மறைந்தும் மறையாத மாணிக்கம்….M.P.M. காஸிம் புலவர்
ஆலிம்சா என்றும் காஸிம் புலவர் என்றும் அழைக்கப்பட்ட இவர் 1912ம் ஆண்டு மாசித்திங்கள் முஹம்மது மீராசாயிபுக்கும் பார்த்து முத்தம்மாவுக்கும் மகனாக பிறந்தார். மன்னார் விடத்தல் தீவின் சொந்தமிடமாகவும் புலவர்களின் பூர்வீகம் இந்தியாவில் உள்ள தொண்டியாகும்.இவரது பாட்டனார் முஹம்மது பிச்சையாவார்.
புலவரவர்களின் பல்வகைமை வெளிப்பாடுகள்
நாவலாசிரியராக பாவலராக புராண விரிவுரையாளராக நாடக எழுத்தாளராக கவிஞராக மேடைப்பேச்சாளராக பலதுறைகளில் தனது புலமையினை வெளிப்படுத்தினார்.புலவரின் தோற்றம்- அன்புடன் பழகுவதிலும் மென்மையானவராகவும் கருப்பு சுருட்டும் மாட்டுக்கடதாசியிலான பையும் கடிதங்கள் அடங்கிய டயறியும் தோளில் வெள்ளைச்சால்வையோடு மனப்பாக்கு காசிக்கட்டியுடன் உலாவருவது வழமை.
புலவரின் கல்விகற்றல்
இந்தியா தமிழ் நாட்டில் காயல் பட்டினத்தில் மார்க்க கல்வியை கற்கும் வேளையில் அத்துடன் தமிழ் இலக்கண இலக்கியங்களையும் கற்றுத்தேர்ந்தார் இயல்பாகவே நாவண்மையும் கைவரப்பபெற்றதினால் தமிழ்நாட்டு அறிஞர்களின் நட்பும் மேலும் இலக்கியத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.
முதலாவது படைப்பு பற்றியது-
அந்தக்காலத்தில் இந்தியாவுக்கு போய்வர கெடுபிடிகள் மிககுறைவு எப்போதாவது பொலிஸ்காரன் பிடிப்பானாம் பிறகு விட்டுவிடுவானாம் இதைக்கருவாக வைத்துக்கொண்டு மிகவும் சுவராசியமாக முதல் தடவையாக எழுதிய நாவல் தான் "கள்ளத்தோணிக்கு தீர்ப்பு" எனலாம்.
பிறை-நூறுல்ஹக் போன்ற மாதவார இதழ்கள் புலவர்களின் இலக்கிய ஆற்றலை வளர்க்க பெரிதும் உதவின முறைப்படி இலக்கியம் கற்ற புலவரவர்கள் இஸ்லாமிய இலக்கியங்களான (சீறாப்புராணம்-ஷாதுலி நாயகம் முகிதீன் புராணம் குதுபு நாயகம்-புகாரி புர்தா யானைக்காதல் செய்யது படைப்போர்-காசீம் படைப்போர்) போன்ற அரும்பெரும் காப்பியங்களை எல்லாம் ஐயம் திரிபுற கற்றறிந்து வியாக்கியானம் செய்வதில் பெரும் வித்தகராக இருந்தார்.
M.P.M.முஹம்மது காஸிம் ஆலிம் ஸாஹிப் புலவர் செய்த அரிய செயல்---
தனது சேவையில் முதலாவது 1950களில் "அன்சாரி நூலகம்" ஒன்றை நிறுவியதாகும் மன்னார் மாவட்டத்தின் முதலாவது தனியார் நூல் நிலையம் இதுவேயாகும் சுமார் 300 புத்தகங்களோடு ஆரம்பிக்கப்பட்ட இந்த நூலகம் 1990 களில் இடப்பெயர்வுகள் ஏற்பட்ட போது சுமார் 5000 அரிய நூல்கள் இங்கே இருந்தனவாம்.
M.P.M.முஹம்மது காஸிம் ஆலிம் ஸாஹிப் புலவர் பல வருத்தங்களை கூட அரேபிய இஷ்மு முறைகள் மூலம் குணப்படுத்தியமையும் பேய் பில்லி சு10னியங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வியத்தகு விதத்தில் நலமடைய செய்திருக்கின்றார்கள்.
- இலங்கைத்தொழிலாளர் காங்கிரஸின் மாநில மாநாடு 1969களில் மன்னாரில் நடைபெற்றபோது புலவரின் பேச்சாற்றலை கண்டு இ.தொ.காங்கிரசின் தவிசாளராகவும் பின் அமைச்சருமாக இருந்த திரு.சௌமிய மூர்த்தி தொண்டமான் அவர்கள் புலவர்களுக்கு தமிழ்முழக்கம் எனும் பட்டமளித்து பொன்னாடை போர்த்தி கௌரவித்தார் இ.தொ.காங்கிரசின் மாவட்ட பிரதிநிதியாக இருந்த திரு.எஸ்.ஆர்.எம்.வேலுச்சாமி அவர்களின் தலைமையிலே இம்மாநாடு இடம்பெற்றது.
புகழ்பெற்ற திருத்தலமான திருக்கேதீஸ்வரத்தில் நடைபெறுகின்ற திருவாசக விழாவில் ஈழத்து சிவனடியார் திருக்கூட்டம் அதன் தலைவர் திருவாளர் சரவணமுத்து சுவாமிகள் தலைமையில் நடைபெற்றபோது அப்போதும் இலக்கியங்களில் சமயமும் தமிழும் என் சொற்பொழிவாற்றினார். பாராட்டும் பெற்றார்.
- 1971 இலக்கியப்பொய்கையில் தமிழும் இஸ்லாமும் எனும் தொனிப்பொருளில் பேசிய பேச்சு புலவரவர்களின் ஆற்றலை கண்டு வியந்து அம்மேடையில் வைத்து கொடை வள்ளல் மில்க்வைற் கனகராசா அவர்களினால் செந்தமிழ் புரவலர் எனும் பட்டம் வழங்கி சிறப்பித்தனர்.
- 1972 இல் தேசிய அரசுப்பேரவையின் பிரதிநிதியாகவிருந்த நெய்னா மரிக்காரின் சிபார்ஸ்க்கு அமைவாக சமாதான நீதவான் பட்டம் வழங்கப்பட்து.
- 1973களில் திருகோணமலையில் இந்து இளைஞர் பேரவை மாநாடு நடைபெற்றது அம்மாநாட்டில் சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்ட புலவரவர்கள் மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம் என்ற மகுடத்திலே சொற்பொழிவாற்றியமைக்காக அம்மாநாட்டு மேடையில் வைத்து செந்தமிழ் வாரிதி எனும் பட்டம் வழங்கி பொன்னாடையும் போர்த்தி பொற்கிளியும் வழங்கி சிறப்பித்தனர்.
- ஈழத்து திருத்தலத்திலே அதிசிறப்பு பெற்ற நல்லூர் கந்தசுவாமி கோவிலிலே 1976 களில் பிரம்ம ஸ்ரீ மணி ஐயர் தலைமையில் நடைபெற்ற விழாவில் கம்பன் இராமாயணத்தில் வம்பு செய்தானா? ஏன்ற தலைப்பில் ஆய்வுரை நிகழ்த்தியற்காக சிவநெறி அன்பர் எனும் பட்டம் சூட்டப்பட்டு கௌரவிக்கப்பட்டார்கள்.
கள்ளத்தோணிக்கு தீர்ப்பு முதலாவது நாவலானது 1952ம் ஆண்டு 50 காசுகள் கொண்ட கன்னிப்படைப்பாகும் சட்டவிரோதமாக இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்த இன்னெருவன் காவல்துறையினரால் பிடிக்கபட்டு சித்திரவதைக்குள்ளாக்கப்ட்டு நீதி விசாரணை எதுவுமின்றி சிறையில் படுகின்ற அவஸ்தைகளையும் துன்பங்களையும் விபரிப்பவனாய் அமைந்திருந்தது.
இந்த நாவல் இந்த இளைஞனே நாட்டின் முதுகெலும்பான தோட்டதொழிலாளர்களின் கதாநாயகனாக அமைகிறான். வாய்க்கால் நிரம்பி வழிப்போக்கன் கால் கழுவி இஞ்சிக்கு பாய்ந்து எலுமிச்சைக்கு வேரோடி மஞ்சளுக்கும் பாய்ந்து மறுத்தது போல உதிரத்தினை வியர்வையாக்கி தேயிலைச்செடிகளுக்கு உரமாகிப்போன ஏழை தோட்டத்ததொழிலாளர்களின் அவலங்களை அழகாக சொல்லியிருக்கிறார் நூலாசிரியர்.
M.P.M.முஹம்மது காஸிம் ஆலிம் ஸாஹிப் புலவர்அவர்களால் வெளியீடு கண்ட நூல்கள் பின்வருமாறு
- இஸ்லாமிய தத்துவார்த்தம்…
1956 வெளியடப்பட்ட நூல் ஆகும் இஸ்லாமிய தத்துவ தாற்பரியங்களை சற்று கடுமையான தமிழிலே ஒரு மாணவன் தன் ஆசிரியரிடம் வினாவிடையாக கேட்டு தெளிவு பெறும் பாணியில் தொகுக்கப்பட்ட ஒரு களஞ்சியப்பேழையாகும்.
- பத்வா(மார்க்க தீர்ப்பு)
1971ம் ஆண்டு மீள்பிரசுரம் செய்யப்பட்ட நூல் ஆகும் யாழ் கலைவாணி அச்சக வெளியீடாகும் மார்க்கத்தின் பல ஐயப்பாடுகளை தெளிவுபடுத்தும் நூலாக அமைந்தது இதன் மூலப்பிரதி 1960களில் இந்தியாவில் காயல் பட்டனத்தில் வெளியாகியது.
- மாநபியே கவிதை தொகுப்பு
1972 வெளியானது யாழ் கலைவாணி அச்சக வெளியீடாகும் இறைத்தூதுவர்நபிகள் நாயகம் மீது நாலடிகள் கொண்ட 110 பாடல்கள் இதில் அழகாக இடம்பெற்றிருக்கின்றன.
- மன்னார் நாட்டுப்புறப்பாடல்கள்
1970களில் மன்னார் மாவட்ட கலாச்சாரப்பேரவையால் அதன் தலைவராக இருந்த பிறையன்பன் கலாநிதி சு.வித்தியானந்தன் அவர்களால் இந்நூல் அரச செலவில் தொகுத்து வெளியிடப்பட்டது. அரசசெலவில் வெளியிடப்பட்டதால் விற்பனைக்கு அல்ல.
புலவர் அவர்களின் ஆற்றுகைகள்-
கும்மி-கழிகம்பு-கோலாட்டம்-ஆசைக்கவி தாலாட்டு முனஜாத்துப்பாடல்கள் எனப்பல்வகைமை தமிழ் இலக்கிய செயன்முறைகளை படைப்புக்களாகிக்கிய பெருமைக்குரியவர்.
- முத்துநபி என்ற காவியம்
- கபுகாபு என்ற வரலாற்று சிறப்புமிக்க நாடகம்
- அலுக்கோசு-நச்சியார்-மான்மியம் என்னும் குறுநாவல்கள்
- 1200மேற்பட்ட கவிதைகள்
- 200மேற்பட்ட கட்டுரைகள்
- 600மேற்பட்ட மேடைப்பிரசங்கங்கள்
- 100மேற்பட்ட கவியரங்குகள்
- 10 வானொலி நிகழ்சிசகளிலும்
- 06 மேற்பட்ட நாடகங்களிலும் தனது திறமைகளை வெளிப்படுத்திவர்இவற்றுடன் இன்னும் பல நூல்கள் இவர் எழுதியிருக்கலாம் ஆனால் அவற்றிற்கான ஆவணங்கள் காலசூழ்நிலையால் காணாமல் போயுள்ளது. கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளது.
கலைவளர்த்து காலத்துடன் கரைந்துபோன எம் கலைஞர்களை கண்முன்னே கொண்டுவரும் பெரும் முயற்சியே நியூமன்னார் இணையம் செயல்வடிவமாகிகியுள்ளது.
மறக்கமுடியுமா இவர்களை மறைந்தும் மறையாத மாணிக்கங்கள்……
தொகுப்பு-வை.கஜேந்திரன்

மறைந்தும் மறையாத மாணிக்கம்….M.P.M. காஸிம் புலவர்
Reviewed by Author
on
November 17, 2018
Rating:

No comments:
Post a Comment