சர்வதேச நீர் தினம்(மார்ச் 22) இன்றாகும்
பின்தங்கிய நாடுகளில் பெண்களும் குழந்தைகளும் நீர் தேடி 15கிலோமீற்றர் நடந்து செல்லும் அவல நிலையையும் அண்மையில் ஊடகங்கள் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தன.இவ்வாறு தொடரும் நீர் வேட்கை அத்துடன் அடங்கிவிடுவதாக இல்லை.நீர் வள ஆதாரங்களை முறையாக முகாமைத்துவம் செய்யத் தவறின் நடப்பு நூற்றாண்டின் அரைவாசியின் போது உலகில் மூன்றில் இரண்டு பகுதியினர் கடுமையான நீர்ப்பற்றாக்குறையால்
அவதியுறுவர் என்று யுனெஸ்கோ எச்சரித்துள்ளதுடன் நீரின் தரம் பற்றிய கணிப்புகள் பீதியை ஊட்டுகின்றன என்றும் தெரிவித்திருந்தது.
இன்று உலகில் ஐந்தில் ஒரு பகுதி மக்களுக்கு பாதுகாப்பான குடி நீர் என்பது வெறும் கானல் நீராகவே உள்ளது.
பெரும்பாலான சுகாதாரச் சீர்கேடுகள்,தொற்றுக்களுக்கும் நீர் மாசு பிரதான காரணமாக உள்ளது.
இவ்வாறு நீரின் தூய்மையை பலாத்காரம் செய்வதில் தொழிற்சா லைகளும், சில மனித செயற்பாடுகளும் முக்கிய பங்காற்றுவதுடன் , இயற்கை அனர்த்தங்களான சுனாமி,மண்சரிவு, வெள்ளப்பெருக்கு, நில நடுக்கம் போன்றவையும் நீரை மாசாக்கத் தவறவில்லை.
அந்த வகையில் தொழிற்சாலைக் கழிவுகளால் நீருடன் கலக்கும் இரசம்,குரோமியம்,ஈயம்,கட்மியம் போன்ற பார உலோகங்களும் சயனைட் இரசாயனங்களும் “குடம் பாலுக்குத் துளி விஷம்” போல நீரை நஞ்சாக்கி நிற்கின்றன.
இன்று குடிநீரில் விவசாய இரசாயனங்களும் குடியேறி அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றமை கண்கூடு. பசளைகளிலிருந்து வந்து சேரும் ‘நைத்திரேற்’ அதிகமாய் குடிநீரிற் கலப்பதால் “நீலக்குழந்தை” நோயை அதாவது இரத்தத்தில் ஒட்சிசன் காவப்படுவதில் தடங்கல் ஏற்பட்டு குழந்தை இறக்கும் அபாயங்கள் ஏற்படுகின்றன என உலக சுகாதார நிறுவனம் அறிவித்திருந்தது.
இவ்வாறான காரணிகளின் தாக்கத்தினால் இன்று மருத்துவ உலகிற்கு பாரிய சவாலாகவும் பல உயிர்களை நாளுக்கு நாள் குடித்துவருவதுமாக சிறுநீரக நோய் மாறியுள்ளது.
நீரில் கலக்கும் இரசாயனப் பொருட்கள் ,நீரின் தூய்மை பாதிக்கப்படல் , கல்சியச் செறிவு அதிகரித்தல் போன்ற காரணிகள் சிறுநீரகக் கற்கள் மற்றும் சிறுநீரக செயலிழப்பு என்பவற்றிற்கு பாரியளவில் செல்வாக்குச் செலுத்துகின்றன.
நாம் அன்றாட வாழ்வில் உள்ளெடுக்கும் ஒவ்வொரு துளி நீரும் உடலின் நீர்ச் சமநிலையைப் பேணுவதற்கும் கழிவகற்றல் பொறிமுறைக்கும் அத்தியாவசியமாக உள்ளது.எனவே நாம் அருந்தும் நீரின் தூய்மைத்தன்மை பற்றி மிக மிக அவதானமாக இருப்பதுடன் முடிந்தவரை வடிகட்டிய நீரையே அருந்த வேண்டும் .
திரவத் தங்கம் என வர்ணிக்கப்படும் நீரானது இவ்வாறு அளவிலும் தரத்திலும் வேகமாகக் கீழிறங்கி வருவதால் எதிர்காலத்தில் நன்னீர் என்ற சொல்லே கேள்விக்குறியாக உள்ளமை கவலைக்குரிய விடயமாகும்.
சர்வதேச நீர் தினம்(மார்ச் 22) இன்றாகும்
Reviewed by Author
on
March 22, 2023
Rating:

No comments:
Post a Comment