மன்னார் பறப்பாங்கண்டல் கூட்டத்துமாதா கோவிலில் அருங்காட்சியகம் ஒன்றை உருவாக்க வேண்டுகோள்…..படங்கள்
அவ்வாறு கண்டுபிடிக்கப்படுகின்ற தொல்லியல் சின்னங்கள் இங்கிருந்து ஏனைய மாவட்டங்களின் நூதன சாலைகளுக்கு எடுத்து செல்லப்படுகின்றது யாரும் கண்டுகொள்வதில்லை அப்படியான பலவற்றினை இழந்து நிற்கின்ற வேளையில் நான் கடந்த மாதம் புனித தலங்கள் தரிசிப்புக்கா பறப்பாங்கண்டல் பகுதிக்கு சென்ற வேளையில் மறைபோதகரும் ஆய்வாளருமாகிய திரு.யக்கோப்பிள்ளை அவர்களைச்சந்தித்தேன் அப்போது மாலை 6-30 மணியிருக்கும் தென்னிலங்கையில் இருந்து இரண்டு பேரூந்துகளில் வருகை தந்த குழுவினருக்கு விளக்கம.ளித்துக்கொண்டு இருந்தார்.
கூட்டத்துமாதா கோவில்(சுவரின் தடிமன்அன்றைய சூழலில் பங்கராகவும் பாதுகாப்பும்-உள்ளது
இக்கோவிலில் உள்ள 30தூண்கள்- 30கிராமங்களை குறிக்கும்
இக்கோவிலில் இருந்து 09திருச்சுருவங்கள் பங்குக்கோயிலான இயேசு கைதியான திருச்சுருவம் கோவிலும் இயேசுவின் விண்ணேற்பு சுருவம் பாப்பாமோட்டை ஆலயத்திலும் திருச்சிலுவை பருப்புக்கடந்தான் ஆலயத்திலும் ஒரேற்றியன் சபை நிறுவனரான பிலிப்புநேரியர் சுருவம் காணாமல் போயுள்ளது.
- ஜோசப்வாஸ் அவர்களின் ஒரேற்றியன் சபை பணித்தளமாக 1705-01-09 இருந்துள்ளது.
- புனித நீருற்று-புனித ஜோசப்வாஸ் அவர்களின் திருப்பணடம் வெளிப்பாடு வத்திக்கான் அனுமதியுடன் ஆசிர்வதிக்கப்பட்ட தண்ணீர் பலநோய்களை குணப்படுத்தியுள்ளது இன்னும்)
- பெரிய வற்றாத கிணறு(அன்றிலிருந்து இன்று வரை பயண்பாட்டில் வற்றாமல் உள்ளது)
- கோவிலின் வளவினில் அன்று பயன்படுத்திய திருமுழுக்கு தொட்டியுடன் இன்னும் பல பொக்கிஷங்கள் உள்ளது.
- அன்று பயன்படுத்திய உடக்கு பாஸ் 88 மரப்பொம்மைகள் (இலங்கையில் இங்குதான் முதல் முதலாய் உடக்குபாஸ் காட்டியுள்ளதாக தகவல்)
- வியாகுல பிரசங்கம் ஓவியங்கள் 17ம் நூற்றாண்டு அருட்தந்தை யக்கோமே கொன்சால்வேஸ் அடிகளார் அவர்களால் வரையப்பட்டது போட்டோ பிரதியை பாதுகாத்துவைத்திருக்கின்றார்கள்.
- மிகவும் பழமையான 60ற்கும் மேற்பட்ட ஓலைச்சுவடிகளையும் நூல்களையும் சேகரித்து வைத்துள்ளார் ஆய்வாளர் அவர்கள் இவ்வாறு சொல்லிக்கொண்டே சென்றார்..... கட்டுரைச்சுருக்கத்திற்காக விரிவாக தரவில்லை..................
இடையில் ஒரு வேண்டுகோளை முன்வைத்தார்….
மன்னாருக்கு வருகின்ற எவரும் எமது கோவிலுக்கு வராமல் செல்வதில்லை அவ்வாறு பிரசித்தி பெற்றுள்ள எமது கோவிலுக்கு அங்குள்ள பழமையான பொருட்களை பாதுகப்பதற்கு கோவில் வளாகத்திலே நூதனசாலையை(அருங்காட்சியகம்) அமைப்பதற்கு யாரும் இதுவரை முன்வரவில்லை என்று கவலையுடன் தெரிவத்தார்.
இழந்தவைகளைப்பற்றி பேசிக்கொண்டு இருப்பதை விட இருப்பதை பாதுகாப்பதற்கு முன்வாருங்களேன்….அடுத்த தலைமுறைக்கு கையளிக்கவேண்டாமா….சிந்தியுங்கள் செயல்படுங்கள்…….
இனி விரிவாக பார்ப்போம்…….
பறப்பாங்கண்டல் பிரதேசம் பற்றிய வரலாறு
பிரதேசத்தின் பெயர் வந்த காரணம்
பறப்பாங்கண்டல் என அழைக்கப்படும் இக்கிராமம் மாதோட்டத்தின் மையக் கிராமும் கிழக்கிலும் தெற்கிலும் வாழ்ந்த மக்களின் இணைப்புக்கிராமம் ஆகவும் இருந்துள்ளது. இது பரந்த நிலப்பரப்பை கொண்டிருந்தாலும்,நீர் வளம் நிறைந்த தாழ் நிலமாக இருந்தாலும் பறப்பாங்கண்டல் எனும் பெயர் வந்ததாக எமது முன்னோர் கூறினர்.
இன்னும் கட்டுக்கரைக்குள கட்டுமானத்தினால் குளத்திலிருந்த மக்கள் மாதோட்ட நிலப்பரப்பில் ஆங்கிலேய அரசினால் குடியமர்த்தப்பட்டனர். இவ்வேளை ஊத்தப்பட்டி விடத்தல் வேம்பு குருவில் ஆகிய பகுதிகளில் வாழ்ந்த சில குடும்பங்கள் பறப்பாங்கண்டல் கிராமத்தை தம் வாழ்விடமாக கொண்டனர். இப்படியாக வந்தவர்களில் ஒருவர் எக்காவியத்திலும் முந்திக் கொள்ளும் போக்குடையவர்கள் இக்காரணத்தினால் இவரை பறப்பான் என பட்டம் சூட்டி மக்களால் அழைக்கப்பட்டார். இவர் இங்கு குடிவர முன்னரே பறந்து விரைந்து வந்ததினால் பறப்பாங்கண்டல் எனப் பெயர் பெற்றதாகவும் சில பெரியோரின் கருத்தாக அமைகின்றது.
அமைவிடமும் வாழும் மக்களும்
பறப்பாங்கண்டல் கிராமம் கிழக்கே கட்டுக்கரை குளத்தையும் தெற்கும் மேற்கும் அடைக்கலாம்மோட்டை பிரதான வாய்க்காலை யும் வடக்கே காத்தான்குளத்தையும் கோட்டைக்குளத்தையும் எல்லையாக கொண்டது. இங்கு வாழும் மக்கள் குருகுலத்தவர்,பரதவர்,வேளாளர்.சமூகத்தை சார்ந்தவர்கள் ஆவர். இவர்கள் யாவரும் தாங்கள் கட்டுக்கரை குளம் அமைப்பதற்கு முன்னர் அதன் உட்பகுதியிலிருந்து வந்து குடியேறியவர்கள் என்பதை மட்டுமே அறிந்தவர்களாக இருக்கின்றனர். இக்கிராமம் 2300 ஆண்டுகளுக்கு மேலான வரலாற்றை கொண்ட மண்ணாகும்.
பொருளாதாரமும் வாழ்வியலும்
இங்கு வாழ்ந்தவர்களுக்கும் மேற்கு கரையோர மக்களும் மன்னார் தீவில் உள்ள மக்களுக்கும் வன்னிக்காட்டுப்பகுதியில் வாழ்ந்த மக்களுக்கும் இடையில் உறவும் வணிக தொழில் தொடர்புகளும் இருந்தமையால் பல மரபினர்களும் வாழ்ந்தாலும் இங்குள்ளவர்கள் பயிர் தொழில்,வனதொழில், வணிகம்,கடற்றொழில்,மந்தைவளரப்பு,கப்பல் கட்டுதல், யானை பிடித்தல் மற்றும் ஏனைய அனைத்து தொழில்களிலும் ஈடுபட்டனர்.
ஆரம்பத்தில் இங்கு வாழ்ந்தவர்கள் இந்து சமயத்தை சேர்ந்தவர்களாக இருந்தனர். போர்த்துக்கேயர் கிறிஸ்தவ மறை பரப்பு பற்றியும் தமது வருகையின் நோக்காக கொண்டிருந்ததால் மாதோட்ட கிராமத்தில் உள்ள இந்துசமயம் சார்ந்தவர்கள் கிறிஸ்தவ மறையை தழுவினர். இங்கு இரு தேவாலயங்கள் காணப்படுகின்றன. பெரிய கோயில் கூட்டத்து மாதா தேவாலயமும் சின்னக் கோயில் கார்மேல் மாதா தேவாலயமும் மக்களின் வழிபாட்டுத்தலமாக விளங்கின்றது.
கலை கலாச்சாரம்
இக்கிராமத்தின் கலையாக இசை, நாடகம் காணப்படுகின்றன. என்றிக் எம்பரதோர் நாடகம், சந்தோமையர் நாடகம்,சந்தோமையார் வாசாப்பு,திரு இசை குழுவினரால் பாட்டுக்கச்சேரிகள்,கரோல் கீதங்கள் இசைக்கப்படுகின்றது. இங்கு யாழ் மறை மாவட்ட ஆயர் பாடசாலைகளை நடைமுறைப்படுத்தி 1903ம் ஆண்டு ஆரம்ப பாடசாலை ஒன்று அமைக்கப்பட்டு இங்கு அயல் கிராம மாணவர்கள் வந்து கல்வி கற்றுள்ளனர். அப்பாடசாலை இன்றும் இயங்கிக் கொண்டு இருக்கின்றது. இக்கிராமத்தில் கிளித்தட்டு,கரப்பந்து,கபடி,கொடி எடுத்தல், மட்டப்பந்து,சிறுவிளையாட்டுக்களான எட்டுக்கோடு,கிட்டிப்புல்,பாண்டி போன்ற விளையாட்டுக்களை விளையாடி மகிழ்வார்.
பறப்பாங்கண்டல் பெரிய கோவிலின் வரலாறு
ஈழத்தின் கத்தோலிக்க மறை வளர்ச்சியில் பறப்பாங்கண்டல் பெரிய கோயில் முக்கிய இடத்தை வகிக்கின்றது. இக்கோயில் பற்றிய பல வரலாற்று குறிப்புகள் அடங்கி நூல்கள் வத்திக்கான் நூலக களஞ்சிய காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளது. வரலாற்று புகழ் மிக்க இக்கோயிலில் இறைவனின் அன்னையும் கன்னியுமான தூய மரியாள் காக்கும் காவளியாக குடிகொண்டு இருக்கிறார். மாதோட்ட இறை மக்கள் 312 ஆண்டுகளாக அன்னையின் மேற்கொண்ட அன்பையும்,நம்பிக்கையும் வெளிப்படுத்தி அவரின் பெருமைகளையும் மாண்பையும்,பாடிப் பரவி கொண்டாடி வருகின்றனர். இந்த அருள்மிகு அன்னை கூட்டத்து மாதா என்னும் அடை மொழியால் அணி செய்யப்பட்டு வருகின்றது.
ஆரம்பத்தில் ஆலயத்தின் தோற்றம்
மாதோட்ட மக்களின் மறைவாழ்வின் கேடயமும் 30 கிராமங்களில் வாழும் குருகுல மரபினரின் குன்றாக ஒளி விளக்குமான மரியன்னை கொலு கொண்டு வீற்றிருக்கும் இத்தொண்மை மிகு திருக்கோயிலானது போர்த்துக்கேயர் காலத்தில் பிரான்சிஸ்கன் சபை குருக்களால் கி.பி 1697ல் 150 அடி நீளமும்,52 அடி அகலமும் கொண்ட பறப்பாங்கண்டல் பெரிய கோயில் அமைக்கப்பட்டது. இவ்வாலயத்தின் பின் பகுதியில் 06 அறைகள் கொண்ட குருக்கள் தங்குவதற்கும் வழிபாட்டுக் களஞ்சிய அறையும் ஆலயத்துடன் சேர்த்தே அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாலயம் செங்கல்,சுண்ணாம்புக்கல்,முருகைக்கற்கள்ää பீப்பாய் சீமெந்து,பாலை மரத்தூண்,இரும்புக்கம்பி,முதுரை மரம்,பனை மரம்,பீலி ஓடுகள்,கண்ணாடி ஓடுகள் போன்ற ஊடகங்களை கொண்டு கட்டப்பட்டு இவ்வாலம் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இவ்வாலயம் கட்டுக்கரை குளத்துக்கு அண்மையிலும் மன்னார் வீதியிலிருந்து சிறு கல் தொலைவில் உயிலங்குளத்துக்கும் உயிர்த்தராசன் குளத்துக்கும், இடையில் வடக்கு பக்கம் அமைந்துள்ள. ஈழத்திலே மிகப் பெரிய ஆலயங்களில் ஒன்றாக தூய கூட்டத்து மாதா ஆலயம் திகழ்கின்றது.
இவ்வாலயம் உலகிலேயே பொது நிலை கிறிஸ்தவர்களால் 200 ஆண்டுகளுக்கு மேலாக பாதுகாக்கப்பட்டு நிறுவகிக்கப்படும் ஒரே ஒரு ஆலயம் எனும் பெருமையை பெருகின்றது. இவ்வாலயம் பாப்பரசரின் அங்கீகாரத்தின் படி பொது நிலையினரால் நிறுவகிக்கப்படுகின்றது. அக்காலப்பகுதியில் இவ் ஆலயமானது மன்னார் மாவட்டத்திலும் யாழ் மறை மாவட்டத்திலும் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயமாக இருந்ததுடன் இவ்வாலயத்தில் யோசவாஸ் அடிகளாரும் இணைந்த தியான யோக குருக்களான யாக்கோமே கொன்சால்வேஸ் அடிகளாரும் பெற்றோ பெறா ஓ அடியளாரும் தங்கி இருந்து யாழ் மறைமாவட்ட முழுவதும் அதாவது மன்னார் வவுனியா யாழ்ப்பாணம்-கிளிநொச்சி முல்லைத்தீவு போன்ற மாவட்டங்களில் சிறப்பாக பணியாற்றியவர்கள் ஆவர்.
யோசவ்வாஸ் அடிகளாரின் காலத்தில் இலங்கையிலிருந்த ஒரற்றோரியன் சபை மறைத்தூது பணியாளர்களின் மத்திய நிலையமாக இவ்வாலயம் காணப்பட்டது. கி.பி 1750 தொடக்கம் 1795 வரை இலங்கையின் பிரதான தேவாலயமாக இவ்வாலயம் விளங்கியதென்பது ஒரு சிறப்பான வரலாற்று பதிவாகும்.
இவ்வாலயமானது போர்பிரதேசத்தில் 30 வருடங்களுக்கு மேல் இருந்தபோதிலும் முழுமையாக பாதிக்கப்பட்டு நீண்ட காலத்திற்கு பின்னர் இவ்வாலயம் புனித யோசவ்வாஸ் குழுவினரின் ஒத்துழைப்பில் புனர்நிர்மானம் செய்யப்பட்டுள்ளது. அருளாளர் யோசவ்வாஸ் அடிகளாரை புனித நிலைக்கு உயர்த்துவதற்கு முயற்சிகள் மும்முரமாக நடைபெற்று கொண்டிருந்த ஒரு மாதத்திற்கு ஆலயத்தினுள் புனித நீருற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்நீர் ஊற்று மிக வரட்சியான நாட்களிலும் வற்றாமல் உள்ளது. கேள்விப்படும் உள்நாட்டிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் திருப்பயணிகள் வருகை தந்து அந்நீரை அருந்தி உடலில் பூசி குணம்பெற்று வருகின்றனர்.
இக்கோயிலுக்கு நாளுக்கு நாள் திருப்பயணிகளின் வருகை அதிகரித்து வருகின்றது. இக்கோயிலில் இன்னும் எழுச்சியும் ஏற்றமும் பெறும் என எல்லோராலும் பேசப்படுவதோடு தூய யோசவ்வாஸ் முனிவரது பாதம் பட்ட பறப்பாங்கண்டல் மண் “தூய நிலம்” புனித பூமி எனும் மாண்பை இக்கோயில் பெறுகின்றது. புனர் நிர்மாணம் செய்யப்பட்ட இவ்வாலயம் 2017 ஆம் ஆண்டு தை மாதம் 16ம் திகதி மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்கப் பரிபாலகர் மேதகு கிங்ஸ்சிலிசுவாம்பிள்ளை ஆண்டகையால் ஆசீர்வதிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. அத்தோடு ஒரற்றோறியன்சபை குருக்கள் இந்தியாவிலிருந்து வருகை தந்து இங்கு உள்ள குருக்கள் துறவிகள் இறைமக்களுடன் இணைந்து புனிதரின் திருவிழாவையும் கொண்டாடினார்கள்.
எமது மண்ணில் இன்னும் நிறைய விடையங்கள் மறைந்துள்ளதும் மறைக்கப்பட்டுள்ளதும் வெளிக்கொணரும் நோக்கில் இப்பயணம் ஆரம்பமாகியுள்ளது…. தொடரும்
மேலும் விரிவாக கோவிலினைப்பற்றி அறிந்து கொள்ள திரு.யக்கோப்பிள்ளை அவர்களை சந்திக்கலாம்.
புனித தலங்கள் தரிசிப்பின்
-வை.கஜேந்திரன்-

மன்னார் பறப்பாங்கண்டல் கூட்டத்துமாதா கோவிலில் அருங்காட்சியகம் ஒன்றை உருவாக்க வேண்டுகோள்…..படங்கள்
Reviewed by Author
on
November 18, 2018
Rating:

No comments:
Post a Comment