மன்னாரில் பொலிஸ் காவலில் மரணமான இளம் குடும்பஸ்தரின் சடலம் குடும்பத்தாரிடம் கையளிக்கப்பட்டு அடக்கம்
மன்னார் எருக்கலம் பிட்டி பகுதியைச் சேர்ந்த இருவர் கடந்த 1 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு முச்சக்கர வண்டியில் புதுக் குடியிருப்பு பகுதிக்குச் சென்று மீண்டும் எருக்கலம் பிட்டி கிராமத்தை நோக்கி வந்துள்ளனர்.
-இதன் போது எருக்கலம் பிட்டி- புதுக்குடியிருப்பு பிரதான வீதியில் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட மன்னார் பொலிஸார் குறித்த இருவரையும் மறித்து முச்சக்கர வண்டியை சோதனையிட்ட நிலையில் போதைப்பொருள் வைத்திருந்தார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் குறித்த இருவரையும் கைது செய்து மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இந்த நிலையில் குறித்த இருவரையும் மறு நாள் 2 ஆம் திகதி சனிக்கிழமை காலை மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்ட நிலையில் எஸ்.எம்.ரம்ஸான் (வயது-29) என்ற இளம் குடும்பஸ்தருக்கு திடீர் சுகயீனம் ஏற்பட்டுள்ளது.
-உடனடியாக மன்னார் பொலிஸார் குறித்த இளம் குடும்பஸ்தரை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் 2 ஆம் திகதி சனிக்கிழமை காலை அனுமதித்தனர்.இந்த நிலையில் குறித்த நபர் மாவட்ட பொது வைத்தியசாலையில் உயிரிழந்தார்.
குறித்த நபர் மன்னார் பொலிஸ் நிலையத்தில் வைத்து கடுமையாக தாக்கப்பட்ட நிலையில் உயிரிழந்திருக்க முடியும் என உறவினர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
இந்த நிலையில் சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டு பீ.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த உயிரிழந்த இளம் குடும்பஸ்தருக்கு கொரோனா தொற்று இல்லை என தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் நேற்றைய தினம் (4) திங்கட்கிழமை மதியம் குறித்த சடலம் சட்ட வைத்திய அதிகாரியின் (J.M.O) சடலப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், நேற்றைய தினம் திங்கட்கிழமை மாலை சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
பின் நேற்று திங்கட்கிழமை (4) இரவு மன்னார் எருக்கலம்பிட்டில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு பின்னர் முஸ்லிம் மையவாடியில் சடலம் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை மன்னாரில் பொலிஸ் தடுப்புக் காவலில் இருந்த இளைஞன் உயிரிழப்பு தொடர்பாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழு விசாரணையை ஆரம்பித்துள்ளது.
அண்மையில் மன்னார் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட இருவரில், சம்சுதீன் மொகமட் றம்சான் என்பவர், சுகவீனம் காரணமாக மன்னார் வைத்தியசாலையில் அனுமதித்த வேளையில் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகி இருந்தன.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சொந்த பிரேரணை அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வடக்கு பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்துள்ளார்.
கடந்த 1 ஆம் திகதி கைதுடன் தொடர்புடைய விடயங்கள், மன்னார் பொலிஸ் நிலைய தலைமை பொறுப்பதிகாரியிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
அந்த வகையில், பிரேத பரிசோதனை அறிக்கை பெறுவதற்கான வேண்டுகோள் மேற்கொள்ளப்பட்டுள்ளது டன், கைது செய்யப்பட்ட மற்றொரு நபரிடமிருந்து வாக்குமூலம் பெறுவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த முறைப்பாடு 1996 ஆம் ஆண்டு 21 இலக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டத்தின் பிரவு 14 இன் பிரகாரம் ஆணைக்குழுவின் சொந்த பிரேரணையாக பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
மன்னாரில் பொலிஸ் காவலில் மரணமான இளம் குடும்பஸ்தரின் சடலம் குடும்பத்தாரிடம் கையளிக்கப்பட்டு அடக்கம்
Reviewed by Author
on
October 05, 2021
Rating:
Reviewed by Author
on
October 05, 2021
Rating:










No comments:
Post a Comment