அண்மைய செய்திகள்

recent
-

2000 ஆண்டுகள் பழைமையான முதுமக்கள் தாழிகள் கண்டெடுப்பு

மதுரை அருகே இரண்டாயிரம் ஆண்டுகள் பழைமைவாய்ந்த முதுமக்கள் தாழிகளை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். கற்கருவிகளும் கண்டெடுக்கப்பட்டிருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை: திருமங்கலம் தாலுகாவில் உள்ள புளியங்குளம் கிராமத்தில் தனியார் நிலத்தில் முட்புதர்கள் அகற்றப்பட்டபோது மிகப் பழைமை வாய்ந்த பானை ஓடுகள் உள்ளதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், மதுரை சரசுவதி நாராயணன் கல்லூரியின் முதுகலை வரலாற்றுத் துறை பேராசிரியரும், பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் ஆய்வாளருமான து. முனீஸ்வரன் அப்பகுதியில் ஆய்வு செய்தார். அங்கே 2000 ஆண்டுகள் பழைமையான முதுமக்கள் தாழிகள், இரும்பு உருக்கு கழிவுகள், எலும்புத் துண்டுகள், சிறிய கற்கருவிகள், கல்வட்டம் ஆகியன கண்டறியப்பட்டன. இது குறித்து தொல்லியல் ஆய்வாளர் து. 

முனீஸ்வரன், "பெருங்கற்காலத்தைச் சேர்ந்த புதைந்த நிலையில் சுமார் 13-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் உடைந்த நிலையிலும் புதைந்த நிலையிலும் உள்ளன. குறிப்பாக இதன் உள்ளே கறுப்பு சிவப்பு நிறத்தில் மெல்லிய தடித்த பானை ஓடுகள், உடைந்த கருவளையம் ஆகியவை உள்ளன.ஒரு முதுமக்கள் தாழி சுமார் 74 செ.மீ. விட்டத்தில் இரண்டு அங்குல தடிமன் கொண்ட நிலையில் புதைந்திருக்கிறது. மற்றொன்று இதைவிடச் சிறியதாக 60 செ.மீ. விட்டத்தில் ஒரு இன்ச் தடிமனிலும் உடைந்த நிலையில் உள்ளது. தாழியின் உடைந்த ஓட்டின் வெளிப்பகுதியில் தாய் தெய்வம் போன்ற குறியீடுகள் காணப்படுகின்றன. குறிப்பாக, இறந்தவர்களுக்கு ஈமச்சடங்கு செய்த பின்னர் அவர்களின் எலும்புகளைச் சேகரித்து அத்தோடு அவர்கள் பயன்படுத்திய பொருள்கள், தானியங்களையும் உள்ளே வைத்து மூடி வீ வடிவ குழியில் வைத்து அடக்கம் செய்துள்ளனர். 

இப்பகுதியில், பெருங்கற்காலத்தைச் சேர்ந்த இடுகாடு சுமார் இரண்டு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள் ளன.இடுகாடான அப்பகுதியிலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் பெருங்கற்கால மக்களின் வாழ்விடமும் காணப்படுகிறது. கல்மேடு கட்டுமான பகுதிகள் சேர்ந்த நிலையிலும் அவர்கள் பயன்படுத்திய மண் பானை ஓடுகள், கறுப்பு சிவப்பு கலந்த ஓடுகள் மேற்பரப்பில் காணப்படுகின்றன.வரலாற்று ஆதாரங்களின் அடிப்படையில் கீழடி ஆதிச்சநல்லூர் சிவகளை அகரம் போன்ற அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருள்களின் அடிப்படையில் தமிழர்களின் கல்வி, நாகரிகம், பண்பாடு அறியப்படுகின்றன.தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மனித இனம் தோன்றி நாகரிக வளர்ச்சியோடு வாழ்ந்ததற்கான சான்றுகள் ஏராளமாக இருக்கின்றன. அதன் ஒரு பகுதியாக புளியங்குளம் பகுதியில் தொல்லியல் எச்சங்கள் ஏராளமாகக் காணப்படுகின்றன" என்றார்.

2000 ஆண்டுகள் பழைமையான முதுமக்கள் தாழிகள் கண்டெடுப்பு Reviewed by Author on September 28, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.