சுவிற்சர்லாந்தில் 25ஆவது ஆண்டாக தமிழ் மொழி பொதுத்தேர்வு
இத்தேர்வில் முதலாம் வகுப்புத் தொடக்கம் 12ம் வகுப்பு வரையில் கல்வி பயிலும் 5265 மாணவர்கள் இன்றைய தினம் பங்குபற்றியுள்ளனர்.
தமிழ் மொழி தேர்வுடன் சைவசமயம், றோமன் கத்தோலிக்க சமயம் ஆகிய சமயத்தேர்வுகளுக்கும் மாணவர்கள் தோற்றினர்.
பத்தாம் வகுப்பு தேர்வில் 334 மாணவர்களும், பதினோராம் வகுப்புத்தேர்வில் 221 மாணவர்களும், பன்னிரண்டாம் வகுப்புத்தேர்வில் 154 மாணவர்களும் தோற்றியமை சிறப்பாகும்.
தமிழ்மொழி எழுத்துத்தேர்வுடன் புலன்மொழித் தேர்வுகளும் நடைபெற்றுள்ளது. இத்தேர்வின் போது தமிழ்ப்பள்ளிகளின் முதல்வர்கள், ஆசிரியர்கள் மற்றும் உதவி ஆசிரியர்கள் மேற்பார்வையாளர்களாகக் கடமை புரிந்தனர்.
பழைய மாணவர்களும் இப்பணியில் அக்கறையுடன் பங்கெடுத்துக் கொண்டனர். தமிழ்க் குழந்தைகள் தாய்மொழிக்கல்வியில் காட்டும் ஆர்வமும் தாய்மொழி மீது பற்றுக்கொண்ட பெற்றோரின் ஊக்கமும் தமிழ்மொழிக் கல்வி வளர்ச்சிக்குப் பெரிதும் உறுதுணையாக உள்ளது.
இத்தேர்வு நிறைவாக நடைபெற உழைத்த அனைவருக்கும் தமிழ்க்கல்விச் சேவை நன்றி தெரிவிக்கிறது. சுவிற்சர்லாந்து நாட்டில் வாழும் தமிழ்க் குழந்தைகள் அனைவரும் தமது தாய்மொழியைக் கற்பதற்கு வாய்ப்பினை ஏற்படுத்தி வழங்க வேண்டுமென்பது கல்விச்சேவையின் நோக்கமாகும்.
தமிழ் ஆசிரியர்களின் தகைமையையும், கற்பித்தல் திறனையும் அதிகரிப்பதற்கும், தமிழ்க் குழந்தைகள் விருப்பத்துடன் தமது தாய்மொழியைக் கற்பதற்கு ஏற்றசூழலை உருவாக்குவதற்கும் தமிழ்க் கல்விச்சேவை நடவடிக்கைகளை எடுத்துவருகின்றது.
சுவிற்சர்லாந்தில் 25ஆவது ஆண்டாக தமிழ் மொழி பொதுத்தேர்வு
Reviewed by Author
on
May 05, 2019
Rating:

No comments:
Post a Comment