்களையும் பற்றி உங்களை என் கதைக்குள் அழைக்கின்றேன்…"ஆகவே சைவநெறிக்கூடம், தமிழர் களறியில் வெளியிட்டு நூலுக்கு வெளியீட்டுரை வழங்க ஒப்புக்கொண்டதாகவும் தமிழர் களறியால் தெரிவிக்கப்பட்டது.
ஆதிலட்சுமி சிவகுமார் ஈழத்தில் வன்னியில் வானொலியில் பழந்தமிழ் இலக்கியங்கள் முதற்கொண்டு பாரதி கவிதைகள் வரை, போரிலக்கியப் படைப்புக்கள் வரை எண்ணத்திற்கு புதிய வடிதேடி வடிவம் கண்டவர் ஆவார்.
பெண்படைப்பாளியாக துணிவுடனும், விடாமுயற்சியுடனும் ஈழத்தமிழ் படைப்புலகத்தில் எம் மொழிக்கும், இனத்திற்கும், தாய்நாட்டிற்கும் தன் படைப்பால் தொண்டாற்றும் தமிழர்களறி இவரை மதிப்பளித்து, இவர்படைப்பு தமிழ்மக்கள் அனைவரது கைளிலும் சென்றடையவேண்டும் என்ற தூண்டலை அளிக்கிறது என சிவருசி தர்மலிங்கம் சசிக்குமார் ஐயா தெரிவித்தார்.
இவர் இப்படைப்புடன் நின்றுவிடாமல் மேலும் பல படைப்புக்களை தமிழச்சமூகத்திற்கு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
தாயகக் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்கள் ஒரு முறை சொல்லியருந்தார். "எங்கள் வலியை நாங்கள் தான் அழ முடியும். அடுத்தவனை எமக்காக அழச்சொல்ல முடியாது" இந் நாவல், நாம் இழந்த எமது அரசியல், சமூக, பண்பாட்டுச் ஈழநாட்டை வலியுடன் சொல்வதுடன் எமது இனம் இப்படியே அழிந்துபோகக்கூடாது என்றும் சொல்கிறது. இந்நாவல் ஒவ்வொரு தமிழரும் படிக்க வேண்டிய நாவல்.
கடந்த வரலாற்றை அடுத்த இளந்தமிழ்ச் சமூகத்திற்கு எடுத்துச்சொல்ல வேண்டும். அதற்கு இந்நூல் அனைவர் வீட்டிலும் இருக்க வேண்டிய நூல். புள்ளிகள் கரைந்தபொழுது உலக மொழிகள் பலவற்றில் குறிப்பாக சுவிற்சர்லாந்தில் யேர்மன், பிரெஞ், இத்தாலி மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட வேண்டிய நூல்.
இலக்கியம் என்பது காலத்தின் கண்ணாடி, தான் வாழும் காலத்தின் முக்கிய கூறுகளை ஆக்கபூர்வமாக ஆவணப்படுத்தி கையளிக்க வேண்டிய பொறுப்பு படைப்பாளிகளைச் சாரும்.
இவைதான் அடுத்த தலைமுறையினரை நெறிப்படுத்தும். இது ஆதிலட்சுமி ஒருமுறை வழங்கிய செவ்வி. இப்படைப்பாளி தான் சொன்னை செய்திருக்கிறார் எனச் சபையோர்கள் எண்ணி நிறைந்ததாக நிகழ்வு நிறைவடைந்தது.
புள்ளிகள் கரைந்தபொழுது! எட்டு வருட தவத்தில் ஓர் படைப்பு -
Reviewed by Author
on
October 09, 2018
Rating:

No comments:
Post a Comment