மசூதியாக மாறும் இஸ்தான்புல்லின் ஹாகியா சோபியா அருங்காட்சியகம்......!!!
இஸ்தான்புல்லின் ஹாகியா சோபியா (Hagia Sophia) அருங்காட்சியகத்தை மீண்டும் மசூதியாக மாற்றுவதற்கு துருக்கி எடுத்த முடிவால் கவலையடைவதாக புனித பாப்பரசர் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கருத்து வெளியிட்டுள்ள அவர், “ஹாகியா சோபியா அருங்காட்சியகம் விடயத்தில் துருக்கியின் முடிவு கவலைக்குரியது. இஸ்தான்புல்லின் சாண்டா சோபியாவைப் பற்றி நினைத்து கவலையடைகின்றேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஹாகியா சோபியா அருங்காட்சியகம் சுமார் ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கிறிஸ்தவ ஆலயமாக கட்டப்பட்டது. எனினும் 1453ஆம் ஆண்டில் ஓட்டோமான் (Ottoman) வெற்றியின் பின்னர் ஒரு மசூதியாக மாறியது. பின்னர், 1934இல் துருக்கிய குடியரசின் ஸ்தாபக தந்தை அடதுர்க்கின் கீழ் ஒரு அருங்காட்சியகமாக மாறியது.
ஆனால், இந்த வார தொடக்கத்தில் துருக்கிய நீதிமன்றம் ஹாகியா சோபியாவின் அருங்காட்சியக நிலையை இரத்துச் செய்தது. அதனை மசூதியாகத் தவிர வேறு எதற்காகவும் பயன்படுத்துவது சட்டப்படி சாத்தியமில்லை என அறிவித்தது. இந்நிலையில் வரும் ஜூலை 24ஆம் திகதி முதல் ஹாகியா சோபியாவில் இஸ்லாமிய தொழுகைகள் இடம்பெறும் என துருக்கி ஜனாதிபதி தயிப் எர்டோகன் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்...

No comments:
Post a Comment