கங்கை கொண்ட சோழீச்சுவரருக்குக் கடாரத்திலிருந்து கொடிமரம் வந்த கதை!
அந்த ஒரு மரத்தின் விலை மட்டும் சுமார் 14 லட்சம் என்று கூறினார்கள். அந்த மரத்தைத் தூத்துக்குடியிலிருந்து கங்கை கொண்ட சோழபுரத்துக்குக் கொண்டு வந்த செலவே ஒரு லட்சத்தைத் தாண்டியது. இங்குதான் ராஜேந்திரன் மற்றும் ஈசனின் துணை எங்களுக்கு இருப்பதைப் பரிபூரணமாக அறிந்துகொண்டோம்...
கங்கை கொண்ட சோழீச்சுவரருக்குக் கடாரத்திலிருந்து கொடிமரம் வந்த கதை!
கங்கை கொண்ட சோழபுரத்தில் மாசிமக பிரம்மோற்சவத் திருவிழா நாளை (பிப்ரவரி 10) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. பத்து நாள் பெருந்திருவிழாவை முன்னிட்டு ராஜேந்திரச் சோழனால் தலைநகராக உருவாக்கப்பட்ட கங்கை கொண்ட சோழபுரமே விழாக்கோலம் பூண்டிருக்கிறது. சுமார் 152 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த வருடம்தான் முதல் முறையாக மாசிமகத் திருவிழா நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக இரண்டாவது வருடமாகத் தற்போது பிரம்மோற்சவத் திருவிழா கொண்டாடப்படுகிறது.
கங்கை கொண்ட சோழபுரம், ராஜேந்திரச் சோழன்
152 வருடங்களாகப் பிரம்மோற்சவம் ஏன் தடைப்பட்டது என்பது பற்றியும், புதிதாகக் கொடிமரம் நட்டு பிரம்மோற்சவம் நடத்தியபோது நடைபெற்ற சுவாரஸ்யமான நிகழ்வுகள் குறித்தும் நம்மிடம் பகிர்ந்துகொண்டார், `கங்கை கொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் குழும'த்தின் தலைவரான கோமகன்.
``தஞ்சைப் பெரிய கோயிலில் குடமுழுக்கின்போது எதிர்பாராத சில அசம்பாவிதங்கள் நடந்தன. அதனால், கங்கை கொண்ட சோழபுரத்துக்குக் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று வேலை ஆரம்பித்த போதே சிலர் பயமுறுத்தினார்கள். `கெட்டாலும் சிவனுக்காக... வாழ்ந்தாலும் சிவனுக்காக இருக்கட்டும்... சிவபெருமான் எதைக் கொடுத்தாலும் மகிழ்ச்சிதான்’ என்று புதிய கொடிமரத்தை நட்டு குடமுழுக்கு வேலையைத் தொடங்கினோம்.
கங்கை கொண்ட சோழபுரம், கொடிமரம், பிரம்மோற்சவம்
சுமார் 86 ஆண்டுகளுக்கு முன்பு கங்கை கொண்ட சோழீசுவரர் கோயில் கலசத்தின் மீது இடி விழுந்து சேதமாகிவிட்டது. அப்போது புதிய கலசம் வைத்து, கொடிமரம் இல்லாமலே தண்ணீர் ஊற்றி குடமுழுக்கு நடத்தியிருக்கிறார்கள். அந்தக் கலசத்தில் `ஸ்ரீ காலாக்க தோளாக்க உடையார் உபயம்’ என்று எழுதப்பட்டிருந்தது. உடையார் பாளையம் ஜமீன்தார்கள் வழங்கிய கலசம் அது. அந்தப் பெயரைக் கொண்டுதான் சுமார் 86 ஆண்டுகளுக்கு முன்பு கோயிலில் குடமுழுக்கு நடைபெற்றது என்று அறிந்துகொண்டோம்.
கோயிலில் கொடிமரம் இல்லாததால் மாசி மாத பிரம்மோற்சவ விழா நடைபெறவே இல்லை. நடந்ததற்கான குறிப்புகளும் இல்லை. ஊரில் உள்ள 100 வயது பெரியவர் ஒருவர், அவருடைய தாத்தா தீர்த்தவாரிக்குச் சென்றதாகச் சிலரிடம் சொல்லியிருக்கிறாராம். அதை வைத்துப் பார்க்கும் போது சுமார் 150 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த வருடம்தான் கோயிலில் மாசி மகா பிரம்மோற்சவம் நடந்தது குறிப்பிடத்தக்கது. இதில் கோயிலில் கொடிமரம் வாங்கிய நிகழ்வுதான் ஈசன் மற்றும் ராஜேந்திரனின் அருள் நிறைந்தது. எப்போது நினைத்தாலும் உடல் சிலிர்க்கும்.
அனைத்து மரங்களையும் கொடிமரமாகப் பயன்படுத்த முடியாது. 60 அடி நீளத்துக்கு ஒரே மரமாக எந்தவொரு கணுவோ குறையோ இல்லாமல் அனைத்து அம்சங்களும் பொருந்தி இருக்க வேண்டும். நம் பகுதிகளில் எங்குத் தேடியும் சரியான கொடிமரம் செய்யத் தகுதியான மரம் கிடைக்கவில்லை. சிலர், `தூத்துக்குடி துறைமுகத்துக்குச் சென்று பாருங்கள், அங்குக் கிடைக்கும்' என்றார்கள். அங்குச் சென்று தேடியதில் நாங்கள் எதிர்பார்த்தபடியே சுமார் 60 அடி நீளத்துக்கு எந்தவித குறையும் இல்லாமல் ஒரே சீராக இருந்த மலேசியத் தேக்கு மரம் ஒன்று கிடைத்தது. அந்த மரம் ராஜேந்திர சோழன் ஆட்சி செலுத்திய மலேசியாவுக்கு உட்பட்ட கடாரம் தீவிலிருந்துதான் வந்திருந்தது. அந்த ஒரு மரத்தின் விலை மட்டும் சுமார் 14 லட்சம் என்று கூறினார்கள். அந்த மரத்தைத் தூத்துக்குடியிலிருந்து கங்கை கொண்ட சோழபுரத்துக்குக் கொண்டு வந்த செலவே ஒரு லட்சத்தைத் தாண்டியது. இங்குதான் ராஜேந்திரன் மற்றும் ஈசனின் துணை எங்களுக்கு இருப்பதைப் பரிபூரணமாக அறிந்துகொண்டோம்.
கங்கை கொண்ட சோழீச்சுவரர்
மலேசியாவிலிருந்து தூத்துக்குடிக்கு வந்த அந்தத் தேக்குக்கு உரிமையாளர்கள் இருவர். அதில் ஒருவர் இஸ்லாமியர். 14 லட்சம் என்று இறுதியாக விலை பேசிவிட்டு அனைவரும் ஒன்றாக டீ குடித்தோம். அப்போது கங்கை கொண்ட சோழீசுவரர் மற்றும் ராஜேந்திரனைப் பற்றி விசாரித்தார்கள். விரிவாகச் சொன்னோம். சுமார் ஒரு மணிநேரத்துக்கும் மேலே அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். பிறகு அவர்கள், `மரத்தை மலேசியாவிலிருந்து கொண்டு வந்த டிரான்ஸ்போர்ட் செலவு மட்டும் 4 லட்சம். மரத்துக்கு ஒரு பைசா கூடக் கொடுக்க வேண்டாம். டிரான்ஸ்போர்ட் தொகையை மட்டும் கொடுத்துவிட்டு மரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். கங்கை கொண்ட சோழபுரத்தில் எங்களுடைய மரம் கொடிமரமாக நிற்பது எங்களுக்கும் பெருமைதான்’ என்று இலவசமாக வழங்கினார்கள். வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம் அது. சிங்கப்பூரில் இயங்கி வரும் கங்கை கொண்டான் கழகத்தைச் சேர்ந்த புருஷோத்தமன் சிட்புலியார் என்பவர், கொடிமரத்தைச் சுற்றியிருக்கும் காப்பர் பிளேட்டுகளை இலவசமாக வழங்கினார். நடந்த நிகழ்வுகள் அனைத்துமே ராஜேந்திரன் மற்றும் ஈசனின் அருள்தான். கோயிலுக்குக் கொடிமரம் நட்ட கதை இதுதான்.
கடந்த வருடத்தைப் போன்றே இந்த வருடமும் பிரம்மோற்சவத்தின்போது காலை யாகசாலை, மதியம் அபிஷேகம், மாலை புறப்பாடு என்று அனைத்து நாள்களும் நிகழ்ச்சிகள் நடைபெறும். செல்லியம்மன், மாரியம்மன், திரௌபதி ஆகிய கிராம தேவதைகளின் புறப்பாடும் சிறப்பாக நடைபெற இருக்கிறது. பக்தர்கள் அனைவரும் வந்து கங்கை கொண்ட சோழீசுவரரின் அருள் பெற்று செல்ல வேண்டும்” என்கிறார் கோமகன்.
கங்கை கொண்ட சோழபுரம்
பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வாக 5-ம் நாள் வசந்த நடனம் மற்றும் திருவீதி உலா நடைபெறுகிறது. இதன் சிறப்பு என்னவென்றால், இதன் உபயதாரர்கள் வீரசோழன் அணுக்கன் படையினர். கடந்த வருடம் நடைபெற்ற குடமுழுக்கின் போது, கங்கை நதி மண்ணைத் தொடும் இடமான `தேவப்பிரயாகை’ எனும் இடத்துக்கே சென்று ஆயிரம் குடங்களில் கங்கை நதி நீரைக் கொண்டு வந்தவர்கள் இவர்கள்.
ராஜேந்திர சோழனின் வெற்றியின் நினைவாக அமைந்திருக்கும் கங்கை கொண்ட சோழீசுவரரின் திருக்கோயிலில் நடைபெறும் பிரம்மோற்சவத்தை நேரில் தரிசித்து, சிவனாரின் அருள் பெறுவோம்!

கங்கை கொண்ட சோழீச்சுவரருக்குக் கடாரத்திலிருந்து கொடிமரம் வந்த கதை!
Reviewed by Author
on
February 11, 2019
Rating:

No comments:
Post a Comment