சஜித் பிரேமதாசவை தவிர கூட்டமைப்பிற்கு வேறு தெரிவு கிடையாது! -
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவைத் தவிர, கோத்தபாய ராஜபக்சவை தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவு செய்யாது என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
அத்துடன், எதிர்வரும் தேர்தலில் எந்தவொரு அழுத்தமும் இன்றி தமிழ் மக்கள் சுயாதீனமாக முடிவெடுப்பார்கள் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளரான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“தமிழ் மக்களைப் பிரதிநித்துவம் செய்கின்ற பல்வேறு அரசியல் கட்சிகளும் எம்முடன் இணைந்து செயற்படுகின்றன. தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்னும் இறுதி தீர்மானத்தை அறிவிக்கவில்லை.
கடந்த தேர்தலிலும் அவர்கள் தேர்தலுக்கு இறுதி சில தினங்களில்தான் உத்தியோகபூர்வ அறிவிப்பை விடுத்திருந்தார்கள். நிபந்தனைகள் அற்ற வகையில்தான் இந்த தேர்தலுக்கு நாங்கள் முகங்கொடுக்கின்றோம்.
எந்த தரப்பினருடனும் எந்தவொரு கொடுக்கல் வாங்கலும் எங்களுக்கு இல்லை என்ற போதிலும் நாட்டிற்காக செய்ய வேண்டிய கொடுக்கல் வாங்கல் ஏதேனும் இருப்பின் அதனை நாட்டிற்காக செய்ய நாம் தயார்.
குறிப்பாக செயற்படுத்த வேண்டிய கொள்கைகள் திட்டங்கள் குறித்து நாங்கள் கொடுக்கல் வாங்கல் செய்யத்தயார். வடக்கிலும் தெற்கிலும் சிறுபான்மை கட்சிகளின் பிரதிநித்துவம் இருக்கின்றதுதான்.
ஆனாலும் வடக்கிலும், தெற்கிலும் அனைத்து பிரிவினரும் சஜித் பிரேமதாசவை பாராட்டுகின்றனர். அவர் கடந்த 04 வருடங்களாக வடக்கில் பல்வேறு மாற்றத்தை செய்திருக்கின்றார்.
அவர் முன்னெடுத்த பல்வேறு வீடமைப்பு வேலைத்திட்டங்கள் அங்கே மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. தனிப்பட்ட ரீதியிலும் என்னிடம் வடக்கு மக்களில் சிலர் தெரிவித்திருக்கின்றனர்.
ஆகவே அழுத்தம் கொடுக்கின்ற அளவு இம்முறை குறைந்தளவில்தான் உள்ளது. சுயாதீனமாக வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் உள்ளது.
எனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு எந்த வகையான தீர்மானத்தை எடுக்கும் என்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.
இருந்த போதிலும் பிரச்சினை ஒன்று உள்ளது. அவர்கள் எப்படி கோத்தபாய ராஜபக்சவுக்கு வாக்களிப்பார்கள்?” என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
சஜித் பிரேமதாசவை தவிர கூட்டமைப்பிற்கு வேறு தெரிவு கிடையாது! -
Reviewed by Author
on
September 28, 2019
Rating:

No comments:
Post a Comment