அண்மைய செய்திகள்

recent
-

அவரை கைது செய்தது... தமிழர்களுக்கு அவமானம்: சீமானின் அதிர்ச்சி அறிக்கை -


தமிழகத்தில் நெல்லை கண்ணன் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், இது தமிழுக்கும், தமிழர்களுக்கு நேர்த்த அவமானம் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தைக் கண்டித்து நெல்லை மேலப்பாளையத்தில் சில தினங்களுக்கு முன் குடியுரிமைப் பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது.

இதில் கட்சித் தலைவர்கள் சிலர் கலந்து கொண்ட நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் பேச்சாளருமான நெல்லை கண்ணன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
அப்போது அவர் குடியுரிமை திருத்த சட்டத்தைக் கொண்டு வந்ததற்காக பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா ஆகியோரை கடுமையாகச் சாடினார்.

அவரின் பேச்சு பிரதமர் மோடி, அமைச்சர் அமித் ஷா ஆகியோரைக் கொலை செய்யத் தூண்டும் வகையில் இருப்பதாக கூறி அவரின் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. நேற்று உடனடியாக கைது செய்யப்பட்டார்.
நெல்லை கண்ணனின் கைதுக்கு தமிழக கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாஜக அரசின் அரசப் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக அறச்சீற்றத்தை வெளிப்படுத்திய தமிழ்க்கடல் அப்பா நெல்லை கண்ணன் அவர்களைக் கைது செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.


அடக்குமுறையும், ஒடுக்குமுறையும் ஒருசேர கட்டவிழ்த்துவிடப்பட்டு மக்கள் துயருற்று நிற்கும்போது அம்மக்கள் பக்கம் நின்று அவர்களின் உரிமைக்காகக் குரலெழுப்புவதே அறம். அந்நெறிப்படி நின்று போராடிய அப்பா நெல்லை கண்ணன் அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. மக்களின் எண்ணவோட்டத்தைப் பிரதிபலித்த அவரின் பேச்சை வன்முறையைத் தூண்டுவதாக உள்நோக்கம் கற்பிப்பது மடமைத்தனமானது!


சமீபகாலமாக நெல்லை கண்ணன் அவர்களது பாரதிய ஜனதாவின் கொள்கைக்கு எதிரான வலுவான வாதங்களும் பரப்புரைகளும் தான் இந்தக் கைதிற்குக் காரணம். மேடை பேச்சுகளுக்குக் கைதென்றால் பாஜகவின் எந்தத் தலைவரும் வெளியில் இருக்கத் தகுதியற்றவர்கள்.
மாணவர்களை நோக்கி குண்டுகள் வருமென்றும், உயர் நீதிமன்றத்தை இழித்துரைத்த எச்.ராஜா, ஊடகவியலாளர்களைக் கொச்சைப்படுத்திய எஸ்.வி.சேகர், முதல்வரையும், துணை முதல்வரையும் ' ஆண்மையற்றவர்கள் ' என விமர்சித்த குருமூர்த்தி, வருணாசிரமத்தை ஆதரித்துச் சாதிவெறியோடு பேசிய வெங்கடகிருஷ்ணன், சிதம்பரம் நடராஜர் கோயிலில் பக்தரைத் தாக்கிய தீட்சிதர் தர்ஷன் இவர்களையெல்லாம் கைது செய்யத் துணிவற்ற தமிழக அரசு, தமிழுக்காகவே வாழ்வினை அர்ப்பணித்த அப்பா நெல்லை கண்ணன் அவர்களைக் கைது செய்திருப்பது மிகப்பெரும் அநீதி!

கொடுங்கோன்மை! தமிழுக்குத் தொண்டாற்றுவதையே தனது அருந்தவப் பயனென வாழ்ந்து வரும் அப்பா நெல்லை கண்ணன் அவர்களைச் சிறைப்படுத்துவது தமிழுக்கும், தமிழருக்கும் நேர்ந்த பெருத்த அவமானம். எனவே, அவர் மீது புனையப்பட்ட வழக்குகளை ரத்துச் செய்து உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன். இல்லாவிடில், தமிழ்ப்பெருந்தொண்டாற்றிய அப்பா நெல்லை கண்ணன் அவர்களைச் சிலர் திருப்திக்காக உடல் நலம் குன்றியிருக்கும் பொழுது சிறைப்படுத்தியதற்குத் தமிழர்களின் கடும் வன்மத்தையும், வரலாற்றுப் பெரும் பழியைச் சுமக்க நேரிடும் எனத் தமிழக அரசை எச்சரிக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

அவரை கைது செய்தது... தமிழர்களுக்கு அவமானம்: சீமானின் அதிர்ச்சி அறிக்கை - Reviewed by Author on January 04, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.