அடுத்தடுத்து தமிழ்த்தேசிய ஆளுமைகள் மறைவு!
======================================
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
ஐயா பெ. மணியரசன் இரங்கல்!
=======================================
ஐயா இரா. பத்மநாபன் மறைவு
------------------------------------------
தமிழின உரிமை மீட்புப் போராட்டங்களில் பங்கெடுத்து வரும் அறிஞர்களும், போராளிகளும் அடுத்தடுத்து சாவது பெரும் துயரமளிக்கிறது. நேற்று (19.09.202) இரவு - தமிழ்த்தேசிய சிந்தனையாளராகவும், களப் போராளியாகவும் விளங்கிய ஐயா இரா. பத்மநாபன் அவர்கள் சென்னை மாதவரத்தில் காலமான செய்தி பேரதிர்ச்சி தருகிறது.
தமிழ்ச் சான்றோர் பேரவை நடத்திய தமிழ்மொழி உரிமை மீட்புப் போராட்டங்களில் பங்கேற்ற போதுதான், ஐயா பத்மநாபன் அவர்கள் எங்களுக்கு அறிமுகமானார்கள். அதன்பிறகு, ஈழ விடுதலை ஆதரவுப் போராட்டக் களங்களில் ஒன்றாகக் கலந்து கொண்டு கைதாவதும், சிறை செல்வதுமாக இருந்தோம்.
ஐயா அவர்கள், தமிழ்நாட்டு அரசுக் கூட்டுறவுத் துறையில் இணைப் பதிவாளராக – ஓர் உயர்நிலை அதிகாரியாக பணியாற்றி, பணி ஓய்வு பெற்றவர். ஆனால், அதன்பின் களப் போராளியாகவே விளங்கினார். ஐயா பழ. நெடுமாறன் அவர்களின் தலைமையில் இயங்கும் உலகத் தமிழர் பேரமைப்பில் பொறுப்பு வகித்தார். நாம் தமிழர் கட்சியின் ஆன்றோர் பேரவையின் செயலாளராக பணியாற்றினார்.
தமிழ்த்தேசியப் பேரியக்கம் நடத்தக்கூடிய போராட்டங்கள், பொதுக்கூட்டங்கள், மாநாடுகள் எங்கு நடந்தாலும் அங்கு வந்து கலந்து கொள்வார். தமிழ்த்தேசியப் பேரியக்கம் எடுக்கும் ஒவ்வொரு போராட்டத்திற்கும் அவர் தாமாகவே அவ்வப்போது நிதி அனுப்பி வைப்பார். தமிழர் கண்ணோட்டம் இதழை விடாமல், உறுப்புக் கட்டணம் செலுத்தி தொடர்ந்து படித்து வந்தார். தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் மீது பேரன்பும், பெருமதிப்பும் கொண்டு நம்மோடு உறவு கொண்டிருந்தார்.
ஐயா அவர்களுடைய இறப்பு தமிழ்த்தேசியத்திற்குப் பேரிழப்பு! ஐயா அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய இல்லத்தார் அனைவருக்கும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன்.
தோழர் சாகுல் அமீது மறைவு
---------------------------------------
நேற்று (19.09.2020) பெரும் துயரச் செய்தியாக – நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான தோழர் சாகுல் அமீது அவர்கள் காலமான அதிர்ச்சி செய்தி வந்தது. தோழர் சாகுல் அமீது அவர்கள், தமிழ்ச் சான்றோர் பேரவையின் தமிழ் மொழி உரிமை மீட்புக் களங்களில் எனக்கு அறிமுகமானார்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் உறுதியான ஆதரவாளர் மட்டுமல்ல, ஒரு போராளி! தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை ஆதரித்தார் என்பதற்காக செயலலிதா ஆட்சியில் “பொடா” சட்டத்தின்கீழ் ஏறத்தாழ 18 மாதங்கள் சிறையிலிருந்தவர்.
தமிழ்த்தேசியப் பேரியக்கத்தோடு மிக நெருக்கமான தோழமை உறவு கொண்டிருந்தார். பா.ச.க.வின் ஆரியத்துவா – இந்துத்துவா வெறியை எதிர்த்திட, இசுலாமிய மக்கள் ஏந்த வேண்டிய தத்துவ ஆயுதம் தமிழ்த்தேசியமே என்பதை தொடர்ந்து பேசி வந்தார்.
தமிழர் இன உரிமைப் போராட்டக் களங்களில் கலந்து கொள்ளும் காரணத்தினால் அவர் நடத்தி வந்த மிகப்பெரிய வணிக நிறுவனம் பாதிக்கப்பட்டது. இருந்தாலும் பின்வாங்காமல், தமிழ்த்தேசியத்தின் – நாம் தமிழர் கட்சியின் களப் போராளியாகச் செயல்பட்டார். தோழர் சாகுல் அமீது அவர்களின் மறைவுக்குத் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது இல்லத்தாருக்கு ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
புதுவை பெ. பராங்குசம் அவர்கள் மறைவு
--------------------------------------------------------
புதுவையில் துடிப்புமிக்க தமிழ்த்தேசியராக செயல்புரிந்து வந்தவர் ஐயா பெ. பராங்குசம் அவர்கள். அவர் ஒரு தொழில் முனைவோராக இருந்தாலும், தமிழ்த்தேசிய அரங்குகளில் தொடர்ந்து பங்கேற்பார்; தமிழ்த்தேசியத்திற்குத் துணை நிற்பார்.
தமிழ் இன உணர்வுப் பாவலர் புதுவை சிவம் அவர்களின் மகளை திருமணம் செய்து கொண்டு, மாமானாரின் இன உணர்வுகளை மங்காமல், மறையாமல் காத்து வந்தவர் ஐயா பராங்குசம்.
தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் புதுவை அமைப்புடன் - அதன் நிர்வாகிகளுடன் பாசத்துடன் பழகி வந்தவர். நம் அமைப்பு புதுவையில் நடத்தும் எல்லாப் போராட்டத்திலும் பங்கேற்றவர். ஐயா புதுவை பெ. பராங்குசம் அவர்களின் மறைவுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். ஐயா அவர்களுடைய இல்லத்தாருக்கு ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அடுத்தடுத்து தமிழ்த்தேசிய ஆளுமைகள் மறைவு!
Reviewed by Author
on
September 20, 2020
Rating:

No comments:
Post a Comment