இலங்கை அரசின் உண்மை முகத்தினை சர்வதேசம் தெரிந்து கொள்ளப்போகிறது: சிறீதரன் -
ஜெனீவா கூட்டத்தொடரில் இலங்கை அரசின் உண்மை முகத்தினை சர்வதேசம் தெரிந்து கொள்ளப்போகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி - கல்மடுவில் நேற்று மாலை இடம்பெற்ற வட்டார இணைப்பாளர்கள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதி நிதிகளுடனான சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
இதுவரை எம்மால் இக்கிராமத்திற்கு பல்வேறு அபிவிருத்திப் பணிகளை செய்திருக்கின்றோம். அபிவிருத்தியை மட்டும் நாம் பார்க்க முடியாது. காணாமல் போனவர்களது பிரச்சினை ,காணிகள் விடுவிப்பு ,அரசியல் கைதிகளின் விடுதலை, நிரந்தரமான அரசியல் தீர்வு என அனைத்து விடயங்களையும் சம நேரத்தில் கையாண்டு வருகின்றோம்.
ஜெனீவா கூட்டத்தொடரில் இலங்கை அரசின் பிரதிநிதிகள் கலந்துகொள்ள உள்ளனர். இக்கூட்டத்தொடரில் இலங்கை அரசின் உண்மை முகத்தினை சர்வதேசம் தெரிந்து கொள்ளப்போகிறது. இலங்கை ஐ.நா தீர்மானத்திருந்து விலகுவதாக அறிவிக்கப்போகிறது.
இலங்கை அரசு காலம் காலமாக தீர்மானங்களில் கைச்சாத்திடுவதும், கிழிப்பதுமாகவே உள்ளது. இக் கூட்டத்தொடரை தொடர்ந்து நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.
காணாமல் போனவர்களை தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு பின்னின்று அரசுக்கு எதிரான அழுத்தத்தினை கொடுப்பதாகவும் ,சவேந்திர சில்வாவிற்கான அமெரிக்க தடை போன்றவற்றை காரணம் காட்டி நாட்டின் அனைத்துப்பகுதிகளும் ஒரு கட்சியாக இறுதிப் பெரும்பான்மையை பெற சிங்கள அரசு பிரச்சாரம் செய்ய ஆரம்பித்துள்ளார்கள்.
ஆனால் வடக்குக் கிழக்கில் அரச முகவர்கள், கட்சிகள், குழுக்கள் என நாற்பது கட்சிகள் போட்டியிட உள்ளன. இவர்கள் அனைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக வசைபாடப் போகின்றார்கள்.
ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொது எதிரியான அரசுக்கு எதிராகவே பிரச்சாரத்தை முன்னெடுக்கப் போகிறது. இத்தேர்தலில் கட்டாயம் இருபது ஆசனங்களை கூட்டமைப்பு பெற்றால் மட்டுமே வலுவான சக்தியாக இருக்க முடியும்.
ஆகவே எதிர்வரும் தேர்தலில் அனைவரும் வீட்டுக்கு வாக்களிக்க வேண்டும், என்றும் தெரிவித்துள்ளார்.
இக்கலந்துரையாடலில் இதுவரை தமிழ் தேசியக் கூட்டமைப்பால் முன்னெடுக்கப்பட்டுள்ள அபிவிருத்திகள் தொடர்பில் ஆராயப்பட்டதுடன், மேலும் செய்யப்பட வேண்டிய அபிவிருத்திகள் தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது.
குறித்த பிரதேசத்தில் மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் மற்றும் அதன் தீர்வுகள் தொடர்பிலும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இலங்கை அரசின் உண்மை முகத்தினை சர்வதேசம் தெரிந்து கொள்ளப்போகிறது: சிறீதரன் -
Reviewed by Author
on
February 25, 2020
Rating:

No comments:
Post a Comment