மன்னாரில் மாத்திரம் 8000 குடும்பங்கள் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் இருளில்
ஆனாலும் மன்னார் மாவட்டத்தில் சில ஆயிரம் ரூபா மின்சார கட்டணம் செலுத்தாத (16707) பதினாறாயிரத்து எழுனூற்று ஏழுக்கும் அதிகளவான குடும்பங்களின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிள்ளதுடன் அவற்றில் 8151 குடும்பங்கள் தற்போது வரை மீள் மின்சாரம் பெறமுடியாமல் இருளில் வாழ்ந்து வருகின்றனர்
நாட்டில் பொருளாதார நெருக்கடி உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் மின் கட்டணங்களும் சடுதியாக அதிகரித்துள்ளது அதே நேரம் மின் கட்டணத்தை மீண்டும் உயர்த்துவதற்கான அனுமதியை அண்மையில் அமைச்சரவை வழங்கியிருந்த நிலையில் பல தரப்பட்ட எதிர்ப்புகள் மற்றும் போராட்டங்களுக்கு மத்தியில் இம் மாதம் முதல் மின்கட்டணம் 20-70 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சாரசபை அறிவித்துள்ளது
அதே நேரம் மின்கட்டணத்தை உயர்தாவிட்டால் தினமும் 6 மணி நேர மின்வெட்டை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என முன்னதாகவே மின் வலு ஏரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்திருந்தார்
இவ்வாறான பின்னனியில்
மன்னாரில் பழைய முறையிலான மின் கட்டணத்தின் பிரகாரமே மின் கட்டண கொடுப்பனவுகளை செலுத்த முடியாத நிலையில் கடந்த நான்கு வருடங்களில் 16707 குடும்பங்களுக்கான மின் இணைப்பை இலங்கை மின்சாரசபை துண்டித்துள்ளது
இவ்வாறாக துண்டிக்கப்பட்ட 16707 குடும்பங்களில் வெறுமனே 8556 குடும்பங்கள் மாத்திரமே மின்சார கட்டணத்தையும் மீள் இணைப்புக்கான தண்டப்பணத்தையும் செலுத்தி மீண்டும் மின் இணைப்பை பெற்றுள்ளனர்
மிகுதி 8151 குடும்பங்களும் மின் கட்டணத்தையும் செலுத்த முடியாமல் மின்கட்டண மீள் இணைப்பு தண்டப்பணத்தையும் செலுத்த முடியாத நிலையில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் இருளில் வாழ்ந்து வருகின்றனர்
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக வாழ்கை செலவுகளையும் அதே நேரம் பழைய முறையிலான மின்கட்டணத்தைகூட செலுத்த முடியாத நிலையில் மன்னார் மாவட்டத்தில் பல ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்
குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் 22725 சமூர்த்தி நிதி உதவி பெறுகின்ற குடும்பங்களும் 7568 சமூர்த்திக்காக காத்திருக்கும் குடும்பங்களும் இருக்கின்றனர்
இவ்வாறான நிலையில் மின் துண்டிப்பு என்பது இவ் குடும்பங்களை பெரிதும் பாதித்துள்ளதுடன் புதிய கட்டணமுறை இவர்களையும் இவர்களை சார்ந்துள்ளவர்களையும் மிகவும் நெருக்கடிக்குள் தள்ளப்போகின்றது
அத்துடன் பாவனையாளர்கள் மின் கட்டணம் செலுத்த முடியாத நிலையில் மின் துண்டிப்பு இடம் பெறுகின்ற அதே நேரம் குறித்த மின் இணைப்பை மீள் பெறுவதற்கான கட்டணத்தையும் சடுதியாக அதிகரித்துள்ளது இலங்கை மின்சார சபை
அதன் பிரகாரம் மீள் இணைப்புக்கு 2019,2020 ஆண்டுகளில் 1250 ரூபாய் தண்டப்பணமாக அறவிட்ட நிலையில் தற்போது பாவணையாளர்களின் சுமையை மேலும் அதிகரிக்கும் விதமாக 2021,2022 ஆண்டுகளில் மீள் இணைப்புக்கான கட்டணைத்தை 3000 ரூபாயாக அதிகரித்துள்ளது இலங்கை மின்சார சபை
இலங்கை மின்சார சபையிடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஊடாக கோரப்பட்ட தகவலின் பிரகாரம்
2019 ஆண்டு மன்னார் மின்சார சபை எல்லைக்குள் 9673 மின்பாவனையாளர்களின் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டதாகவும்
2020 ஆண்டு 1871 மின்பாவனையாளர்களின் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டதாகவும்
2021 ஆண்டு 1637 மின்பாவனையாளர்களின் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டதாகவும்
2022 ஆண்டு முதல் 10 மாதம் வரையிலான தரவின் பிரகாரம் 3526 மின்பாவனையாளர்களின் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டதாகவும் இலங்கை மின்சாரசபை தகவல் வழங்கியுள்ளது
குறிப்பாக கொரோனா காலப்பகுதி உட்பட்ட பொருளாதர நெருக்கடி நிலையிலும் தொடர்சியாக இலங்கை மின்சார சபையினரால் மின் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கை இடம் பெற்றுள்ளமை குறித்த தரவுகள் மூலம் அறிய முடிகின்றது
இவ்வாறான துண்டிப்புக்களின் பின்னர் 2019 ஆண்டு 1250 ரூபா தண்டப்பணத்துடன் மின்கட்டண நிலுவையையும் செலுத்தி 5943 குடும்பங்கள் மாத்திரமே மீள் இணைப்பை பெற்றுள்ளதாக மின்சாரசபை தெரிவிக்கின்றது
மேலும் 2020 ஆண்டு 1250 ரூபா தண்டப்பணத்துடன் மின்கட்டண நிலுவையையும் செலுத்தி 1070 குடும்பங்கள் மாத்திரமே மீள் இணைப்பை பெற்றுள்ளது
2021 ஆண்டு 3000 ரூபா தண்டப்பணத்துடன் மின்கட்டண நிலுவையை செலுத்தி 371 குடும்பங்களும் 2022 ஆண்டு 1172 குடும்பங்களுமே மீள் இணைப்பு பெற்று கொண்டுள்ளனர்
இவ்வாறான மிக நெருக்கடியான காலப்பகுதியை பயன்படுத்தி இலங்கை மின்சாரசபை மன்னார் மின்பாவனையாளர்களிடம் மீள் இணைப்புக்கான தண்டப்பணமாக மாத்திரம் சுமார் 13,395,250 ரூபா ஒருகோடியே முப்பத்து மூன்றுலட்சத்து தொண்ணூற்று ஐய்யாயிரத்து இருனூற்று ஐம்பது ரூபா வசூலித்துள்ளமை அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது
ஏற்கனவே மின்சார கட்டணங்களையே செலுத்த முடியாத நிலையில் தவித்த பல ஆயிரக்கணக்கான மக்களிடம் தண்டப்பணம் என்ற அடிப்படையில் மேலதிகமாக கட்டணங்கள் இலங்கை மின்சார சபையினால் வசூலிக்கப்பட்டுள்ளமை பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது
அதிலும் குறிப்பாக 2019 ஆண்டு அதிகளவாக 9673 துண்டிப்புக்களை மேற்கொண்டு அதில் 5943 மீள் மின்சார இணைப்பின் ஊடாக 7,428,750 ரூபா (எழுபத்து நான்கு லட்சத்து இருபத்தெட்டாயிரத்து எழுனூற்று ஐம்பது ரூபாவும்) 2022 முதல் பத்துமாதங்களில் மாத்திரம் 3526 மின் துண்டிப்புக்களை மேற்கொண்டு அதில் 1172 மீள் இணைப்புக்களை வழங்கி 3,516,000 ரூபா (முப்பத்தைந்து லட்சத்து பதினாறாயிரம்) ரூபா வருமானமாகவும் இலங்கை மின்சாரசபை பெற்றுள்ளது
இவ்வாறான சூழ்நிலையில் இம்மாதம் மேற்கொள்ளப்படவுள்ள புதிய மின்சாரக் கட்டணத்தின் பிரகாரம் மின்கட்டணங்கள் 20% தொடக்கம் 70% உயர்த்தப்படும் போது 30 யுனிட் மின்சாரத்தைப் பயன்படுத்துபவர்களின் மின்கட்டணம் 1,500 ரூபாவை தாண்டுவதோடு 100 யுனிட் பயன்படுத்துபவர்களின் மின்கட்டணம் 8,000 ரூபாய்க்கு மேல் உயரப்போகிறது.
மன்னார் மாவட்டத்தில் மீள் புதிப்பிக்க கூடிய சக்தி வளங்களான காற்றாலை மின் சக்தி செயற்திட்டத்தின் ஊடாக 2021 ஆண்டு 8 மாதங்களில் 315.33 GWh மின்சாரமும் 2022 ஆம் ஆண்டு 9 மாதங்களில் 306.14 GWh மின்சாரமும் மொத்தமாக 17 மாதங்களில் 621.47 GWh உற்பத்தி செய்யப்பட்டுள்ளது 621.47 GWh என்பது 621470000 unit க்கு சமனானதாகும் இந்த 17 மாத காற்றாலை மின் உற்பத்திக்காக 2,131,979,532 ரூபா செலவு செய்யப்பட்டதன் அடிப்படையில் காற்றாலை மின் செயற்திட்டத்தின் ஊடாக ஒரு மின் அலகை உற்பத்தி செய்ய வெறுமனே 3 ரூபா 43 சதமே செலவாகின்றது அதே நேரம் 2023 ஆண்டு கடந்த இரு வருடங்களை விட அதிகமான அளவு மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்ற நிலையில் இவ்வாறான மின்கட்டண அதிகரிப்பு மன்னார் மாவட்டத்தை மாத்திரம் இல்லாமல் அனைத்து மாவட்ட மின் பாவனையாளர்களையும் பாதித்துள்ளது
தற்போது 01 யுனிட் மின்சாரத்திற்கு மக்களிடமிருந்து 29.14 சதம் அறவிடப்படுகின்றது. ஆனால் 01 யுனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய 56.90 சதம் செலவாகும் போது மொத்த உற்பத்தியின் அடிப்படையில் 423 பில்லியன் ரூபா நஷ்டம் ஏற்படுவதாக இலங்கை மின்சார சபை தெரிவிக்கின்றது.
வெறுமனே மின்சார கட்டணைத்தை உயர்த்தப்போவதாக தெரிவிக்கும் இலங்கை மின்சாரசபை பாவணையாளர்கள் அறியாதவாறு நிலையான விதிப்பு என்ற போர்வையில் 500ரூபா தொடக்கம் 1500 ரூபா வரை மேலதிகமாக பணம் வசூலித்து வருகின்றது
குறிப்பாக இந்த நிலையான விதிப்பனவு என்பது 2021,2022 ஆண்டுகளில் சாதாரண மின்பாவனையாளர்களிடம் அதாவது 100மின் அலகை விட குறைவாக பயன்படுத்துவோரிடம் வெறும் 30-90 ரூபாயாகவே காணப்பட்ட நிலையில் தற்போது மின்பாவனைகளின் பாவனையின் பிரகாரம் 500 தொடக்கம் 1500 வரையில் விதிக்கப்படுகின்றது
இவ்வாறு இலங்கை மின்சாரசபையின் மின்கட்டணம் மற்றும் அதனோடு தொடர்புபட்ட விதிப்பனவுகளின் ஊடாக மின்பாவனையாளர்களின் மின் கட்டண சுமை அன்றாடம் அதிகரித்து வருகின்றது
மின்சார சபை ஒவ்வொரு முறையும் எவ்வளவு தான் மின்கட்டணத்தை உயர்த்தினாலும் அவர்கள் தரப்பில் இருந்து மீண்டும் மீண்டும் நஷ்டம் என்றே கூறுகின்றனர்.
ஆனால் உண்மையில் இவர்களின் நிர்வாகத்தில் பலவீனம் இருக்கிறது.
குறிப்பாக மின்சார சபையின் செலவுகள் அதிகம். மின்சார சபை பொறியியலாளர்கள் போன்ற உயர் பதவியில் உள்ளவர்களுக்கு 8 முதல் 12 இலட்சம் வரை சம்பளம் வழங்கப்படுகிறது. இதற்கு மின்சார சபை நீண்ட காலமாக வரியும் செலுத்துகிறது இவ்வாறான காரணங்களே மின்சாரசபையின் நஸ்ரத்துக்கு காரணம் என மின் கட்டண அதிகரிப்பால் பாதிப்பை எதிர்நோக்கியுள்ள மன்னார் உப்புக்குளம் பகுதியை சேர்ந்த ஆலம் தெரிவிக்கின்றார்
அதே நேரம் கடந்த கால அரசாங்கங்களில் அமைச்சர்களாக செயற்பட்ட 82 அமைச்சர்கள் மின்கட்டணம் செலுத்தாமல் உள்ளதாக அண்மையில் வரவு செலவுதிட்டத்தின் குழு நிலை விவாதத்தின் போது உரையாற்றிய அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்திருந்தார்
அத்துடன் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் வீட்டுக்கான மின்சார கொடுப்பனவு கடந்த 2015 ஆண்டில் இருந்து செலுத்தப்படவில்லை எனவும் அவரின் வீட்டுக்கான மின்சார கட்டண நிலுவையாக 12,056,803.38 உள்ளதாக மின்சார சபை சுட்டிக்காட்டியிருந்தது அதில் 80 இலட்சத்தை அவர் செலுத்தியுள்ளார் ஆனால் மிகுதி பணத்தினை செலுத்தவில்லை என ஊடகங்களும் அண்மையில் செய்திவெளியிட்டிருந்தன.
மின்கட்டண உயர்வு குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பேசினாலும், நாடளுமன்றத்தில் சக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மின்கட்டணம் செலுத்தாமல் இருப்பது குறித்து அவர்கள் பெரும்பாலும் பாராளுமன்றத்தில் பேசுவதில்லை
குறிப்பாக பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்னாண்டோ, ராஜித சேனாரத்ன, ரஞ்சித் சியம்பலாபிட்டிய உள்ளிட்டோரும் மின்சார கட்டணங்கள் செலுத்த தவறியுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தமை கவனிக்கப்படவேண்டியுள்ளது
நாட்டில் பொது மக்களுக்கு ஒரு சட்டமும் அரசியல் வாதிகளுக்கும் அமைச்சர்களுக்கும் ஒரு சட்டம் காணப்படுவது இவ்வாறான விடயங்களை அரசாங்கம் அவ் அப்போது பகிரங்கமாக செய்வதன் ஊடாக தெட்டதெளிவாகி வருகின்றது
லட்சக்கணக்கில் மின்சார கட்டணம் செலுத்தாத அரசில்வாதிகள் நாட்டின் அரியணையில் வாழ்வதுடன் நூறு ரூபா ஆயிரம் ரூபா மின்கட்டணம் செலுத்தாத ஏழைகள் இருளிலும் வாழ்வதே இந்த நாட்டில் இப்போதைய நிலையாக காணப்படுகின்றது 40000 ஆயிரம் மின்பாவனையாளர்களை கொண்ட மன்னார் மாவட்டதிலேயே 16000 குடும்பங்கள் பழைய முறையிலான மின்கட்டணம் செலுத்த முடியாத நிலையில் மின் துண்டிப்புக்கு ஆளகியுள்ள நிலையில் ஏனைய மாவட்டங்களை உற்று நோக்கினால் பல லட்சக்கணக்கான குடும்பங்கள் மின் துண்டிப்புக்கு உள்ளாகியிருக்கலாம் இவ்வாறான நிலையில் புதிய முறையிலான மின்கட்டண விதிப்பை நடுத்தர குடும்பங்கள் உட்பட்ட பின் தங்கிய நிலையில் உள்ள குடும்பங்கள் எவ்வாறு சமாளிக்கப்போகின்றார்கள் என்பதுடன் மின் கட்டண அதிகரிப்பின் காரணமாக ஏற்படப் போகும் மின்சாரம் சார்ந்த உற்பத்திகளுக்கான விலை அதிகரிப்பை எவ்வாறு சமாளிக்க போகின்றார்கள் என்பது பலரின் கேள்வியாகும்
மன்னாரில் மாத்திரம் 8000 குடும்பங்கள் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் இருளில்
Reviewed by Author
on
February 22, 2023
Rating:

No comments:
Post a Comment