வடக்கு,கிழக்கு மக்களிடம் பொது வாக்கெடுப்பை நடத்த வேண்டும்: சிறீதரன்MP கோரிக்கை -
தமிழ் மக்களும், சிங்கள மக்களும் இந்த நாட்டில் சேர்ந்து விரும்புகின்றார்களா என்று வடக்கு, கிழக்கு மக்களிடம் ஒரு பொதுசன வாக்கெடுப்பை நடத்த கோட்டாபய அரசு முன்வருமாக இருந்தால் அதனை எதிர்கொள்ள எமது மக்கள் தயாராகவுள்ளார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
இன்று கிளிநொச்சி, பன்னங்கண்டியில் நடைபெற்ற மூத்த விவசாயிகளை கௌரவிக்கும் நிகழ்விலும் தைப்பூச நிகழ்விலும் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
எமது பாரம்பரிய வாழ்வு விவசாயத்தோடும் பின்னிப் பிணைந்துள்ளது. எமது மூதாதையர்கள் இந்தக் காடுகளை வெட்டி களனிகளாக்கி இந்த விவசாயப் பூமியை உருவாக்கிருக்கின்றார்கள்.
இதில் ஒவ்வொருவருடைய வியர்வையும் உழைப்பும் மிகப் பெறுமதியானவை. அந்த வகையில் இன்று இந்த விவசாயிகளை இந்தக் கமக்கார அமைப்பு கௌரவித்திருக்கின்றது.
நாங்கள் நெருக்கடிகளையும், சவால்களையும் சந்தித்தது முதல் தடவையல்ல, தொடர்ந்தும் நாங்கள் இவ்வாறான நெருக்கடிகளையும் எதிர்கொள்ளும் இனமாக வாழ்ந்து வருகின்றோம்.
தற்போதைய அரசாங்கம் பல இலட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்தும், காணாமலாக்கியும் உள்ள இந்த அரசாங்கத்தின் அமைச்சரான கெஹலிய ரம்புக்வெல, பிரபாகரன் ஆயுதத்தால் அடைய முடியாத விடயத்தை பேனாவால் அடைய முனைகின்றார்கள்.
வாக்கு என்ற பலமான ஆயுத்தின் மூலம் எமது இருப்பினை நாங்கள் நிலை நிறுத்திக் கொள்ளவேண்டும். உலக விடுதலைப் போராட்டங்களிலும் ஆயுத்தால் அடைய முடியாததால் வாக்குப்பலத்தால் அடைந்திருக்கின்றார்கள்.
அதுபோல எமது மக்களும் இந்த வாக்குப்பலத்தால் எமது உரிமைகளை வென்றெடுப்பார்கள் என்ற எண்ணத்தில் இந்தக் கருத்தை தெரிவித்திருக்கலாம்.
இந்த கோட்டாபய அரசானது சிங்கள மக்களுடன் தமிழ் மக்கள் இணைந்து வாழவிரும்புகின்றார்களா, இல்லையா என்று வடக்கு, கிழக்குத் தமிழர்கள் இடையே ஒரு சர்வஜன வாக்கெடுப்புக்கு வருவார்களாக இருந்தால் அதனை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கின்றோம்.
எமது மக்களும் அதற்குத் தகுந்த பாடத்தை புகட்டுவார்கள், என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வடக்கு,கிழக்கு மக்களிடம் பொது வாக்கெடுப்பை நடத்த வேண்டும்: சிறீதரன்MP கோரிக்கை -
Reviewed by Author
on
February 09, 2020
Rating:

No comments:
Post a Comment