புலிகளை பயங்கரவாதிகள் என்று கூறிய அதே நபர்கள் இன்று பேசுவது என்ன? சிறீதரன் -
கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். குறித்த ஊடக சந்திப்பு இன்று கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் அலுவலகத்தில் இடம்பெற்றது. விடுதலை புலிகளை பயங்கரவாதிகள் என கடந்த காலங்களில் கூறிவந்த அதே தலைமைகள் இன்று அவர்களை நற்சான்றுபடுத்தும் வகையில் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றார்கள். இந்த நிலையில் சர்வதேசத்தின் பார்வை எவ்வாறு இருக்கும் என நம்புகின்றீர்கள் என ஊடகவியலாளர் வினவினார், இதற்கு பதில் அளித்த நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன்,
சிறந்ததொரு கேள்வியை எழுப்பியுள்ளீர்கள். உண்மையில் கடந்த காலங்களில் விடுதலை புலிகளை பயங்கரவாதிகள் என பல தரப்பினரும் கருத்துக்களை கூறி வந்தனர். அவர்களின் மரபுவழி போராட்டத்தினை பயங்கரவாத தாக்குதல் என தெரிவித்து வந்தனர்.
இதேவேளை அண்மையில் இடம்பெற்ற தாக்குதலின் பின்னர் எதிர்கட்சி தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ச நாடாளுமன்றில் விடுதலைப்புலிகள் தொடர்பில் நல்ல மாதிரியாக குறிப்பிட்டுள்ளார். விடுதலை புலிகள் இவ்வாறான தாக்குதல்கள் மேற்கொள்ளக்கூடிய பல சந்தர்ப்பங்கள் இருந்த போதிலும், அவர்கள் தாக்கவில்லை என குறிப்பிட்டுப்பேசினார்.
இவ்வாறு இதே அரசாங்கம் கூறிய பொய்யான தகவல்களை வைத்து சர்வதேசம் விடுதலை புலிகளை பயங்கரவாத அமைப்பாக தடை செய்திருந்தது. இன்று அதே நபர்கள் விடுதலை புலிகள் தொடர்பில் கூறும் கருத்துக்கள் தொடர்பில் கவனம் செலுத்தும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
அண்மையில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலால், இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற படுகொலைகள், யுத்த குற்ற மீறல்கள் எவையும் மறையப்போவதில்லை எனவும் அவர் இவ் ஊடக சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார்.
அண்மையில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலின் பின்னணியில் ஆட்சி மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் ஏதும் உள்ளதா என அவரிடம் ஊடகவியலாளர் வினவினார்.
ஆட்சி அமைப்பது தொடர்பில் பலருக்கும் ஆசை இருக்கின்றது. ஒவ்வொருவரும் தாம் ஆட்சி அமைப்பதற்கு விருப்பம் செலுத்துகின்றனர். தாக்குதல் சம்பவம் தொடர்பில் எந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கும் கவலை கிடையாது. நாடாளுமன்ற விடுதியில் அவதானித்தேன். தாக்குதல் தொடர்பிலோ, தாக்குதலால் உயிரிழந்தவர்கள் தொடர்பிலோ எந்த நாடாளுமன்ற உறுப்பினரிடமும் கவலையை காணவில்லை என தெரிவித்தார்.
நீங்கள் அவதானித்தவர்களில் கவலையற்றவர்கள் முகம் என குறிப்பிடுவது, பிரதம அமைச்சர், அமைச்சர் இவர்களில் யார் என ஊடகவியலாளர் மீண்டும் அவரிடம் வினவியபோது, நாடாளுமன்றில் நின்ற எவரிடமும் கவலையை காணவில்லை என்றார்.
புலிகளை பயங்கரவாதிகள் என்று கூறிய அதே நபர்கள் இன்று பேசுவது என்ன? சிறீதரன் -
Reviewed by Author
on
April 26, 2019
Rating:

No comments:
Post a Comment