மன்னார் நகர சபை மற்றும் பிரதேச சபைகளுக்கிடையே எல்லைப் பிரச்சனை. மன்னார் நீதிமன்றில் வழக்கு-
மன்னார் நகர சபைக்கும் மன்னார் பிரதேச சபைக்கும் தங்கள் எல்லை சம்பந்தமாக முறுகல் நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து மன்னார் பொலிசார் அமைதிக்கு பங்கம் ஏற்படுவதாகத் தெரிவித்து மன்னார் நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து மன்னார் பிரதேச சபை தவிசாளர் மன்றில் ஆஐராகியிருந்தார். ஆனால் இவ் வழக்கில் மன்னார் நகர சபை மன்றுக்கு சமூகமளிக்காததால் மன்னார் நகர சபை தலைவருக்கு மன்று அழைப்பானை விடுத்துள்ளது.
மன்னார் தீவு நுழைவாயிலில் அமைந்துள்ள பாலம் அமைந்துள்ள பகுதியானது மன்னார் நகர சபைக்கு சொந்தம் என தெரிவித்து மன்னார் நகர சபை அவ் பகுதியை புனரமைக்கும் நோக்குடன் துப்பரவு செய்யும் பணியை மேற்கொண்டபோது அவ் இடம் வர்த்தமானி அறிவித்தல்படி மன்னார் பிரதேச சபைக்கே உரிமையென தெரிவிக்கப்பட்ட நிலையில் இரு சபையினருக்கு மத்தியில் முறுகல் நிலை ஒன்று தோன்றி அது பொலிஸ் நிலையம் வரை சென்றுள்ளது.
இது விடயமாக மன்னார் பொலிசார் கடந்த வெள்ளிக் கிழமை (08.03.2019) மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றில் இவ் எல்லை விடயமாக இவ் பகுதியில் அமைதியின்மை தோன்றியிருப்பதாக தெரிவித்து வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
இவ் வழக்கின்போது மன்னார் பிரதேச சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹீர்
மன்றில் ஆஐராகி இருந்தார். இவ்வேளையில் மன்னார் நகர சபை தவிசாளர் மன்றில் ஆஐராகாததால் அவருக்கு மன்று அடுத்த தவனைக்கு ஆஐராகும்படி அழைப்பானை விடுத்துள்ளது.
மன்னார் பிரதேச சபை சார்பாக சட்டத்தரணி செல்வராசா டினேசன் மன்றில் தெரிவிக்கையில்
2005.12.12 ந் திகதி இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு வர்த்தமானப்
பத்திரிகை பிரகாரம் தற்பொழுது பிரச்சனைக்கு உள்ளாகியிருக்கும் இடமானது
மன்னார் பிரதேச சபையின் எல்லையின் கிழக்கு பகுதியானது மதவாச்சி மன்னார் தலைமன்னார் ஏ14 வீதியிலுள்ள பாலத்திலிருந்து நேரே தள்ளாடி இராணுவ முகாம் அருகே கடற்கரை வரையும் அங்கிருந்து சுமார் ஒரு மைல் தூரம் திருக்கேதீஸ்வரம் கோவில் வரையும் மன்னார் பிரதேச சபையின் எல்லையாக காண்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அண்மையில் மன்னார் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் மன்னார் பாலத்தடிக்கு மின் விளக்குகள் பொருத்தி அதை
அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கை தங்களால் எடுக்கப்பட இருப்பதாக
மன்னார் பிரதேச சபை தவிசாளரால் முன்வைத்து அங்கு உரையாற்றியபோது
அவ்விடத்தில் மன்னார் நகர சபை தவிசாளரும் அவ் கூட்டத்தில்
சமூகமளித்திருந்தார்.
ஆனால் இந்த முன் யோசனையை மன்னார் பிரதேச சபை தவிசாளர் அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் முன்வைத்தபோது மன்னார் நகர சபை தவிசாளர் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்காத நிலையில் இருந்திருக்கின்றார் என மன்னார் பிரதேச சபைக்கு சார்பாக ஆஐராகிய சட்டத்தரணி எஸ்.டினேஸ் மன்றில் இவ்வாறு தனது வாதத்தில் சுட்டிக்காட்டினார்.
இதைத் தொடர்ந்து இவ் வழக்கை எதிர்வரும் 22ந் திகதி
ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மன்னார் நகர சபைக்கு சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணி எம்.எம்.சபூர்தீன் மன்றில் ஆஐராகியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மன்னார் நகர சபை மற்றும் பிரதேச சபைகளுக்கிடையே எல்லைப் பிரச்சனை. மன்னார் நீதிமன்றில் வழக்கு-
Reviewed by Author
on
March 12, 2019
Rating:

No comments:
Post a Comment